சுகம் தரும் சித்த மருத்துவம்: தோல் ஒவ்வாமையை போக்கும் ‘கணபதிபத்ரம்’

அருகம்புல்லில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டெரால், ஃபிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ட்ரைடெர்பீனாய்டுகள் ஆகியவை மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளது. 
அருகம்புல்
அருகம்புல்


ஆன்மிகத்தோடு வாழ்வியலை மட்டுமல்ல, மருத்துவத்தையும் கூறினால் பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்த ஏதுவாய் இருக்கும் என்பதற்காகவே, நம் முன்னோர்கள் மருத்துவம் சார்ந்த பலவற்றை ஆங்காங்கே ஆன்மீகத்தில் ஒன்றிணைத்து நமக்கு ஆரோக்கியத்தை விதைத்து விட்டு சென்றுள்ளனர். 

அந்த வகையில் வேப்பிலை தண்ணீர், மஞ்சள் காப்பு இவை நாம் அனைவரும் அறிந்ததே. அறியாத மற்றொரு தகவல், முதற்கடவுள் கணபதிக்கு அணிவிக்கும் அருகம்புல் மாலை. அன்றாட வாழ்வில் எந்த தொந்தரவும் வினைகளும் அண்டாமல் இருக்க கணபதியை வணங்குவதை போல, எந்த உடல் உபாதைகளும் வராமல் தடுக்க அருகம்புல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. அதனால் தான் அருகம்புல் ‘கணபதி பத்ரம்’ என்ற பெயரை பெற்றதாக தெரிகிறது.

சித்த மருத்துவத்தின் தத்துவப்படி வாதம், பித்தம். கபம் இவை மூன்றும் தான் பிணிகளுக்கு அடிப்படை. இவை மூன்றில் ஏற்படும் மாற்றமே நோய்களுக்கான ஆதாரம். வாதமலாது மேனி கெடாது என்ற தேரையர் பிணி அணுகா விதியால் வாதமே (வாயு) நோய்க்கூட்டங்களுக்கு அடிப்படை என்பது நான் அடிக்கடி குறிப்பிடுவது. அதனுடன் சேரும் பித்தமும் (சூடும்), கபமும் ( குளிர்ச்சியும்) பல்வேறு நோய்களை கூட்டம் கூட்டமாக உண்டாக்கும் என்பது தான் சித்த மருத்துவ பெதாலஜி (நோய் வரும் வழி). ஆதலால் தான் துரித உணவு அதிகம் பயன்படுத்துவதினால் பாதிப்படையும் வாதத்தை தன்னிலைக்கு மீண்டும் கொண்டு வர ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து சித்த மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. 

குடல் சுத்தமே பிணி தீர்க்கும் அடிப்படை. அதுசரி, வாதத்தை சரி செய்வது போல், பித்தத்தையும், கபத்தையும் எவ்வாறு சரி செய்வது? ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதை போல் ஒரே மருந்து வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்றையும் சரி செய்யுமா? என்று கேட்பவர்களுக்கு உதவும் சித்த மருத்துவ மூலிகை தான் இந்த அருகம்புல்.

இயற்கை நறுமணமும், பசுமையான தன்மையும் கொண்ட அருகம்புல் பல்வேறு நாடுகளில், பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அருகம்புல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோடங்களையும் போக்கும் என்பதை ‘அருகம்புல் வாத பித்த ஐயமொடு ஈளை சிறுக அறுக்கும்’ என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

“டாக்டர் எனக்கு எந்த மருந்து சாப்பிட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேங்குது, சூடு, குளிர்ச்சி இப்படினு மாறி மாறி வருது, எனக்கு தீர்வே இல்லையா”? என்று வருந்தும் பலரும் அருகம்புல்லை கைகூப்பி பயன்படுத்த மருந்துகளின் வெப்பம் தணியும். மூன்று குற்றமும் தன்னிலை அடைந்து ,உடலும் தன்னிலை அடையும்.

அருகம்புல்லில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டெரால், ஃபிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ட்ரைடெர்பீனாய்டுகள் ஆகியவை மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளது. 

நோய் எதிர்ப்புசக்திக்கு காரணமான வைட்டமின் சி, வைட்டமின் ஏ-க்கு ஆதாரமான கரோட்டின், கொழுப்புகள், பால்மிடிக் அமிலம் போன்ற பிற வேதிப்பொருட்களும் உள்ளன.

மேலும் அருகம்புல்லில் கார்போஹைட்ரேட்டுகள், தாதுஉப்பு சத்துக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், சோடியம் இவை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அருகம்புல்லிற்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையும், ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், சிறுநீரை பெருக்கும் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், ஒவ்வாமையை தடுக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், கிருமிக்கொல்லியாகவும், சிறுநீரகக் கல்லை கரைக்கும் தன்மையும் உள்ளது.

இது மூன்று தோஷங்களையும் (வாதம்,பித்தம்,கபம்) போக்கும் எனினும், பித்த தோஷத்தை போக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரும்கம்புல் ரத்தத்தை தூய்மையாக்கும். அதாவது ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்களை வெளியேற்றும் தன்மையும், ஒவ்வாமைக்கு காரணமான மாஸ்ட் செல்களின் செயலை தடுக்கும் தன்மையும் இருப்பதால் ஒவ்வாமை நோயால் அவதிப்படுபவர்கள் அருகம்புல்லை மிளகுடன் சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர நல்ல பலனை தரும். 

அருகம்புல் சாற்றினை காலை வெறும் வயிற்றில் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள அதிகரித்த பித்தம் தன்னிலைக்கு வரும். தயிரிலோ மோரிலோ சேர்த்து எடுத்துக்கொள்ள பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரை எரிச்சல் நீங்கும்.

சித்த மருத்துவத்தில் தோல் சார்ந்த நோய்களில் பித்தத்தை குறைக்க அருகம்புல் குடிநீர் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்பு. மேலும் அருகம்புல்லை வைத்து செய்யப்படும் சித்த மருந்தான அருகன் தைலத்தை தோல் ஒவ்வாமைக்கு வெளிப்பிரயோகமாக உபயோகப்படுத்த நல்ல பலனை தரும்.

“வெயில் காலம் வந்துருச்சு டாக்டர், வெளிய வரவே பயமா இருக்கு, தோலில் ஒவ்வாமை அதிகம் ஆகிடுமோன்னு கவலையா இருக்கு, ஒவ்வாமைக்கு மாத்திரை சாப்பிட்டால் தூக்கமா வருது, நானும் வருட கணக்கில் மாத்திரை சாப்பிடுறேன்” என்று எண்ணி வருத்தப்பட்டு வீட்டிலே முடங்கி கிடப்பவர்கள், கணபதியை வணங்குவதோடு, கணபதி பத்திரத்தையும் வணங்கி பயன்படுத்த தொடங்கினால் தோலிற்கு சுகம் தரும். 

நோயில்லா வாழ்விற்கும் அடித்தளமிட்டு ஆயுள்காலத்தையும் கூட்ட உதவும் என்பதில் ஐயமில்லை. அருகம்புல் மருத்துவம், சித்த மருத்துவத்தின் எளிமையான மருத்துவம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி, செல்லிடப்பேசி எண். drthillai.mdsiddha@gmail.com - 91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com