சுகம் தரும் சித்த மருத்துவம்: புற்றுநோயில் இருந்து ஆயுள்காலத்தை கூட்ட ‘பித்த மணி’ உதவுமா?

இந்திய நாட்டின் உணவு முறைகளில் மிளகிற்கு தனி இடம் உண்டு. அதுவும் தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்க முறைகளில் மிளகு இல்லாத உணவே இல்லை எனலாம். 
மிளகு
மிளகு

இந்திய நாட்டின் உணவு முறைகளில் மிளகிற்கு தனி இடம் உண்டு. அதுவும் தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்க முறைகளில் மிளகு இல்லாத உணவே இல்லை எனலாம். 

அன்றாடம் உணவாக சேர்த்துக்கொள்ளும் சாம்பார், ரசம், குழம்பு போன்ற அனைத்து உணவிலும் சுவைக்காகவும், மணமூட்டியாகவும், மட்டுமல்லாமல் மருத்துவ குணமூட்டியாகவும் சேர்க்கப்படுவது தான் ‘மிளகு’. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த வெளிநாட்டினர் மயங்கிப் போனது இந்த மிளகில் தான் என்பது அனைவரும் அறிந்ததே. 

‘கருப்பு தங்கம்’ என்று வணிக ரீதியில் தங்கத்திற்கு இணையாக செல்வாக்குள்ள மூலிகையும் இதுதான். இன்றளவும் அதற்கான முக்கியத்துவமும் குறைவில்லை. காரணம் வணிக ரீதியில் மட்டுமில்லாது மருத்துவ ரீதியாகவும் பெரும்பலனளிக்க கூடியது என்பதால். ‘மணமூட்டிகளின் ராஜா’ என்று வருணிக்கப்படும் சித்த மருத்துவ மூலிகை ‘மிளகு’ தான் ‘பித்த மணி’. அதென்ன பித்த மணி? என்று பலருக்கும் தோன்றும். தொடர்ந்து அறிந்து கொள்வோம்.  

வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் ஏற்படும் மாற்றங்களே நோயை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் சொல்கின்றது. இந்த மூன்று தோஷங்களை சம நிலையில் வைப்பதே நோய் இல்லா நெறிக்கான வழி. 

அந்த வகையில் பாதிப்படைந்த பித்த குற்றத்தை தன்னிலைப்படுத்த மிளகு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பித்த நோயால் அவதியுறும் பலரும் மிளகினை அவ்வப்போது பிற மருந்துகளுடனோ, தனியாகவோ எடுத்துக்கொள்ள நற்பயனைத் தரும். இதனால் தான் ‘பித்த மணி’ என்ற பெயர் வந்தது போலும். அல்லது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம் எனும் சித்த மருந்தினை தினசரி எடுத்துக்கொள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சமப்படுத்தி நோய் இல்லாமல் நெடுநாள் வாழலாம். திரிகடுகில் உள்ள சுக்கு வாதத்தையும், மிளகு பித்தத்தையும், திப்பிலி கபத்தையும் போக்க கூடியது இன்னும் சிறப்பு.

மிளகின் மணத்திற்கும், கார சுவைக்கும் அடிமையாகாத நபர்களே இல்லை எனலாம். ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பழமொழி. அந்த அளவுக்கு ஒவ்வாமையை நீக்கும் ஆன்டி-அலர்ஜி தன்மை மிளகிற்கு உள்ளது அனைவரும் அறிந்ததே. 

ஆனால், ‘பத்து மிளகு இருந்தால் ஆயுட் காலத்தையே கூட்டலாம்’ என்பது புதுமொழி. எவ்வாறு ஆயுட் காலத்தை கூட்ட மிளகு உதவும்? சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?

மிளகில் நறுமண எண்ணெய், மாவுச்சத்து, புரதங்கள், சபோனின்கள், அல்கலாய்டுகள், பிளவனாய்டுகள், அமைடு, லிக்னின், பீனால்கள், கார்போஹைட்ரேட், புரதசத்து, நார்ச்சத்தும் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளன. மேலும் பீட்டா கரோட்டின், லாரிக், மிரிஸ்டிக்   மற்றும் பால்மிடிக் அமிலம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை வாய்ந்த வேதிப்பொருள்கள் மிளகில் காணப்படுகின்றன. அதில் மிக முக்கிய உயிரி மூலக்கூறான ‘பைப்பரின்’ அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. 

அதுவும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் விளையும் மிளகில் இந்த பைப்பரின் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் நம் நாட்டு மிளகிற்கு மருத்துவ செய்கையும் அதிகம். பாரம்பரிய மருத்துவமான சீன மருத்துவத்தில் தசை வலி, மூட்டு வலி போன்ற வலி நோய்களுக்கு, இன்ப்ளூயன்சா போன்ற வைரஸ் தொற்று நோயிலும், தொண்டை அழற்சியிலும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பைப்பரின் மூலக்கூறு உலக நாடுகள் பலவற்றுள் பல்வேறு நோய் நிலைகளுக்கான ஆராய்ச்சி பொருளாகவும் உள்ளது. இது வீக்கமுருக்கியாகவும், பாக்டீரியா, பூஞ்சைக் கொல்லியாகவும், பெருங்குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும்,  பல்வேறு நுண்ணுயிர்களுக்கு எதிராகவும், புழுக்கொல்லியாகவும், இயற்கை வலி நிவாரணியாகவும், அதிகரித்த உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்த குழாயில் தட்டணுக்கள் உறைவதை தடுப்பதாக, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாகவும், ஆஸ்துமா நோய்க்கு எதிராக செயல்படக்கூடியதாக  உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக மிளகில் உள்ள பைப்பரின் என்ற வேதிமூலக்கூறு, புற்றுநோயை தடுப்பதாகவும், புற்றுக்கட்டியின் வளர்ச்சியை குறைப்பதாகவும் உள்ளது. 

இது புற்று நோயில் ஆஞ்சியோஜெனிசிஸ் என்னும் புதிய ரத்த குழாய்கள் உருவாகி புற்றுக்கட்டி மென்மேலும் வளருவதை தடுப்பதாக உள்ளது. அபோப்டோசிஸ் எனும் திட்டமிட்ட புற்று செல்களின் இறப்பினை தூண்டுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரி மேம்படுத்தியாக (பயோ என்ஹான்சர்) மிளகு செயல்படுவது இன்னும் சிறப்பு. அதாவது எந்த மருந்துடன் மிளகு சேருகின்றதோ அந்த மருந்தின் செயல்பாட்டு திறனை அதிகப்படுத்துவதாக உள்ளது. பெரும்பாலான சித்த மருந்துகளில் மிளகு சேர்க்கப்படுவது நவீன அறிவியலை மிஞ்சும் சித்தர்களின் மெய்ஞ்ஞானம் இதில் வெளிப்படை. 

சமீப காலங்களில் நவீன மருந்து நிறுவனங்கள் ஆன்டி-பையாட்டிக் மருந்துகளுடன் இந்த பைப்பரின் மூலக்கூறு சேர்த்து சந்தைப்படுத்தப்படுவது சித்த மருத்துவத்திற்கு கிடைக்கும் மறைமுக வெற்றி.

மிளகு கொடியின் காயில் மட்டுமல்ல அதன் இலையிலும் மருத்துவ குணம் உள்ளதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இதன் இலையுடன், நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து கஷாயமிட்டு வீக்கமுள்ள மூட்டுகளில் ஒற்றடமிட வீக்கம் குறையும். அதே நீரைக்கொண்டு ஆவிபிடிக்க மேல்சுவாச பாதை தொற்று, மூக்கடைப்பு, தலைவலி, சைனஸ் பிரச்சனை, தலைபாரம் நீங்கும். சுரம், ஆஸ்துமா இவற்றால் பாதிக்கப்பட்டோர்க்கும் இதை பயன்படுத்த நல்ல பலன் தரும்.

மிளகு

மேற்கு மலைத்தொடர்ச்சியை பிறப்பிடமாக கொண்ட நம் நாட்டு மூலிகை மிளகினை, இன்று பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு பில்லியன் கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காரணம் சுவையும் மணமும் மட்டுமல்ல மருத்துவ செய்கையும் தான். 

உலகில் மிக கொடிய நோயான புற்று நோயால் அவதியுறும் பலரும், புற்றுநோயினை எண்ணி கலங்கி நிற்கும் பலரும் சித்த மருத்துவ மூலிகையான மிளகினை பயன்படுத்த தொடங்கினால் அவர்களின் ஆரோக்கியம் பெருகி ஆயுள்காலம் பெருகும். 

நம் நாட்டு பொக்கிஷமான, நம் பாரம்பர்ய மருத்துவத்திற்கு சொந்தமான மிளகை கொண்டாடும் உலக நாடுகள், பாரம்பரிய மருத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகு விரைவில் தோன்றும். 

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி, செல்லிடப்பேசி எண். drthillai.mdsiddha@gmail.com - 91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com