சுகம் தரும் சித்த மருத்துவம்: சிறுநீரகக் கல்லடைப்பு  சிக்கலை ‘ஸ்டோன் பிரேக்கர்’ மூலிகை போக்குமா?

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகித மக்களுக்கு இந்த சிறுநீரகக்கல் நோய் காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகக்கல்
சிறுநீரகக்கல்

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகித மக்களுக்கு இந்த சிறுநீரகக்கல் நோய் காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த குறிகுணமும் இல்லாமல் கூட பலருக்கு சிறுநீரகக் கல் இருக்கும். சிறுநீரகக் கல் பற்றிய உண்மை, அதன் வலியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிய வரும். அந்த அளவுக்கு தாங்க முடியாத வலி, சிறுநீரக கல்லினால் ஏற்படும்.

‘டாக்டர் நான் ஏற்கனவே பல முறை லித்தோட்ரிப்சி பண்ணிட்டேன், எனக்கு திரும்பத்திரும்ப சிறுநீரகக்கல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படும் நபர்களுக்கும், டாக்டர் ஸ்டோன் வலி வந்துட்டே தான் இருக்கு, தண்ணீர் 3 லிட்டர் குடிங்க, டயட் பாலோவ் பண்ணுங்க என்ற அறிவுரையை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கேன் ஆனாலும் தீர்வே கிடையாதா? என்று சித்த மருத்துவரை அணுகும் பலருக்கும் நிச்சயம் பயன் தரும் எளிய மூலிகை தான் இந்த ‘ஸ்டோன் பிரேக்கர்’ என்ற பெயர் கொண்ட சித்த மருத்துவ மூலிகை ‘கீழாநெல்லி’.

டாக்டர் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே கீழாநெல்லியை நாங்க கல்லீரல் நோய்க்கும், மஞ்சள் காமாலைக்கும் பயன்படுத்தி தானே வருகிறோம் என்று குழம்பி போய் கட்டுரை பக்கத்தை திருப்ப நினைக்கும் பலருக்கும் சொல்ல வேண்டிய உண்மை இது.

கல்லீரல் சார்ந்த நோய் என்றாலே சித்த மருத்துவத்தில் தனி பங்களிப்புண்டு தான். அதுவும் கண் மஞ்சளா இருக்கு, சரியாய் பசி எடுக்கல, சிறுநீர் மஞ்சளா போகுது என்றதும் நம் நாட்டு குடிமகன்கள் முதலில் நாடுவது இந்த கீழாநெல்லியை தான். அந்த அளவுக்கு நம் நாட்டு மக்களுடன், நம் பாரம்பரிய மூலிகையான கீழாநெல்லி பிரிக்க முடியாமல் இரண்டற கலந்துள்ளது. ஏன் நம் நாட்டில் மட்டுமல்ல, இன்னும் பிற பாரம்பர்ய மருத்துவத்திலும் கீழாநெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கீழாநெல்லி

கீழாநெல்லியை அரைத்து வெறும் வயிற்றில் உப்பில்லா மோரில் எடுத்து பார்த்தவர்க்ளுக்கு தெரியும் செயலற்றுப்போன கல்லீரல் எவ்வாறு கணைக்கும் என்று. இவ்வாறு கல்லீரலில் ஏற்படும் காமாலை நோய்க்கு மட்டுமல்ல, ‘ஹெப்படைட்டிஸ்-பி’ எனப்படும் வைரஸ் கிருமியால் ஏற்படும் கல்லீரல் அழற்சிக்கும் நல்ல பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று கீழாநெல்லியை தரம் குறைவாக பார்ப்பதை இந்த ஆய்வு முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்கின்றன.

மலிவாக எண்ணும் பலரும் இந்த கீழாநெல்லி சேர்ந்த மாத்திரைகளை பரிந்துரை செய்வது சித்த மருத்துவத்திற்கு கிடைக்கும் பரிசு. சரி கீழாநெல்லி பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கின்றது? சிறுநீரக கற்களை இது கரைக்குமா? சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுமா? பார்க்கலாம்.

கீழாநெல்லி சாதாரணமாக எங்கும் காணப்படும் சித்த மருத்துவ மூலிகை ஆறு சுவைகளில் நான்கு சுவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உப்பு, காரம் தவிர மற்ற சுவைகளை கொண்டது. இதன் பெயர்க்காரணத்தை அறிய முற்பட்டால்  சிறு நெல்லிக்காய் போன்ற காய்களை இலையின் கீழ் புறமாக கொண்டதால் அப்பெயர் வந்தததாக தெரிகிறது.

பின்னாளில் கீழ்வாய்நெல்லி , கீழ்க்காய் நெல்லி என்பது மருவி கீழாநெல்லி என்றாயிற்று. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே சித்த மருத்துவத்தில் இந்த கீழாநெல்லி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது இதன் சிறப்பு. இது நீரிழிவு, காமாலை போன்ற வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதை "கீழாநெல்லிக் குணந்தான் கேளாய் மதுமேகம் தாழாக் காமாலைகளை சண்ணுந் " எனும் அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

கீழாநெல்லியில் அல்கலாய்டுகள், பிளவனாய்டுகள், பாலிபீனால்கள், லிக்னன்கள், டேனின்கள், ட்ரைடெர்பீன்கள், ஆகிய பல வேதிப்பொருள்கள் உள்ளன. முக்கிய பிளவனாய்டுகளான கேலோகேடசின், ருடின், குர்செடின், கெம்ப்பெரால் ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கீழாநெல்லியில் ‘பில்லாந்தின்’ எனும் கசப்பு பீனோலிக் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

சிறப்பு மிக்க பல வேதிப்பொருட்கள் இதில் இருப்பதனால் பல்வேறு கிருமிகளை கொல்லும் தன்மை உடையதாகவும்,முக்கியமாக பல்வேறு வைரஸ்களை கொல்லும் தன்மை வாய்ந்ததாகவும்,கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது.

கீழாநெல்லியின் இலைப்பகுதியில் உள்ள வேதிப்பொருள்கள் சிறுநீரகக் கல் உருவாக்கத்தின் பல நிலைகளில் தலையிட்டு, படிமங்களின் திரட்டலைக் குறைப்பதாகவும், அவற்றின் கல்லின் அமைப்பு மற்றும் அதில் சேரும் வேதிக்கலவையை மாற்றியமைப்பதாகவும், சிறுநீரகக் குழாய் செல்களுடன் கிரிஸ்டல் படிமங்களின் தொடர்புகளை மாற்றியமைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீர்க்குழாய் தளர்வு, சிறுநீரக கற்களை அகற்ற அல்லது லித்தோட்ரிப்சியைத் தொடர்ந்து காணும் சிறு சிறு கல் துகள்களை அழிக்க உதவுகிறது. தொடர்ந்து 45 நாள்கள் வரை கீழாநெல்லியை எடுத்துக்கொள்ள மேற்சொன்ன நற்பலன்களை தரும்.

சித்த மருத்துவத்தில் பல்வேறு ஆராய்ச்சிக்குள்பட்ட , நீரிழிவு நோயில் நல்ல பலனை தரக்கூடிய மதுமேக சூரணம் எனும் சித்த மருந்தில் கீழாநெல்லி சேருகின்றது. நீரிழிவு நோயில் சர்க்கரை அளவை குறைப்பதோடு ஆன்டி ஆக்ஸிடன்ட் செய்கை உள்ள படியால் நீரிழிவு நோயாளிகளுக்கு பின் விளைவாக ஏற்படும் நியூரோபதி எனும் நரம்பு சார்ந்த நோயிலும், நெப்ரோபதி சிறுநீரகம் சார்ந்த நோயிலும் நல்ல பலன் தரும். இத்தகைய பின் விளைவுகளை வரவொட்டாமல் தடுக்கும் தன்மையும் உடையது.

கீழாநெல்லி தைலம் எனும் சித்த மருந்து பித்தத்தை தன்னிலைப்படுத்தும் தன்மையுடையது, வெய்யில் காலங்களில் வாரம் இருமுறை இதைக்கொண்டு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

ஆகவே, காமாலைக்கு மட்டும் கீழாநெல்லி என்ற முத்திரையிட்ட ஒரே வழக்கு முறையை ஒதுக்கி, சிறுநீரகக் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரகம் சார்ந்த நோய்களை வரவொட்டாமல் தடுக்கவும் கீழாநெல்லி எனும் எளிய சித்த மருத்துவ மூலிகையை பயன்படுத்த நல்ல பலன் கண்டு நெடுநாள் வாழலாம். கீழாநெல்லி கல்லீரலுக்கு மட்டுமல்ல சிறுநீரகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி, செல்லிடப்பேசி எண். drthillai.mdsiddha@gmail.com - 91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com