2 மாதங்களில் 3 முறை ரெப்போ விகிதம் உயர்வு; புதிதாக வீடு வாங்குவோருக்கு பேரிடி

ரெப்போ 50 காசுகள் உயர்த்தியிருப்பதால், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி, இந்த நிதியாண்டில் மேலும் ஒரு உயர்வைக் கண்டுள்ளது.
2 மாதங்களில் 3 முறை ரெப்போ விகிதம் உயர்வு; புதிதாக வீடு வாங்குவோருக்கு பேரிடி
2 மாதங்களில் 3 முறை ரெப்போ விகிதம் உயர்வு; புதிதாக வீடு வாங்குவோருக்கு பேரிடி
Published on
Updated on
2 min read


புது தில்லி: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 0.50 காசுகள் உயர்த்தியிருப்பதால், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி, இந்த நிதியாண்டில் மேலும் ஒரு உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில், தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் வட்டி விகிதம் குறைவாக இருந்தது என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. கரோனா பேரிடருக்குப் பிறகு புதிய வீடுகள் விற்பனை ஓரளவுக்கு சூடுபிடிக்கக் காரணமாக இருந்த சில காரணிகளில் இதுவும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஜ் இன்று அறிவிப்பினை வெளியிட்டார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பானது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் 50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் இது ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், இது பேரிடர் காலத்துக்கு முந்தைய சதவீதம் என்பதும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மிக அதிகமாக வட்டி விகிதம் என்பதும் புள்ளிவிவரங்கள் சொல்லும் தகவல்.

அனராக் குழும நிர்வாகி அனுஜ் புரி இதுபற்றிக் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் 50 காசுகள் உயர்வு என்பது மிகப்பெரிய விஷயம் என்றும், வீட்டுக் கடனுக்கான வட்டி மீண்டும் சிவப்பு மண்டலத்துக்குள் சென்றுவிடும் என்றும் கூறுகிறார்.

இந்த வட்டி விகித உயர்வானது, ஏற்கனவே கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவற்றுடன் இணைந்து பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும். அண்மையில், இவையெல்லாம் சேர்ந்துதான் சொத்துக்களின் மதிப்பை கடுமையாக உயர்த்தியது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டியும், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வும் இணைந்து சொத்து மதிப்பை அதிகரித்து, அது குடியிருப்புகளின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 2022ஆம் ஆண்டு, குடியிருப்புகளின் விற்பனை ஓரளவுக்கு சுமூகமான நிலையில் இருந்தது. எங்களது நிறுவனத்தின் ஆய்வின்படி, கிட்டத்தட்ட 1.85 லட்சம் குடியிருப்புகள் நாட்டின் முக்கியமான 7 நகரங்களில் 2022ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்கிறார்.

நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஷிஷிர் பைஜால் கூறுகையில், வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருக்கும் ரெப்போ வட்டி விகித உயர்வானது, வீட்டுக் கடனுக்கான வட்டியின் மீது உடனடியாக மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.

இந்த வட்டி விகித உயர்வானது தனிநபர்களின் வீடு வழங்கும் திறனை 11% அளவுக்குக் குறைக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கும் திறன் இருந்தால், இந்த வட்டி உயர்வால் அவர் ரூ.89 லட்சம் மதிப்புள்ள வீட்டைத்தான் வாங்க முடியும் என்று தெளிவுபடுத்துகிறார்.

தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகியான அமித் கோயல் கூறுகையில், தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது ஆண்டுக்கு 8% என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் நடுத்தர மற்றும் அதற்குக் கீழ் இருப்பவர்களின் வீடு வழங்கும் எண்ணத்தில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அது நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று கூறுகிறார்.

தற்போது வரை நாம் ஓரளவுக்கு நல்ல நிலையில்தான் இருக்கிறோம். வட்டி விகிதமானது ஒற்றை இலக்கத்தில் இருப்பதால். கரோனா பேரிடருக்குப் பின்பு, வீடு வாங்கும் தேவை அதிகரித்திருப்பதால், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பும் உருவாகியுள்ளது. இதே போல, இந்திய குடியிருப்பு கட்டுமானத் துறையில் தொடர்ந்து தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், குறிப்பாக 6 மிக முக்கிய நகரங்களில் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com