அரசியல் கட்சிகளே உஷார்.. திருந்தவேண்டிய நேரம் வந்துவிட்டதோ?

தேர்தலின்போது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற தேர்வை பயன்படுத்தும் வாய்ப்பான நோட்டாவுக்கு இதுவரை 1.29 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளே உஷார்.. திருந்தவேண்டிய நேரம் வந்துவிட்டதோ?
அரசியல் கட்சிகளே உஷார்.. திருந்தவேண்டிய நேரம் வந்துவிட்டதோ?


புது தில்லி: தேர்தலின்போது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற தேர்வை பயன்படுத்தும் வாய்ப்பான நோட்டாவுக்கு இதுவரை 1.29 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

நோட்டா என்ற வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேற்கண்ட எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை. ஆனால், எனது வாக்கை வேறு யாரேனும் கள்ள ஓட்டுப் போடவும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது நோட்டா.

ஆனால், இந்த நோட்டாவுக்கு இதுவரை விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை நிச்சயம் அரசியல் கட்சியினர் விரைவில் உறக்கம் கலைத்து எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையேக் காட்டுகிறது. அதாவது, நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்பட்ட பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் 1.29 கோடி வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் 1,29,77,627 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நோட்டாவுக்கு தலா 64 லட்சம் வாக்குகள் விழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டுமொத்த வாக்காளர்களில் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நோட்டாவையே தேர்வு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் (தனி) தொகுதியில்தான் அதிகபட்சமாக 51 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகள் தொகுதியில் 100 வாக்குகள் விழுந்தன.

அதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட, பிகாரில் நடந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. 

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குற்றப் பின்னணி கொண்ட மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அபாயம் மிகுந்தவையாக அறிவிக்கப்படும். அதுபோனற் தொகுதிகளில்தான் அதிகபட்சமாக 26 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குப் போடப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரமும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில்தான், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வைத்திருக்கும் ஒரு பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ஒரு தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விடவும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அங்கு எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடாது புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும், அப்போது, ஏற்கனவே போட்டியிட்ட யாரும் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கடிவாளங்களை தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் நிலையில், இனியும் தேர்தலின்போது குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் போது ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதும், வாக்காளர்களின் மன மாற்றங்களையும் கவனத்தில் கொள்வதும் சாலச்சிறந்தது.

நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கு எழுப்பப்படும் அபாய ஒலி என்பதை உணரும் தருணம் இதுவாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com