எ‌ன்​ன‌​வா​கு‌ம் அதி​முக எதி‌ர்​கா​ல‌ம்?

அதிமுகவை வழிநடத்திய இரட்டைத் தலைமையானது அதிகாரப் போட்டியால் தற்போது ஒற்றைத் தலைமையாக மாறியுள்ள நிலையில், அந்தக் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
எ‌ன்​ன‌​வா​கு‌ம் அதி​முக எதி‌ர்​கா​ல‌ம்?

அதிமுகவை வழிநடத்திய இரட்டைத் தலைமையானது அதிகாரப் போட்டியால் தற்போது ஒற்றைத் தலைமையாக மாறியுள்ள நிலையில், அந்தக் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக அவரது மனைவி வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா இடையே எழுந்த அதிகாரப் போட்டி காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்  தேர்தலில் 9.19 சதவீத வாக்குகள் பெற்ற ஜானகி, 22.37 சதவீத வாக்குகள் பெற்ற ஜெயலலிதாவிடம் அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார். இதையடுத்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலரானார் ஜெயலலிதா. இரட்டை இலைச் சின்னம் மீட்கப்பட்டது.

தனக்கு எதிராக அவ்வப்போது நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியபோதும் அதை எதிர்கொண்டு மிகவும் வலிமையான ஒற்றைத் தலைமையாக உச்சம் தொட்டார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது தோழி வி.கே.சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராகத் தேர்வாகி ஒற்றைத் தலைமையாகவே இருந்தார்.

'தர்ம யுத்தம்' நடத்தி பிரிந்து நின்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தன்னுடன் இணைத்துக்கொண்டு ஆட்சி, கட்சி என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வான பிறகு முதல் முறையாக இரட்டைத் தலைமையின் வசமானது அதிமுக. இருப்பினும், சசிகலாவை ஆதரித்த நிர்வாகிகள் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால், இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு கட்சிக்குள் அவருக்கு 90 சதவீத மாவட்டச் செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு தொடர்ந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு சுமார் 10 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு மட்டுமே இருந்தது.

ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமியின் வசம் இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்து வந்த கட்சியின் மூத்த தலைவர்களான சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நகர்ந்துவிட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுமார் 95 சதவீத நிர்வாகிகள் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக 5 சதவீத நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர்.

அதிகாரப் போட்டி: இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே உச்சகட்ட அதிகாரப் போட்டி தொடங்கி நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டும் நிலை ஏற்பட்டது. எனினும், "மீண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற முழக்கத்துடன் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழுவை நடத்தி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் வழக்கம்போல அமைதி காக்காமல் தனது ஆதரவாளர்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் பூட்டை உடைத்து நுழைந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து,  கட்சிக் கொடியை ஏற்றி தனது பலத்தைக் காட்டினார். தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாகவும் தெரிவித்தார்.

யாருக்குச் சாதகம்?: அதிமுகவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது மீண்டும் இரட்டைத் தலைமை சாத்தியம் இல்லை என்பதும், ஒற்றைத் தலைமையே சாத்தியம் என்பதும் தெளிவாகிறது.  அதிமுகவின் எதிர்காலம் தற்போது நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பிடிக்குள் சென்றுவிட்டது.

தற்போது கட்சியின் இடைக்கால பொதுச் செயலராகத் தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுச் செயலர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளார்.  பொதுச் செயலர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தவும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால பொதுச் செயலர்: பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடுபவரை குறைந்தபட்சம் 5 மாவட்டச் செயலர்கள் முன்மொழிய வேண்டும்; 5 மாவட்டச் செயலர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மாவட்டச் செயலர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச் செயலர் பதவிக்கு கட்சியினர் யாரும் போட்டியிட முடியாது. இதன்படி, எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்வது இயலாது எனத் தெரிகிறது. எனவே, அடுத்த பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இருப்பினும், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை பச்சைக்கொடி காண்பித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலர் பதவி செல்லும். ஏனெனில்,  ஒருங்கிணைப்பாளராக ஏற்கெனவே தான் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தேர்வு செல்லாது எனக் கூறி நீதிமன்ற, தேர்தல் ஆணைய வாசல்களில் ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.

"ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது' என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், எத்தனை முறை நீதிமன்ற வாசல்களில் ஏறினாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுதான் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையிலான அதிகாரப் போட்டிக்கு முற்றுப் புள்ளியாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக் குழு இயற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா என்பது முக்கியமான விஷயம். ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே முரண்பாடு எழுந்து தேர்தல் ஆணையத்தை அணுகும் நிலை ஏற்பட்டது. அப்போது மொத்தமுள்ள 14 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் திருநாவுக்கரசருக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநிலங்களவை குறிப்பேட்டில் கூட அதிமுக (ஜெ), அதிமுக (திரு) என பதிவு செய்யப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு, புதுவை, கர்நாடக மாநிலங்களில் மொத்தமிருந்த 8 அதிமுக எம்எல்ஏக்களில் 4 பேர் திருநாவுக்கரசரை ஆதரித்தனர்.

தமிழகத்திலிருந்து தேர்வான 4 அதிமுக எம்எல்ஏக்களில் பி.ஆர்.சுந்தரம், தாமரைக்கனி, கருப்பசாமி ஆகியோர்  ஜெயலலிதாவுடன் இருந்தனர். மேலும், கட்சியின் பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவை திருநாவுக்கரசர் பெற்றிருந்தார். ராஜகண்ணப்பன், சைதை துரைசாமி போன்ற எம்ஜிஆர் கால நிர்வாகிகள்கூட திருநாவுக்கரசருக்கு ஆதரவாக  இருந்தனர்.

முன்னுதாரண தீர்ப்புகள்: ஆனால், தேர்தல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது 1994-இல் தொண்டர்களால் தலைமைப் பதவிக்கு ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதால், போட்டி பொதுக் குழுவால் தேர்வு  செய்யப்பட்ட திருநாவுக்கரசரை அங்கீகரிக்க இயலாது எனக் கூறி இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடியை ஜெயலலிதாவுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. 

அதேபோல, சமாஜவாதி கட்சியில் முலாயம்சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே பிளவு ஏற்பட்டபோது கட்சியில் 90 சதவீத நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக இருந்ததால், அவருக்குச் சாதகமாக தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

தற்போது வரை தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி என இருவருமே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட இரட்டைத் தலைமை எனப் பதிவாகியுள்ளதால், தற்போதைய பொதுக் குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக வியூகம் என்ன?: எம்ஜிஆர் வகுத்த கட்சி விதிகளின்படி அதிமுகவில் பொதுக் குழுவைவிட தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைமைக்கே அதிக அதிகாரம். எனவே, பொதுக் குழுவைவிட தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைமையையே தேர்தல் ஆணையம் ஏற்கும்; இதன்படி கட்சியில் இரட்டைத் தலைமை தொடரும் என்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் அதீத நம்பிக்கை.

ஆனால், பொதுக் குழுவுக்கே அதிக அதிகாரம் இருப்பதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டன. இடைக்கால பொதுச் செயலர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்துவிட்டோம். அடுத்த 4 மாதங்களில் தொண்டர்களின் ஆதரவில் பொதுச் செயலர் பதவியில் எடப்பாடி பழனிசாமியை அமர்த்திவிடுவோம். கட்சியின் பொதுக் குழு முடிவை தேர்தல் ஆணையம் எப்படியும் ஏற்றுக்கொள்ளும் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 ஜெயலலிதா - திருநாவுக்கரசர், முலாயம்சிங் யாதவ்-அகிலேஷ் யாதவ் ஆகிய இரு விவகாரங்களிலும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகள்முன்னுதாரணமாக உள்ள நிலையில், அதிமுக விவகாரத்தில் முடிவு என்ன என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும். இந்த முடிவுதான் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com