மெல்லச் சாகும் அம்பத்தூர் ஏரி!

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான அம்பத்தூரின் மேற்குப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக விரிந்து பரந்து காணப்பட்ட அம்பத்தூர் ஏரி, அதன் 650 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து தற்போது பாதியாக சுருங்கிவிட்டது
மெல்லச் சாகும் அம்பத்தூர் ஏரி!
மெல்லச் சாகும் அம்பத்தூர் ஏரி!


சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான அம்பத்தூரின் மேற்குப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக விரிந்து பரந்து காணப்பட்ட அம்பத்தூர் ஏரி, அதன் 650 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து தற்போது பாதியாக சுருங்கிவிட்டது.

இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் காவலர்களும், இந்த ஏரிக்குள் விடப்படும் கழிவுகள் தடை செய்யப்படாவிட்டால் விரைவில் அம்பத்தூர் ஏர் செத்துவிடும் என்கிறார்கள்.

அப்பகுதியிலிருக்கும் மிகப்பெரிய நீர்நிலையான அம்பத்தூர் ஏரியைச் சுற்றியிருக்கும் 17 ஆயிரம் வீடுகளும், மெட்ரோ குடிநீரையே நம்பியிருக்கின்றன. காரணம், அந்த அளவுக்கு ஏரி மாசடைந்திருக்கிறது.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் குழந்தைகளாக இருந்த போது, இந்த ஏரியில்தான் குளித்து, குதித்து, நீச்சலிடித்து மகிழ்வோம். இந்த ஏரியின் நீர் மிகச் சுத்தமாக இருக்கும். ஏராளமான வெளியூர் பறவைகள் இங்கு வந்து தங்கியிருக்கும். இப்போதெல்லாம் வெறும் குப்பைகளும், கட்டுமான கழிவுகளும்தான் ஏரியை ஆக்ரமித்துள்ளன என்கறிர் அம்பத்தூர் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் பாலசந்திரன்.

கடந்த பல ஆண்டுகளாக, அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஏரிகளை சீரமைக்க பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், குறைந்தபட்சம் ஏரியில் படர்ந்திருக்கும் வெங்காயத்தாமரை போன்ற செடிகள் கூட இதுவரை அகற்றப்படவில்லை என்கிறார்கள் ஏரிக்கு அருகே வசிப்பவர்கள்.

ஏரியை மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது கழிவுநீர் கலப்புதான். இந்த ஏரியைச் சுற்றிலும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு பாதாள சாக்கடை திட்டங்களும் இல்லை. கழிவுநீரை வெளியேற்ற வசதி இல்லாததால் அனைத்தும் இந்த ஏரியை நோக்கியே திரும்புகின்றன. கழிவு நீர் சத்தமில்லாமல் கலக்கின்றன. குப்பைகளைக் கொட்ட இப்பகுதி மக்கள் கொஞ்சமும் தயங்குவதில்லை. திறந்தவெளி குப்பைத் தொட்டியைப் போல நேரடியாக அனைத்துக் குப்பைகளும் இங்கு தங்குதடையின்றி கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஏரியைச் சுற்றியிருக்கும் எம்கேபி நகர், சிவானந்தா நகர், சத்தியபுரம், நேரு நகர் போன்றவற்றிலிருந்து கழிவு நீர் இந்த ஏரியில் தான் கலக்கின்றன. எனவே, இந்த ஏரியைக் காக்க வேண்டுமென்றால், இப்பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் ராமானுஜம்.

மெட்ரோ குடிநீர் வாரியத்திடம் இதுபற்றி கேட்டால், அம்பத்தூர் பகுதியில், குடிநீர் மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. இப்பகுதியிலிருந்துதான் தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அனைத்துத் துறை ஒருங்கிணைப்பும் தேவை. வரும் மழைக்காலத்துக்குள் நீர்நிலைகள் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com