யாரை ஆதரிப்பார் நவீன் பட்நாயக்? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த அணியை ஆதரிக்கப் போகிறது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம்? - அலசல்...
நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த அணியை ஆதரிக்கப் போகிறது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வாக்குகளைவிட சற்றே குறைவான வாக்குகளை வைத்திருக்கிறது ஆளும் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி இன்னமும்  எவ்விதமான முடிவும் அறிவிக்காமல் இருக்கின்றன, ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும்.

மதில் மேல் பூனைகளாக இருக்கும் இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் மாநிலங்களின் முதல்வர்களுமான ஜகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் இருவருமே  அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

பிஜு ஜனதாதளத்தைப் பொருத்தவரை இப்போதும் ஒடிசாவின் வலுவான கட்சியாகவே திகழ்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் நடத்தித் தொடர்ந்து வெற்றிகளையும் பெற்று வருகிறது.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, (2004 முதல்) மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் நிலை சொல்லிக்கொள்ளக் கூடியதாக இல்லை.

அண்மையில் பிரஜாராஜ்நகர் இடைத்தேர்தலில் 61 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களைக் காணாமல்போக்கினார் பிஜு ஜனதா தள வேட்பாளர். இந்த வெற்றியின் மூலம், 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பலம் 113 ஆக உயர்ந்தது.

2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பர்கர்க் மக்களவைத் தொகுதிக்குள்தான் இந்தப் பேரவைத் தொகுதி இருக்கிறது  என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு தொடர்ந்து, மாநிலத்தில் பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் நடத்தி வெற்றியும் பெற்றுக்கொண்டிருக்கும் பிஜு ஜனதா தளம், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் வாய்ப்பு இருக்கிறதா? இவ்வாறு ஆதரித்தால் அதன் தொடர் விளைவுகள் கட்சிக்குப் பயனளிப்பதாக இருக்குமா, பாதகமாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால், கடந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலின்போதுகூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியைத்தான் நவீன் பட்நாயக் ஆதரித்தார்.

2017 குடியசுத் தலைவர் தேர்தலின்போதும், எதிர்க்கட்சிகள் நிறுத்திய மீரா குமாரைத் தவிர்த்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தைத்தான் நவீன் பட்நாயக் ஆதரித்தார்.

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக - மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக அப்போது நவீன் பட்நாயக்  கருத்துத் தெரிவித்திருந்தார்.

வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை - வெற்றி பெற 1.2  சதவிகித வாக்குகள் குறைவாக இருக்கின்ற நிலையில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் 21 உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளத்தின் வசம் 3.22 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. பிஜு ஜனதா தளம் ஆதரித்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யக் கூடிய இடத்தில் இருக்கும் பிஜு ஜனதா தளமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் குடியுரிமை (திருத்த) சட்டம், ஜம்மு-காஷ்மீர் சிறப்புரிமை ரத்து சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியையே ஆதரித்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

மதில்மேல் பூனையாக இருப்பதாகக் கருதினாலும் சிக்கலான தருணங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் ஆதரித்தோ, கலந்துகொள்ளாமல் தவிர்த்தோ தேசிய ஜனநாயகக் கூட்டணியையே பிஜு ஜனதா தளம் ஆதரித்து வந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு அணி ஆகிய இரண்டிடமிருந்தும் சம தொலைவில்தான் இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தேர்தலில்  நிறுத்தப்படும் வேட்பாளர்களைப் பொருத்துத் தங்களுடைய முடிவு இருக்கும் என்றும் ஏற்கெனவே பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

எனினும், மாநிலத்தில்  எதிரெதிராக அரசியல் செய்தபோதிலும் பாரதிய ஜனதாவுக்கும் பிஜு ஜனதா தளத்துக்கும் இடையிலொரு சுமுக உறவும் இருக்கத்தான் செய்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் போன்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடன் நல்ல உறவு வைத்திருந்தாலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தவிர்த்தே  வந்துள்ளார். அதேபோல, பாரதிய ஜனதா கட்சியும் மம்தாவுக்குத் தரும் இம்சைகளை இவருக்குத் தருவதில்லை; நல்ல இடத்திலேயே வைத்துப் பார்த்துக் கொள்கிறது.

ஆனாலும், இந்தத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com