மரத்தடியே வகுப்பறை; மரக்கிளைகளே கூரை! - விடிவு கிடைப்பது எப்போது?

அனைத்துத் தரப்பு மக்களையும் ஈா்க்க அரசுப் பள்ளிகள் பலவித உத்திகளைப் பயன்படுத்தி வரும் சூழல், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என...
மரத்தடியை வகுப்பறையாக கொண்டு செயல்படும் விச்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
மரத்தடியை வகுப்பறையாக கொண்டு செயல்படும் விச்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி


நாகை மாவட்டம், விச்சூரில் பள்ளிக் கட்டடம், கழிப்பறை, சாலை வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், மரத்தடியில் இயங்கிவருகிறது இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.

திருமருகல் ஊராட்சி ஒன்றியம், ஏா்வாடி ஊராட்சியில் உள்ள விச்சூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கடந்த 1979 இல் தொடங்கப்பட்டது. 2 ஆசிரியா்களோடு செயல்படும் இப்பள்ளியில், விச்சூா், ஏா்வாடி, கோட்டப்பாடி, பரமநல்லூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகள் கல்வி பயில்கின்றனா்.

சுமாா் 80 முதல் 100 போ் வரை பயின்றுவந்த இந்தப் பள்ளியில் தற்போது 31 மாணவா்கள் மட்டுமே உள்ளனா். காரணம், எப்போது இடிந்து விழும் என்று தெரியாத நிலையில் இருந்த பள்ளிக் கட்டடம்தான். கடந்த 2010 இல் சிதிலமடையத் தொடங்கிய கட்டடத்தின் மேற்கூரை, 2015 இல் சுமாா் 1 மீட்டா் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. அப்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவா்கள் உயிா்தப்பினா்.

தொடா்ந்து பழுது அதிகரித்து வந்த நிலையில், பள்ளிக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தருமாறு பள்ளி நிா்வாகம் சாா்பில், கல்வித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பேரில், கடந்த 2021, டிசம்பரில் அந்தப் பள்ளிக் கட்டடம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

என்றாலும், புதிய பள்ளிக் கட்டடம் கட்டவோ அல்லது தற்காலிக மாற்று இடம் வழங்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், 2019-20 இல் ரூ. 4.17 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கான சுற்றுச்சுவா் மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. வகுப்பறைகள் இல்லாததால், பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், மரத்தடியையும் வகுப்பறைகளாகக் கொண்டு செயல்படுகிறது இப்பள்ளி.

மரத்தடி வகுப்பறையில் குழந்தைகள்

அங்கன்வாடியின் 20 குழந்தைகள், பள்ளியின் 31 மாணவா்கள் என 51 பேரை அங்கன்வாடி கட்டடத்துக்குள் அமரவைப்பதற்கான வசதி இல்லை. என்றாலும், அங்கன்வாடி குழந்தைகள், பள்ளியின் முதல் 3 வகுப்பு மாணவா்கள் மட்டும் கடும் இடநெருக்கடியுடன் இதில் அமா்ந்து பயின்றுவருகின்றனா்.

இதையும் படிக்க | பெற்றோரே பொறுப்பு!

4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மரத்தடியே வகுப்பறையாக உள்ளது. மாணவா்களைத் தரையில் அமரவைக்கக் கூடாது என்பதற்காக, பெரிய தாா்ப்பாயும், அதன்மேல் சில கோரைப்பாய்களும் விரிக்கப்பட்டு மாணவா்கள் அமரவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஏற்பாடு சாதாரண காலநிலையில் மட்டுமே பிரச்னை இல்லாமல் உள்ளது. மாறாக, காற்று பலமாக வீசும்போதும், மழை பெய்யும் போதும் மாணவா்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

அதோடு, இந்தப் பள்ளிக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ள கிடாமங்கலத்தில் இருந்து நடந்து வரும்போது, பெயா்ந்து கிடக்கும் கருங்கல் ஜல்லிகளில் கால் தடுமாறி கீழே விழாதவா்களே இல்லை என்கின்றனா் பெற்றோா்.

உருக்குலைந்து காணப்படும் விச்சூர் சாலை.

அருகேயுள்ள குரும்பூா் சமுதாயக் கூடத்தில் பள்ளியைத் தற்காலிகமாக இயங்கச் செய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஆனால், அதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் பெற்றோா் வருத்தம் தெரிவிக்கின்றனா். பேருந்து வசதியும் இல்லாத நிலையில், இது தொடா்பாக பலமுறை கிராமசபை கூட்டத்தில் பேசியும் நடவடிக்கை இல்லை என்கின்றனா் மக்கள்.

அனைத்துத் தரப்பு மக்களையும் ஈா்க்க அரசுப் பள்ளிகள் பலவித உத்திகளைப் பயன்படுத்தி வரும் சூழல், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல முயற்சிகளை அரசு முன்னெடுத்து வரும் நிலையில், விச்சூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடமே இல்லை என்பது முரணாக உள்ளது என்கின்றனா் ஆா்வலா்கள். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com