பொன் எழுத்துகளில் முதல் பெண் போா் விமானி

ராணுவத்தில் இணைவது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய நிகழ்வுதான். அதுவும் தந்தை விமானப் படை கர்னலாக இருந்தவர் என்றால் நிச்சயம் அந்த  விருப்பம் ஏற்பட்டிருக்கத்தான் செய்யும்.
முதல் பெண் போா் விமானி எடுத்த கடும் பயிற்சி
முதல் பெண் போா் விமானி எடுத்த கடும் பயிற்சி

புது தில்லி: நாடு முழுவதுமுள்ள பல்வேறு ராணுவ குடியிருப்புகளில் தனது குழந்தைப் பருவம் முதல் இளமைக் காலம் வரை பார்த்துப் பார்த்து வளர்ந்தவர், ராணுவத்தில் இணைவது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய நிகழ்வுதான். அதுவும் தந்தை விமானப் படை கர்னலாக இருந்தவர் என்றால் நிச்சயம் அந்த விருப்பம் ஏற்பட்டிருக்கத்தான் செய்யும்.

அந்த விருப்பம், 26 வயது அபிலாஷா பாரக்கை, இந்திய ராணுவ விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக நியமிக்கப்படும் வரை கொண்டு வந்திருப்பதுதான் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பா் மாதம் ராணுவப் பயிற்சியில் சோ்ந்தாா். இவா், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கா்னல் எஸ். ஓம் சிங்கின் மகள். 

இதுபற்றி அவர் கூறுகிறார்:

ராணுவ குடியிருப்பில்தான் வளர்ந்தேன், எப்போதும் ராணுவ உடை அணிந்தவர்களையே பார்ப்போம். எனவே ராணுவத்தின் மீதான நாட்டம்  இயல்பாகவே எழுந்தது. ஆனால் எனது தந்தை 2011ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின், எங்கள் குடும்பம் அந்த சுற்றுப்புறத்தை விட்டு வெளியேறும் வரை எனக்கு ஏற்பட்ட விருப்பம் வேறுமாதிரியானது என்பதை நான் உணரவேயில்லை. 2013ஆம் ஆண்டு இந்திய ராணுவ அகாதெமியின் ராணுவ அணிவகுப்பில் எனது மூத்த சகோதரர் பங்கேற்றதைப் பார்க்கும்போதுதான் எனக்குள் இருந்த விருப்பத்தின் மீது புரிதல் ஏற்பட்டது. அந்தத் தருணம்தான், என் வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை  உணர்ந்தேன் என்கிறார் கேப்டன் பாரக்.

இந்த நேர்காணல் விடியோவை இந்திய ராணுவம் அண்மையில்  வெளியிட்டிருந்தது.

தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு பொறியியல் முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியில் சேர்ந்தார். தனது விருப்பம் அமெரிக்கப் பணியில் இல்லை என்பதை உணர்ந்து 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவின் மீது இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக காண்டிஜென்ட் கமாண்டராகவும் தேர்வானார்.

ராணுவ வான் பாதுகாப்பு படையின் இளம் அதிகாரிகள் பிரிவுக்கான பயிற்சியில் ஏ கிரேடில் தேர்வானார். ராணுவ பயிற்சியுடன் விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் விமான சட்டங்கள் போன்ற தொழில் ரீதியிலான ஏராளமான ராணுவ பயிற்சிகளிலும் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றவர்.

ராணுவ வான் பாதுகாப்புப் படையில் இணைய 15 பெண் ராணுவ அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருந்தபோதும், அதற்கான தேர்வில் இரண்டு பெண் அதிகாரிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், அபிலாஷா, பைலட் ஆப்டிடியூட் பேட்டரி செலக்ஷன் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பயிற்சியை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பெண் அதிகாரிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று முதல்முறையாக நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் ஹெலிகாப்டர் விமானி பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை வான் பாதுகாப்புப் படையில், பெண் அதிகாரிகளுக்கு விமானி பொறுப்பு வழங்கப்பட்டதில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் தரைப் பகுதியிலான பணிகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு முன்னதாக, 2018ஆம் ஆண்டு, பெண் அதிகாரி அவானி சதுர்வேதிதான், இந்திய விமானப் படையின் ஜெட் விமானத்தின் முதல் இந்திய பெண் விமானியாக நியமிக்கப்பட்டார். தற்போது, ராணுவ வான் பாதுகாப்புப் படையிலும் முதல் பெண் விமானி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது.

இது பற்றி அபிலாஷா கூறுகையில், சென்னையில் 2018 ஆம் ஆண்டு  ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியை நிறைவு செய்த பிறகு, ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவே என் தேர்வாக இருந்தது. அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோதும்கூட, எனக்கு நன்கு தெரியும், நான் வெறும் தரைப் பகுதியிலான பணிகளுக்கு மட்டுமே தகுதி பெற்றவர் என்று, ஆனால், விண்ணப்பத்தை நிறைவு செய்யும்போது, நான் பைலட் ஆப்டிடியூட் பேட்டரி டெஸ்ட் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட விமானி தகுதிக்கு தேர்வாகியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது எனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், இந்திய ராணுவம், பெண்களை போர் விமானிகளாக சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைத்திருந்தேன் என்கிறார் பெருமிதத்துடன்.

இந்திய ராணுவத்தில் பெண் விமானிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதும் கேப்டன் பாரக்குக்கு வாசல் திறந்தது. இன்று இந்தியாவின் போா் விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளாா்.

இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் படையின் முதல் பெண் போா் விமானி அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ராணுவ அமைச்சகத்தின் தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாள், இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் படையின் வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ராணுவ வான் பாதுகாப்புப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பாரக் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து இன்று பொறுப்பேற்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் ராயல் விமானப் படை, இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவை 1942ஆம் ஆண்டு தொடங்கியது. முதல் போர் விமானம் 1947 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது. இந்திய ராணுவத்துக்கென சிறப்பு வான் பாதுகாப்புப் படை 1986ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் இதுவரை போர் விமானியாக பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. முதல் முறையாக, 2022ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி, ராணுவ வான் பாதுகாப்புப் படையின் முதல் போர் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார் அபிலாஷா பாரக். 

ராணுவ வான் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பறக்கும் இறக்கைகள் பதக்கத்தை அபிலாஷா பாரக்குக்கு ராணுவ வான் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சூரி அணிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com