சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேல

சிரிப்பு.. பலரும் மறந்தே போனதொரு உணர்வு. நமக்கு சிரிக்க வரும் என்று தெரியாமலேயே பலரும் இந்தக் காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம்.
சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேல
சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேல


சிரிப்பு.. பலரும் மறந்தே போனதொரு உணர்வு. நமக்கு சிரிக்க வரும் என்று தெரியாமலேயே பலரும் இந்தக் காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் எதிரில் தெரிந்தவர்கள் யாராவது வரும் போது லேசான புன்னகையை உதிர்ப்போம். கரோனா காலத்துக்குப் பிறகு, முகக்கவசத்துடன் எதிரே வருபவர் யார் என்று தெரியாமலும், நாம் சிரிக்கிறோமா இல்லையா என்பது தெரியாததால் அதைவேறு ஏன் வீணாக்க வேண்டும் என சிரிப்பின் சின்ன சகோதரியான புன்னகையைக் கூட நாம் தேவையே இல்லை என்று பயன்படுத்திய  தூக்கி எறியும் முகக்கவசத்தைப் போல எறிந்தேவிட்டோம்.

வாய் விரிட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், அந்த சிரிப்பையே விட்டுவிட்டு நோயை மட்டும் நாமே வைத்துக் கொண்டுள்ளோம்.

சரிங்க. வாய் விட்டு சிரித்தால் எப்படிங்க நோய் விட்டுப் போகும் என்று கேட்பவர்களுக்காக..

சிரிப்பது என்றால், வெறும் ஹா ஹா என்று வாட்ஸ் ஆப்பில் ஸ்மைலி போடும் விஷயம் இல்லைங்க.. கண்ணீர் வரும் அளவுக்கு அல்லது வாய் வலிக்கும் அளவுக்கு அல்லது வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பது. அப்படி நீங்கள் சிரித்து எத்தனை நாள் ஆகிறது என்று முதலில் யோசியுங்கள். (நாள்களா? அல்லது ஆண்டுகளா?)

நினைவில் வரவில்லையா? சரி அப்படி சிரிக்கக் காரணமாக இருந்தவை என்ன, எதை இழந்தோம் என்றாவது சிந்தியுங்கள். பிறகு அதை தேடுங்கள். தேடிக் கிடைத்தால் மீண்டும் சிரியுங்கள். அப்போது உங்கள் உடலுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று இப்போது சொல்கிறோம்.

முதலில் வேறு மருந்தே இல்லாத ஒரு நோய் குணமாகும். அதுதான் மன அழுத்தம். அதிலிருந்து விடுபடலாம். ரத்தக் கொதிப்பு குறையும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து, நோய் வராமல் காக்கும். வந்தாலும் எதிர்க்கும்.

நன்கு சிரிக்கும் போது உடலின் தசைகள் தளர்வடைகின்றன. அதுமட்டுமில்லையாம் உடலின் நரம்புகள், கடுமையான பணி மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தளர்வடைந்து உடலின் வலிகளைக் குறைக்குமாம்.

நமது மனதில் எப்போதும் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை சிரிப்பு போக்குகிறதாம். கோபம், அழுகை, கவலை போன்ற நம்முடன் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் தீய சக்திகளை அடியோடு ஓட்டிவிடுமாம். உடலுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்குமாம். பிறகு என்ன நாம் புது மனிதர்களைப் போல உணர்வோம்.

நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் செல்கள் அதிகரிக்கின்றன. இதனால் ஒட்டடைபடிந்துபோன நமது உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது. அது உடலை வெள்ளையடித்தது போல மாற்றிவிடும்.

சிரிக்கும் போது நமது உடலுக்குத் தேவையான நல்ல சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்து, உடலின் சமநிலையை காக்குமாம். ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதுதான் மிக முக்கியப் பணியே. இதனால் என்ன நடக்கும் என்றால், மாரடைப்பு வராது, இதர ரத்த நாள நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

அடடா...

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் எப்போதும் உம்மென்று இருக்காமல் நன்கு சிரித்தபடி இருக்கலாமாம். இது உடலில் உள்ள கூடுதல் கலோரியைக் குறைக்க உதவும். இதனால் அனைவரும் விரும்பும் சீரான உடல் எடை கிடைக்கும் என்கிறது சிரிப்பைப் பற்றிய ஆய்வுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com