சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆமணக்கு எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தா? 

குடலில் சேரும் வாயு தான் இந்த வாதத்திற்கு அடிப்படை. இதனை சீரான முறையில் பாராமரிப்பதே நோய்களை தடுக்கும் வழிவகை.
சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆமணக்கு எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தா? 

பிணிகளுக்கு முதன்மைக் காரணம் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் ஏற்படும் மாற்றங்களே என்கிறது சித்த மருத்துவம். ‘வாதமலாது மேனி கெடாது’ என்பது அடிக்கடி நான் குறிப்பிடும் ஒன்று. சரிங்க டாக்டர், வாதம் என்பது என்ன?  இது தான் பலரின் கேள்வியாக இருக்கக் கூடும். 

குடலில் சேரும் வாயு தான் இந்த வாதத்திற்கு அடிப்படை. இதனை சீரான முறையில் பாராமரிப்பதே நோய்களை தடுக்கும் வழிவகை. சீர்கேடான வாதமானது பித்தம், கபம் இவற்றுடன் கூடி பல்வேறு நோய்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அப்படி பார்த்தால் இதனை சீர்செய்தாலே போதும் நோய்களை தடுக்கலாமா? என்று தோன்றும். அப்படி எனில் எவ்வாறு சீர் செய்வது?  

‘கோலான் கிளென்சிங்’ எனும் குடலை சுத்தம் செய்யும் முறை இன்றளவும் பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. குடலை சுத்தம் செய்தலே பல நோய்களையும் வரவிடாமல் தடுக்கும் மதில்சுவர் என்பது நவீன அறிவியலும் ஏற்றுக்கொள்ளும் கருத்து. அத்தகைய கருத்தையே சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தி உள்ளது. 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடையே இருந்து வந்துள்ளது. இதுவே அவர்களின் ஆரோக்கியமான வாழ்வியல் நெறிமுறைக்கு அடிப்படையாகவும் இருந்துள்ளது.

இன்றைய தலைமுறையினருக்கு மலம் கழிப்பது என்பதே பெரும்சிக்கலாக உள்ளது. ‘அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்று வள்ளுவன் வாக்கை வெறும் வாக்கியமாக மட்டுமே படிக்கும் இன்றைய தலைமுறைக்கு ஆரோக்கியம் எப்படி கைக்கு எட்டும். ஆக மலச்சிக்கல் நீங்கினால் தான் குடலில் உள்ள வாயுக்கள் வெளியேறும். குடல் வாயுக்கள் நீங்குவது தான் வாதம் சீராக வைத்துக்கொள்ள வழிவகை. அந்த மலச்சிக்கலை நீக்கி வாதத்தை சீராக்கும் எளிய சித்த மருத்துவ மூலிகை மருந்து தான் ‘ஆமணக்கு எண்ணெய்’.

பழங்காலம் முதல் மலச்சிக்கலுக்கு வீட்டு வைத்தியமாய் பயன்படுத்தப்பட்டு வந்தது தான் ஆமணக்கு எண்ணெய். நம் நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பல்வேறு நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் அதில் வேறுபாடு உண்டு. 

ஆமணக்கு எண்ணையை அவர்கள் வெறும் மலச்சிக்கலை தீர்க்கும் வீட்டு வைத்தியமாய் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அதெப்படி ஆமணக்கு எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தாகும்? என்று பலருக்கும் ஐயப்பாடு ஏற்படும்.

நம் உடல் இயக்கத்தையும், எலும்பு மூட்டு மண்டலம், நரம்பு மண்டலம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணம் இந்த வாதம் தான். உடல் முழுதும் உள்ள மூட்டுகளில் வாதம் சேரும் போது மூட்டு வாத நோய்களையும், நரம்புகளை தாக்கும் போது நரம்பு சார்ந்த நோய்களையும், பாதிக்கும் இடங்களை பொறுத்து பல்வேறு நோய்நிலைகளையும் உண்டாக்கும், நோய்களுக்கும் அடிப்படை காரணமாகும்.

ஆமணக்கு எண்ணெய் பேதியை உண்டாக்கி வாத நோய்களை வரவிடாமல் தடுக்கும் என்பதை ‘வாதத் தொடக்கை வரவொட்டாமற் படிக்கும்’ என்ற தேரன் வெண்பா பாடல் வரிகளைக் கொண்டு அறியலாம். இது மலத்தை இளக்குவதோடு குடல் வறட்சியை போக்கும். குடல் வறட்சியை போக்குவதால் தோலின் வறட்சியையும் நீக்கும் தன்மையுடையது. இதனால் பெரும்பாலான தோல் வியாதி மருந்துகளில், பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது. 

பாட்டி வைத்தியமாய் நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்த உண்மையே. இதனை ‘ஆமணக்கு நெய்யால் நலமுண்டாம் யாவர்க்கும்’ என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம்.

பல்வேறு வலி நோய்களை உண்டாக்கும் வாதத்தை சீர் செய்யும் மெருகுள்ளி தைலம், மூல நோயில் நல்ல நிவாரணம் தரும் மூலக்குடோரி தைலம் போன்ற பல மருந்துகளில் ஆமணக்கு எண்ணெய் வெறும் எண்ணெயாக மட்டுமில்லாமல் மருத்துவ தன்மைக்காக சேர்க்கப்படுவது சித்த மருத்துவத்தின் சிறப்பு. 

ஆமணக்கு எண்ணெய் ரிஸினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம், ஒலீயிக் அமிலம், ஸ்டியரிக் அமிலம், லினோலியிக் அமிலம் ஆகிய வேதிப்பொருள்களின் கலவையாக உள்ளது. குடலில் இதில் உள்ள வேதிப்பொருள்கள் வேறு தன்மையுடையதாக மாற்றப்படுவதால் குடலில் அரிப்பினை ஏற்படுத்தும் என்கிறது நவீன அறிவியல். இதனை முன்பே கணித்திருந்த நம் முன்னோர்கள் இளநீரில் ஆமணக்கு எண்ணெய்யை காய்ச்சி எடுத்து பயன்படுத்தி வந்தது அறிவியலை விஞ்சும் ஆச்சர்யம். 

இது பண்டைய எகிப்தில் இருந்தே பிரசவத்தை தூண்டுதலுக்காக பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அதே போல் ஆமணக்கு விதையில் உள்ள நஞ்சுத்தன்மை வாய்ந்த ‘ரிஸின்’ என்ற வேதிப்பொருள் ஆமணக்கு எண்ணெயில் இல்லை. ஆகையால் பாதுகாப்பானதாக இதனைப் பயன்படுத்தலாம்.

ஆமணக்கு

மேலும், ஆமணக்கு எண்ணெய் வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், உடல் எடையை குறைக்கவும் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பிரசவ காலத்தின் இறுதி மாதங்களில் கருப்பையை சுருக்கி சுகப்பிரசவத்தை உண்டாக்க ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. 

நம் சித்த மருத்துவத்திலும் சுகப்பிரசவத்தை உண்டாக்கும் மருந்துகளில் ஆமணக்கு எண்ணெய் சேரக்கூடிய ‘பாவன பஞ்சாங்குலத் தைலம்’ பயன்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பு. எண்ணெய் குளியல் எடுக்கவும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தலாம். கை கால் எரிச்சல், மூல நோயில் உண்டாகும் ஆசன வாயில் எரிச்சல், கடுப்பு இவற்றிற்கும் இதனை வெளிபிரயோகமாக பயன்படுத்தக் குறிகுணத்தைக் குறைக்கும்.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆமணக்கு எண்ணையை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்ல பயனளிக்கும். இது உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் என்கிறது சித்த மருத்துவம்.  ‘கோலான் கிளென்சிங்’ என்ற முறையில் குடல் சுத்தியை ஏற்படுத்த அவ்வப்போது இரவு வேளையில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள நற்பயன் தரும். இது மூட்டு வாதம், இடுப்பு வாதம், முதுகெலும்பு வாதம் போன்றவற்றை வராமல் தடுக்கும் என்பது வருமுன் காக்கும் முறைமை.

வாதமோடு சேர்ந்த பித்தத்தை சமப்படுத்த ஆமணக்கு எண்ணெய்யை பாலில் கலந்தும் இரவு வேளையில் எடுத்துக்கொள்ளலாம். பெரியவர்கள் 2 முதல் 3 தேக்கரண்டி வரை இதனைப் பயன்படுத்த வாதம் தணியும்.

இவ்வாறு நோய்க்கு ஏற்றாற் போல ஆமணக்கு எண்ணெய்யை உணவாக மட்டுமல்லாது மருந்தாக பயன்படுத்த நாள்பட்ட நோய்களை வரவிடாமல் தடுக்கவும் முடியும். நோய்நிலையைக் குறைக்கவும் முடியும். மென்மேலும் ஆரோக்கியத்தைக் கூட்ட முடியும்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com