இளம் வயது திருமணங்களா..? தீட்சிதர்களுக்குப் புது நெருக்கடி!

சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தில்லைவாழ் அந்தணர்களாகிய பொது தீட்சிதர்கள் மீது தொடுக்கப்படும் இளம்வயது திருமணங்கள் தொடர்பான வழக்குகளால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இளம் வயது திருமணங்களா..? தீட்சிதர்களுக்குப் புது நெருக்கடி!


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தில்லைவாழ் அந்தணர்களாகிய பொது தீட்சிதர்கள் மீது தொடுக்கப்படும் இளம்வயது திருமணங்கள் தொடர்பான வழக்குகளால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் தில்லைவாழ் அந்தணர்களாகிய பொது தீட்சிதர்கள் தொன்றுதொட்டு நடராஜருக்கு பூஜை செய்து வருகின்றனர். 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதன், நடராஜர் கோயிலுக்கு செயல் அலுவலரை நியமனம் செய்தார். இதுதொடர்பான வழக்கில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரை நியமித்தது செல்லும் என 2.2.2009 இல் நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். அதனடிப்படையில், துணை ஆணையர் திருமகள் கோயில் நிர்வாகத்தை ஏற்றார். கோயிலில் 5}க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன.

பின்னர், பொது தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், 6.1.2014 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கோயில் செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்தும், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் என்பதால், அவர்கள் நிர்வாகத்தில் சட்டப் பிரிவு 26}இன்படி இந்து சமய அறநிலையத் துறை தலையிடக் கூடாது என்றும், தீட்சிதர்களே கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், உண்டியல் தொகையை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது. அதன் பிறகு, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, உண்டியல் தொகையை தீட்சிதர்களிடம்  ஒப்படைத்தது.

அறநிலையத் துறை ஆய்வு: இந்த நிலையில், நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கோயில் கணக்குகளை சரிபார்ப்பதற்காகச் சென்றனர். இதற்கு தீட்சிதர்கள், நடராஜர் கோயில் தனி நபர் பிரிவுக்குச் சொந்தமானது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணக்குகளைக் காண்பிக்க வேண்டியது இல்லை எனத் தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நகைகளைச் சரிபார்ப்பதற்காக மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, தீட்சிதர்கள் சம்மதம் தெரிவித்து, நகைகளைச் சரிபார்ப்பதற்கு ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து, நகைகள் தொடர்பாக தீட்சிதர்கள் வைத்திருந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சி.ஜோதி தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம் மற்றும் 3 நகை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் குழுவினரும், தீட்சிதர்கள் சார்பில் நகை மதிப்பீட்டாளர் ஒருவரும், காணொலி பதிவு செய்பவரும் 19 தினங்களாக, நான்கு கட்டங்களாக நகைகளைச் சரிபார்த்தனர். கடந்த 2005-ஆம் ஆண்டு வரையிலான நகைகள் ஏற்கெனவே சரிபார்ப்பு செய்யப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 2005-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான நகைகள் சரிபார்க்கப்பட்டன.

இதுகுறித்து கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகரன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைக்கு கணக்கு காட்டவோ, நகைகள் சரிபார்ப்புக்கு ஒத்துழைக்கவோ அவசியம் ஏதும் கிடையாது. இருந்தபோதிலும், எங்களது வெளிப்படைத் தன்மையை நிரூபிப்பதற்காகவும், நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும் நகைகள் சரிபார்ப்புக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம்.

இனி வரும் காலங்களில் எங்கள் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில், நாங்கள் ஒரு தணிக்கையாளர் மூலம், மதிப்பீட்டாளர்களை வைத்து கோயில் நகைகளைச் சரிபார்த்து, கணக்குகளை பொதுவெளியில் வெளியிடப்போகிறோம். ஆனால், பாதுகாப்புக் கருதி நகைகள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிட முடியாது.

கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை 2005 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான நகைகளை ஆய்வு செய்ததில், எந்த ஒரு தவறும் கண்டறிய முடியவில்லை என்பதால், தேவையில்லாமல் மீண்டும் 1956}ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையிலான நகைகள் சரிபார்க்கப்படும் எனத் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இது, பொது தீட்சிதர்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவதைக் காட்டுகிறது என்றார்.

இளம்வயது திருமணம்: இதற்கிடையில், இந்து சமய அறநிலையத் துறை, தீட்சிதர்களின் இளம்வயது திருமணம் தொடர்பான வழக்குகளை எடுத்துக் கொண்டு, தற்போது காவல் துறை மூலம் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இளம்வயது திருமணத்துக்கும், கோயில் பொது தீட்சிதர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்றும், கோயில் பொது தீட்சிதர்கள் எந்தக் காலத்திலும் இளம்வயது திருமணம் செய்யுங்கள் என்று சொன்னதுமில்லை, கட்டாயப்படுத்தியதுமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1898-ஆம் ஆண்டு கோயில் சட்டப்படி, திருமணமானவர்களாக இருந்தால்கூட, 25 வயது நிரம்பியவர்கள்தான் சந்திரமௌலி பூஜையை செய்ய முடியும். 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் பூஜை செய்ய வேண்டும் என்று நீதிபதி முத்துசாமி ஐயர் தீர்ப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்தால்தான் பூஜை செய்ய முடியும் எனவும், அதன் காரணமாக தீட்சிதர்கள் இளம்வயது திருமணம் செய்கிறார்கள் எனவும் கூறுவது செவிவழிச் செய்தியாகும் என்று தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிர்வாகி மு.செங்குட்டுவன் கூறியதாவது:
இளம்வயது திருமணம் குறித்து தீட்சிதர்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு முகாம் நடத்தியிருக்க வேண்டும். அது சட்டப்படி தவறு என்றால், வழக்குப் பதிவு செய்து, முன்ஜாமீன் பெற வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். திடீரென்று கைது நடவடிக்கை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. பிணை பற்றிய சட்ட வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை. தேவைப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com