மூன்று முறை இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத்

பல்வேறு காலகட்டங்களில் மூன்று முறை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
மூன்று முறை இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத்
மூன்று முறை இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத்


புது தில்லி: பல்வேறு காலகட்டங்களில் மூன்று முறை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

அதில் கடந்த 1961ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவி வகித்த போது இந்தியாவுக்கு வருகை தந்த ராணி இரண்டாம் எலிசபெத், தில்லியில் உள்ள ராம்லீலா அரங்கில், கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றினார். 

அது மட்டுமல்ல, தில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடத்தையும் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு வந்திருந்தபோது முறைப்படி திறந்துவைத்தார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். 

கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். 

பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் அரச பதவியை வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். அவரது கணவர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். 

ராணி இரண்டாம் எலிசபெத்தின் தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் 1911ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தனர். அதற்கு சரியாக 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ராணியாக பட்டத்துக்கு வந்த ராணி இரண்டாம் எலிசபெத் 1961ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். இளவரசர் பிலிப்புடன் இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத், மும்பை, சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த அரச தம்பதி தாஜ் மகாலையும் பார்வையிட்டனர்.

ராமலீலா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இரு நாட்டுக் கொடிகளையும் பிடித்தபடி இந்திய மக்கள் ராணிக்கு வரவேற்பு அளித்தனர்.

பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் 1983 மற்றும் 1997ஆம் ஆண்டுகளிலும் இந்தியாவுக்கு வருகை தந்தனர்.

1983ஆம் ஆண்டு இந்திய வருகையின்போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு சிறப்பான வரவேற்பினை அளித்தார். அப்போது, ராணி எலிசபெத், அன்னை தெரசாவையும் சந்தித்து உரையாடினார்.

மூன்றாவது முறையாக 1997ஆம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்த ராணி இரண்டாம் எலிசபெத், சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட நகரில் நடைபெற்ற கமலஹாசனின் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் மறைந்த ஜி.கே. மூப்பனார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com