தொற்றுநோய்களின் ஆண்டா 2023?

கரோனா எனும் உயிர்க்கொல்லியிடம் இருந்து மீண்டு, உலக மக்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டது என்னவோ 2023ஆம் ஆண்டில்தான்.
தொற்றுநோய்களின் ஆண்டா 2023?


கரோனா எனும் உயிர்க்கொல்லியிடம் இருந்து மீண்டு, உலக மக்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டது என்னவோ 2023ஆம் ஆண்டில்தான். ஆனால், தொற்றுநோய்களின் புள்ளிவிவரம் என்னவோ அவ்வாறு இருக்கவில்லை.

2023ஆம் ஆண்டு முடிவதற்குள், உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று மீண்டும் தனது கோர கைகளால் அணைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது. கரோனா மட்டுமல்ல, 2023ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏராளமான தொற்றுநோய்கள் பரவத்தொடங்கி மக்கள் பலியான ஆண்டாக அமைந்துவிட்டது.

டெங்கு, எலிக் காய்ச்சல், அம்மை, எச்1என்1, நிபா, ஜிகா என அனைத்து தொற்று நோய்களும் இந்த ஆண்டில் தனது கோர முகத்தைக்காட்டிவிட்டன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் இளைஞர்களின் திடீர் மரணம் மக்களை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. இளைஞருக்கு மாரடைப்பு என்ற செய்தி அவ்வப்போது ஊடகங்களில் முக்கியச் செய்தியானது. இதையெல்லாம் தாண்டி, குஜராத் மாநிலத்தில் நவராத்திரி காலத்தில் கர்பா நடனத்தின்போதம் 17 வயது சிறார் உள்பட 10 பேர் 24 மணி நேரத்தில் மரணமடைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை, கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியது. மறுபக்கம், கரோனா தடுப்பூசிகளால் இந்த ஆபத்து நேரிடுவதாகவும் மக்கள் மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், மத்திய சுகாதாரத் துறை அந்த சந்தேகத்தை இல்லை என்று மறுத்துவிட்ட்து.

இது மட்டுமல்லாமல், கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு இளைய தலைமுறையில் அதிகம் பேர் பக்கவாதம், இதய அடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதும் அதிகரிக்கப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வழக்கம் போல நீரிழிவு. இது பற்றி ஐசிஎம்ஆர் ஆய்வில், நீரிழிவு நோய் என்பது இந்தியாவில் ஒரு டைம்பாம் போல இருப்பதாகக் குறிப்பிட்டது. இங்கிருக்கும் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர். 315 பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகி டாக்டர் வி. மோகன் கூறுகையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகிலேயே நீரிழிவின் தலைநகராக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் எடுத்துக்கொண்டால், எங்கேப் பார்த்தாலும் பருவக்கால நோய்கள் பரவிக்கொண்டே இருந்தது. காய்ச்சல் வந்தது. இருமல் போகவில்லை, காய்ச்சல் வந்தது, கை கால்களில் வலி தீரவில்லை என்று நாள்தோறும் மக்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர்.

ஒரு பக்கம், வாரக்கணக்கில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, குளிர்க்காய்ச்சல், தலைவலி, தசை வலி என மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருந்தனர். முன்பெல்லாம் ஒரு மாத்திரை எடுத்தால் சரியாகும் சின்ன சின்ன நோய்கள் கூட எந்த மருந்துக்கும் அசைந்துகொடுக்கவில்லை. இதில் ரொம்ப மோசம், குழந்தைகள் நல மருத்துவமனைகள்தான். எப்போதும் கூட்டம் கூட்டமாக வரிசைகள்.

கரோனாவுக்கு நிகராகத்தான், சாதாரண காய்ச்சல் பாதித்தவர்களின் நிலை மாறியது. அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலையே இதனால் வெகுவாகப் பாதித்தது.

தேசிய இந்திய மருத்துவக் கழகத்தின் இணை இயக்குநர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், கடந்த 12 மாதங்களாக், உலகம் முழுவதும் மிக மோசமான தொற்று நோய்கள் பரவிக்கொண்டே இருந்தது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால், இதற்கெல்லாம் பின்னணியில் கரோனா தொற்றின் உருமாறிய திரிபுகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று சின்ன சின்ன ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கரோனா பெருந்தோற்றுதான், இந்த மோசமான சுகாதார சிக்கல்களுக்கு காரணம் என்று மட்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொற்று நோய்கள் மக்களை தாக்கிக் கொல்லும் நிலையில், இந்தியாவில் மருந்து தயாரிப்பிலும் சில குளறுபடிகள். குறிப்பாக இருமல் மருந்தில். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலியான நிலையில், அதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையுடன்தான் இந்த ஆண்டே தொடங்கியிருந்தது.

இதுபோன்று தொடர்ந்து, கோவாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துக்கு எதிராக புகார் என நாட்டின் மருந்துத் துறைக்கு எதிராக உலகளவில் ஒரு மோசமான பிம்பம் எழுந்தது. ஏற்கனவே கரோனாவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் மருந்து தயாரித்துக் கொடுத்து இந்தியா படைத்த சாதனை, இதன் மூலம் மீண்டும் சரியத் தொடங்கியது. இதற்கிடையே ஆண்டின் இறுதியில், கரோனாவும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

பார்க்கலாம்.. 2024ஆம் ஆண்டை, கரோனா வைரஸ் என்ன செய்யப்போகிறது, சீனத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவரும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு சில ஆறுதல் தகவல்கள்..
அரிதான நோய்களிடமிருந்து நிவாரணம்
அடுத்த ஆண்டு 14 அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சில நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு செலவு குறைந்த ஜெனரிக் மருந்துகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள மருந்துகள் வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். இவை நூறு மடங்கு செலவைக் குறைக்கும்.

சுகாதார உள்கட்டமைப்புக்கு ஊக்கம்
வரும் ஆண்டில், 2014 முதல் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக 157 புதிய நர்சிங் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில், ஒரு சில அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கலாம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com