கலைஞர் நூலக திறப்புவிழாவிலாவது கிராமப்புற நூலகர்களுக்கு விடியல் கிட்டுமா?

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் பணிபுரியும் நூலகர்களின் கோரிக்கைகள், மதுரையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழாவிலாவது  நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் நூலகர்களாக சராசரியாக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகள், மதுரையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழாவிலாவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நூலகத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களது வாழ்க்கை கலைஞர் நூற்றாண்டிலாவது வசந்தமாகிவிடாதா என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

'ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலை ஒன்று மூடப்படும்' என்பதை வெறுமனே பொன்மொழியாகக் கடக்க முடியாது என்பதைத்தான், மகாத்மா காந்தி 'தனக்கு நூல்களையே பரிசாகத் தாருங்கள்' என்று கேட்டதோடு பொருத்திப் பார்க்கலாம். நூல்கள் அந்த அளவிற்கு மிக வலிமையானவை. இதனைக் கருத்திற்கொண்டே நாடு விடுதலை பெற்ற முதலாவது ஆண்டிலேயே தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 இயற்றப்பட்டு, நூலகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. இவற்றின் சேவையை அதிகரிப்பதற்காக கடந்த 1972-ஆம் ஆண்டு பொது நூலக இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகமெங்கும் மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, நூலகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டன. 

மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1926, நடமாடும் நூலகங்கள் 14, கிராமப்புற நூலகங்கள் 1,915, பகுதி நேர நூலகங்கள் 745, கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றுடன் ஜூலை 15-ஆம் தேதி திறப்பு விழா காணவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவையும் சேர்த்து மொத்தம் 4,635 நூலகங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. மேலும், சில மாவட்டங்களில் பாரம்பரியமிக்க தனியார் நூலகங்களும் உள்ளன.

நூலகங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையோ, அந்த அளவிற்கு அந்நூலகங்களை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தும் நூலகர்களின் பங்கும் அளப்பரியது. கிளை நூலகர்களுக்கு இணையான எண்ணிக்கையைக் கொண்டு விளங்கும் கிராமப்புற நூலகர்களின் பணி இதுவரை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்பதோடு, வெறும் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் நூலகப்பணி செய்து வரும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகக் கிடக்கின்றன எனவும் குற்றம்சாட்டுகின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற நூலகர் (வில்லேஜ் லைப்ரரியன்) என்ற பதவியின் கீழ் 1,512 பேர் பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் யாருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் தங்களுக்கு எந்த அரசு சலுகைகளோ அல்லது ஓய்வூதியமோ கிடைக்கப்பெறுவதில்லை, தங்களில் பலரும் வறுமையில் இருக்கிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தங்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதியத்தையும் உயர்த்தி தங்கள் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். 

மேலும் பலரும் பணிக்காக நகர்ப்புறத்தில் இருந்து கிராமப்புறத்திற்கு தினமும் பயணித்து இந்த பணியைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூலகங்களுக்கும் நூலகர்களுக்கும் ஆற்றிய பெரும்பணியை கருத்திற் கொண்டு அவரின் வழி வந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் திறக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழாவில் தங்களுக்கு நல்ல செய்தியைத் தர வேண்டும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் கிராமப்புற நூலகர்கள். 

கிராமப்புற நூலகர் ஒருவர் கூறும்போது, கடந்த 2008-ஆம் ஆண்டு பணி நியமனம் ஆன கிராமப்புற நூலகர்கள் சிலரை 2011-ஆம் ஆண்டு 3-ஆம் நூலகர்களாக நிரந்தரப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு தற்போது வரை நூலகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை. பணி உயர்வும் வழங்கப்படவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்கள் ஊதிய மாற்றம் குறித்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் தற்போது 3-ஆம் நிலை நூலகருக்கான பணியிடங்கள் 300-க்கும் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கலாம். பணியிலிருக்கும்போது இறந்துபோன ஊர்ப்புற நூலகர்களின் குடும்பங்களுக்குத் தர வேண்டிய பணப்பலன்கள் முழுவதும் கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. 

தற்போது கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறக்கப்படும்போது அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். அந்த நம்பிக்கையில் இருக்கிறோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com