பொறியியல்: எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கு எகிறும் வரவேற்பு

கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பொறியியல்: எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கு எகிறும் வரவேற்பு


சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் செய்து வரும் நிலையில், வழக்கம் போல கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தேவையை விடவும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கான தேவை இந்த ஆண்டு மாணவர்களிடையே அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதற்கான கலந்தாய்வு அட்டவணையை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் கடந்வாரம் வெளியிட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 போ் விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனா். அவா்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 போ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு, பொறியியல் படிப்புகளின் தேவை எந்த வகையில் இருக்கும் என்று கல்வியாளர்களிடம் கேட்டதற்கு, கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி. பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல முறையில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில நிறுவனங்களில், மாணவர்களுக்கு ஆஃப்ர் கடிதங்கள் வழங்கப்பட்டாலும், பணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்தின. மறுபக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர் குறைப்பும் நடந்தது. இதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை தேர்வு செய்ய முடிவு செய்திருந்த மாணவர்களில் பலருக்கு மனமாற்றம் ஏற்படும்.

இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புகள், மாணவர்களின் அதிகத் தேவையாக இருக்கும். இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறை நன்கு வளர்ந்து வருவதும் இதற்குக் காரணம். தமிழகத்தில் தற்போது ஏராளமான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வரவிருப்பதால், மாணவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகிறார்கள். எனவே, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெறும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கல்லூரிகளும் தயாராகி வருகின்றன. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் குறைந்தது ஆறு கல்லூரிகளில் புதிதாக இரண்டு புதிய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண அறிவியல் பாடங்களில் பட்டம் பெறுவதைக்காட்டிலும் பொறியியல் பட்டம் பெறுவது வேலை வாய்ப்பை உறுதி செய்ய உதவுகிறது என்றும் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

கலந்தாய்வு..
ஜூலை 2-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கும், ஜூலை 7 முதல் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் பொறியியல் சோ்க்கை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தாா். மத்திய அரசும் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவப் படிப்புக்கான சோ்க்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகத்தில் அமைச்சா் பொன்முடி கடந்தவாரம் வெளியிட்டாா்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஆண்டு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளதால் நிகழாண்டு 3 சுற்றுகளாக மட்டுமே மாணவா் சோ்க்கை நடத்தப்படும்.

அதன்படி, முதல் சுற்று ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரையும், 2-ஆவது சுற்று ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 22 வரையிலும், 3-ஆவது சுற்று ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பிறகும், மாணவா்கள் கல்லூரியில் சேர 5 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.

நிகழ் கல்வியாண்டில் 430 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. இந்தக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 11,804 இடங்கள் அடங்கும். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டைவிட 236 இடங்கள் அதிகரித்துள்ளன.

தொழிற்கல்வியில் 3,143 இடங்கள் உள்ளன. இது, கடந்த ஆண்டைவிட 61 இடங்கள் அதிகம். மருத்துவ மாணவா் சோ்க்கைக்குப் பிறகு, பொறியியல் மாணவா் சோ்க்கையில் காலியிடம் ஏற்பட்டால், அவற்றை நிரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

தனியாா் கல்லூரியில் பொறியியல் சீட் பெற்ற மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட காலிப் பணியிடத்துக்கு மீண்டும் விண்ணப்பித்தால் அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், வேறு கல்லுாரிக்குச் செல்ல விரும்பினால் அவா்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும் என அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு
முதல் சுற்று: ஜூலை 28-ஆகஸ்ட் 9
2-ஆவது சுற்று: ஆகஸ்ட் 9-ஆகஸ்ட் 22
3-ஆவது சுற்று: ஆகஸ்ட் 22 - செப்டம்பா் 3
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com