
ஆயுதப் படை என்பது என்ன தண்டனைக் கொட்டடியா? வொர்க் ஷாப்பா? தனித்து அடைக்கப்படும் சிறப்பு முகாமா? அல்லது இங்கே அனுப்பப்படுவோரின் ஊதியம் குறைக்கப்படுமா? ஊதிய உயர்வு அல்லது படிகள் நிறுத்தப்படுமா? பதவி உயர்வு மறுக்கப்படுமா? எதிர்காலப் பணிப் பயன்களில் பாதிப்பு நேரிடுமா?
பணியின்போது மக்கள் விரோதமாக, சட்ட விரோதமாக, விதிகளுக்குப் புறம்பாக, முறைகேடாக நடந்துகொண்ட, மனித உரிமைகளை மீறுகிற, மிதித்து நடக்கிற காவல்துறையினர் எல்லாரும் எப்போதுமே 'தண்டிக்கப்பட்டு' ஆயுதப் படைக்கே மாற்றப்படுகிறார்களே?
மேலே இருப்பதைப் போல ஏதாவது நடவடிக்கை இருக்கலாம் என யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் ஏமாற்றம்தான். சட்ட ஒழுங்கு / குற்றப் பிரிவிலிருந்து ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டதேதான் ஒரே தண்டனை.
அதாவது, வெறும் இடமாற்றம்தான், தண்டனை!
'தண்டிக்கப்பட்டவர்கள்' இனி காவல் நிலையங்களுக்கு வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக ஆயுதப் படைத் திடலுக்குச் செல்வார்கள். காவல் நிலையங்களில் பணி புரிவதாலேயே கிடைக்கக் கூடிய 'சில கூடுதல் வரவுகள்' மட்டும் நின்றுபோய்விடும். அவ்வளவுதான்.
பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலரும் நகைக்கடைக்காரருமான ராஜசேகரின் தற்கொலைக்குக் காரணமான காவல்துறை உதவி ஆய்வாளரும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இரவில் படுத்திருந்த ஒரு பெண்ணை இரக்கமில்லாமல் லத்தியால் சரமாரியாக அடித்த பெண் காவலரும்கூட இவ்வாறுதான் 'கடுமையாகத் தண்டிக்கப்பட்டு' ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர், ரோஜா கோல்டு நகைக் கடை உரிமையாளர் ராஜசேகர். திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறித் திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரையும், அவரது மனைவியையும் கைது செய்து திருச்சி அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவரிடம் பேச்சு நடத்தி ஆறு பவுன் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திருச்சி குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா சங்கரி, மேலும் ஒன்பது பவுன் நகை கேட்டு தினமும் போன் செய்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான ராஜசேகர், ஜூன் 25, இரவு பட்டுக்கோட்டை அருகேயுள்ள செட்டியக்காட்டில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த சாவுக்குக் காரணமான திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, அவருடைய உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்டு, ராஜசேகர் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிருத்திவிராஜ் சௌகான் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொடக்கத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது. எனினும், உமாசங்கரியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக எழுத்தில் உறுதியளிக்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்களும் நகைக் கடை உரிமையாளர்களும் மறுபடியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர், டிஎஸ்பி பிருத்விராஜ் சௌகான் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர்.
காவல்துறை தரப்பில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரியைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்றும், அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதன் பிறகுதான் ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜசேகரின் இறப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மதிமுக தலைவர் வைகோ உள்பட தலைவர்கள் வலியுறுத்தினர். ராஜசேகரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்தபோது, இது தற்கொலை இல்லை, திருச்சி போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
போராடிய மக்கள், உறவினர்கள், நகைக்கடைக்காரர்களிடம் காவல்துறை உறுதியளித்தபடி, கடந்த வாரம் காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உமாசங்கரி, தொடர்ந்து அதிகபட்ச 'கடும் தண்டனையாக' ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்!
நகைக்கடைகள், திருட்டு நகைகள், காவல்துறை ஆகியவற்றைச் சுற்றி வழக்கமாக நடைபெறும் கதையும் பின்னணியும் தனியே எழுதப்பட வேண்டிய ஒன்று.
தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் ஒரு நகைக் கடை உரிமையாளர் என்பதைவிட இந்தப் பகுதியின் பொது பிரச்சினைகளை முன்நின்று நடத்திய போராட்டக்காரர் என்பது ஊருக்கே தெரியும். அப்படிப்பட்ட ஒருவருடைய உயிரின் விலை ஆயுதப் படைக்கு மாற்றம்!
ராஜசேகரின் மரணத்திற்குக் காரணமான உதவி ஆய்வாளர் உமாசங்கரிக்கு எதிர்காலத்தில் காவல்துறையால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாது என்று தெரிவிக்கும் வகையில் உரிய தண்டனை வழங்க வேண்டும், ராஜசேகரனை இழந்து தவிக்கும் குடும்பத்திருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவருடைய உறவினரும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச்செயலருமான வாசன் குறிப்பிடுகிறார்.
இதேபோலத் தான் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இரு நாள்களுக்கு முன் இரவில் ஒரு சம்பவம்!
கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் பேருந்துக்காக காத்திருப்பதும் படுத்துக் கிடப்பதும் வழக்கம். கடைசிப் பேருந்தைத் தவற விடுவோரும் கையேந்திப் பிழைப்போரும் இரவில் நடைமேடைகளில் உறங்குவதும் இயல்பான ஒன்றே.
சில நாள்கள் முன் இப்படிப் படுத்துறங்கிய ஒரு பெண்ணைத்தான் இரவுநேரப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் அடி அடியென அடிக்கிறார். இந்தக் கொடுமையை யாரோ சிலர் விடியோ எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்டவர்கள் வயிற்றைக் கலங்கடித்தது. கடும் விமர்சனங்களும் எழுந்தன.
தாக்கப்பட்ட பெண் யார்? எதற்காக இவ்வாறு அடிக்க வேண்டும்? ஒருவேளை குற்றமே செய்திருந்தாலும்கூட உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை இப்படித் தடியால் தாக்க இந்தக் காவலருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தாக்கப்பட்ட பெண் இப்போது எங்கிருக்கிறார்? தெரியவில்லை.
விடியோ வைரலாகிவிட்ட நிலையில் வேறு வழியின்றி, இந்த சம்பவம் தொடர்பாகவும் காவல்துறை ஆணையர் சத்தியப் பிரியா விசாரித்து, லத்தியடி நடத்திய கோட்டை காவல் நிலைய பெண் காவலர் தனலட்சுமியைக் 'கடுமையாகத் தண்டிக்கும் வகையில்' ஆயுதப் படைக்கு மாற்றிவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆக, காவல்துறை சீருடை அணிந்திருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும், எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அதிகபட்ச தண்டனை ஆயுதப் படைக்கு மாற்றுவதுதான் போல (இவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு பழைய இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).
எவ்வளவு பெரிய தண்டனை?
இதேபோன்றதொரு குற்றத்தை எளிய மனிதன் செய்திருந்தால்... சட்டத்தின் எத்தனை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்படும்? எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை விதிக்கப்படும்? ஆனால், இந்தக் குற்றங்களை இழைத்தவர்கள் காக்கிச் சீருடை அணிந்திருப்பதால் சாதாரண குடிமக்களுக்கு எதிராக எடுப்பதைப் போல இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இவற்றுக்கெல்லாம் யாரால் மணி கட்ட முடியும்? மனித உரிமை அமைப்புகளுக்கும் நீதிமன்றங்களுக்கும்தான் வெளிச்சம்!
(ஒரத்தநாடு வெ. பழனிவேல் அளித்த தகவல்களுடன்)