மணிப்பூரில் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம்! இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம்! இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
Published on
Updated on
2 min read

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்ற விடியோவை அடுத்து இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி குகி சமூகத்தினர் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதனால் மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில்தான் மணிப்பூரில் கலவரம் தொடங்கிய நாள்களில் நடைபெற்ற சில சம்பவங்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மே 4 ஆம் தேதி ஆயுதமேந்திய கும்பல் ஒன்று காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் வீடுகளில் சூறையாடி எரித்தும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரிய வருகிறது. 

குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் கொடூர விடியோ கடந்த புதன்கிழமை இணையத்தில் வெளியானது. 

இதன் தொடர்ச்சியாக இரு பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. 

தலைநகர் இம்பாலில் இரண்டு பழங்குடியின பெண்கள் கார் பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மே 4 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அங்கு வந்த கும்பல் ஒன்று இரண்டு பெண்களையும் இழுத்துச் சென்று அருகில் உள்ள அறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்கள் கத்தாமல் இருப்பதற்காக வாயில் துணி கொண்டு காட்டியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பின்னர் பெண்களின் ஆடைகளைக் கிழித்து அவர்களின் முடியை வெட்டி, அருகில் உள்ள பகுதியில் தூக்கி வீசியுள்ளனர். பெண்களின் உடல் முழுவதும் ரத்தமாக இருந்ததாக அவர்களுடன் பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார். 

மேலும் அந்த கலவரக் கும்பலில் பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தான், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய அந்த ஆண்களை தூண்டிவிட்டதாக மற்றொரு சக பணியாளர் கூறுகிறார். 

தகவலறிந்த பொரொம்பட் காவல் நிலையம் அன்று இரவு 8.20 மணிக்கு இதுகுறித்து தாமாக முன்வந்து ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் போலீசார் ஆம்புலன்சில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அந்த பெண்களின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த தோழி பார்த்துள்ளார். ஆனால் உடனே அந்த பெண்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அடுத்தநாள் மருத்துவமனை சென்று விசாரித்தபோது இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். 

உடனே ஒரு பெண்ணின் உறவினருக்கு நடந்தவற்றைக் கூறியுள்ளார் அந்த மைதேயி பெண். அதன்பின்னரே குடும்பத்தினருக்கு மகள்களுக்கு நிகழ்ந்த கொடுமை தெரிய வந்துள்ளது. 

இறந்தும் தன் மகளின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்று ஒரு பெண்ணின் தாய் வேதனையுடன் தெரிவிக்கிறார். 'தற்போதைய நிலையைக் கண்டு மிகவும் பயமாக இருக்கிறது. எங்கள் மகள்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் என்று எப்படி கூறுவது? அவளுடைய மரணத்தை நான் ஏற்றுக்கொண்டேன், என்னை சமாதானப்படுத்த முயற்சிக்கிறேன். எனக்கு மிகவும் வருத்தம் என்னவென்றால், அவளுடைய உடலை நான் பெறவில்லை' என்றார். 

இதையடுத்து மே 16 ஆம் தேதி பெண்ணின் தாய், சாய்குல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொரொம்பட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக சாய்குல் போலீசார் கூறுகின்றனர். 

மாநிலத்தில் கலவரம், வன்முறை, பெண்கள் மீதான தாக்குதல்கள் என 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 

மேலும் மணிப்பூரில் பாஜக எம்எல்ஏக்கள் உள்பட 10 குகி பகுதி எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது மணிப்பூரில் இன்னும் வெளிவராத குற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடைபெற்றுள்ளது தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com