மணிப்பூர் வன்முறை தொடர்பாக 3 முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை: தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் மற்றும் மாநிலத்தின் டிஜிபிக்கு மூன்று முறை கடிதம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் மற்றும் மாநிலத்தின் டிஜிபிக்கு மூன்று முறை கடிதம் மூலம் புகார் அளித்ததாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடூரங்கள் தொடர்பாக மூன்று முறை புகார் அளித்தும் தனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்காததாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த மே 23 ஆம் தேதி மணிப்பூரில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஒரு குழுவினர் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை ரேகா சர்மா மணிப்பூர் மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் குமார் மற்றும் டிஜிபி ராஜீவ் சிங்குக்கு தெரியப்படுத்தியுள்ளார். மீண்டும் மே 29 ஆம் தேதி மணிப்பூர் கலவரம் குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுத் தேவை, தங்குமிடம், மருத்துவ உதவி, அவர்களது பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கான சானிடரி நாப்கின் ஆகியவை அவர்களுக்கு கிடைப்பது, கர்ப்பிணிப் பெண்களுக்கான தங்குமிடம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். மணிப்பூர் மாநில அரசு பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு கவனம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல் கடந்த ஜூன் 19 ஆம் தேதியும் ரேகா சர்மா மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மூன்றாவது முறையாக மணிப்பூர் வன்முறை குறித்து கடிதம் எழுதியுள்ளார். அப்போதும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு எதிராக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

குகி இனப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விடியோ இரண்டு நாள்களுக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாட்டில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா மணிப்பூர் மாநிலத்தில்  பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை 4 நாள்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com