மணிப்பூர்: அந்த அக்கிரம நாளில் நடந்தது என்ன? நேரடி சாட்சியம்!

மணிப்பூர்: அந்த அக்கிரம நாளில் நடந்தது என்ன? நேரடி சாட்சியம்!

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற மே 4 ஆம் தேதி அன்று நடந்தது என்ன? 

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகக் கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் நடந்து 2 மாதங்களுக்குப் பிறகு வெளியான விடியோவால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்ட மே 4 ஆம் தேதி உள்ளபடியே நடந்தது என்ன? 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினா் அந்தஸ்து பெற போராட்டம் நடத்தினர். இதற்கு குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ கடந்த புதன்கிழமை இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

மணிப்பூரில் போராட்டம் தொடங்கிய மறுநாள், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது 2 மாதங்களுக்கு மேலாகி இந்த சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த மே மாதம் 18 ஆம் தேதியே பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவரும் முன்னாள் ராணுவ சுபேதாருமான ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மே 18 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21 அன்று நோங்போக் செக்மாய்(Nongpok Sekmai) காவல் நிலையத்தில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஆயுதமேந்திய கும்பல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் 56 வயதுள்ள தந்தை மற்றும் 19 வயது சகோதரரை கொன்றதாகவும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வன்முறை குறித்த விடியோ வெளியான பின்னர், இந்த சம்பவத்தில் தெளபால் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஹுய்ரேம் ஹிரோதாஸ் சிங் (32) உள்பட இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கொடூர சம்பவத்தில் மத்திய அரசு, மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் என்று எச்சரித்த அடுத்த சில நிமிடங்களில், காங்போக்பி மாவட்டம் சாய்குல் காவல்நிலையத்தில் மே 18 ஆம் தேதி காலை 8.30 மணிக்கே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பிரேன் சிங் கூறுகிறார். 

மேலும் வியாழக்கிழமை பிற்பகல் இரண்டாவது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரேன் சிங், வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட 1,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதமானது என்று விளக்க முற்படுகிறார். 

மேலும் பேசிய அவர், 'ஒவ்வொரு வழக்கையும் அடையாளம் காண, விசாரணை செய்ய நேரம் எடுக்கும். அதனால்தான் இந்த விடியோ கிடைத்த உடனே காவல்துறை விசாரணை மற்றும் கைது நடவடிக்கை தொடங்கியது. தீவிரமான முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து குற்றவாளிகளுக்கும் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க முயற்சி செய்வோம்' என்றார். 

மேலும் இந்த கொடூரத்தில் இரண்டு பெண்கள் அல்ல, 3 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஓய்வுபெற்ற ராணுவ சுபேதார் கூறுகிறார். இவர் கார்கில் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாதிக்கப்பட்ட 42 வயது அவரது மனைவி கூறும்போது 'திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்கள் முன்பாக துப்பாக்கி முனையில் எண்களின் ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தினர். இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர். மேலும் எங்களை நடனமாடக் கூறியதுடன் தொடர்ந்து நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்' என்றார். 

அவரது கணவர் ராணுவ சுபேதார் மே 4 அன்று என்று நடந்தது என்று விளக்கமளிக்கிறார். 

கடந்த மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காங்போக்பியின் பைனோம் கிராமத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் அங்குள்ள 9 கிராமங்களில் பொருள்களை அடித்து நொறுக்கி, வீடுகளுக்கும் அங்குள்ள ஒரு தேவாலயத்திற்கும் தீ வைத்தனர். வீடுகளில் உள்ள ஆடு, கோழி போன்ற பிராணிகளையும் கொன்றனர். 

அப்போது 2 பெண்கள் உள்பட 4 பேர் அங்குள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துள்ளனர். அங்கு ஆடுகள், கோழிகளைத் துரத்திச் சென்ற கலவரக்காரர்கள் அவர்களைக் கண்டறிந்து ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை, மேலும் ஒரு தந்தை, மகன், மகள் ஆகியோரை வெளியில் இழுத்து  வந்தனர். 

அங்கே ஒரு காவல்துறை வாகனம் நின்றிருந்தது. இருப்பினும் காவல்துறையினரை மீறி அவர்கள் என்னுடைய மனைவி மற்றும் 4 பேரை இழுத்துச் சென்றனர். என் மனைவி இழுத்துச் செல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்த்தேன். ஆனால், என்னால் அங்கு செல்ல முடியவில்லை. 

பின்னர் எனது மனைவி உள்பட 3 பெண்கள் ஆடைகளைக் கழற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குழந்தையுடன் இருந்த ஒரு பெண், கும்பலில் இருந்த சிலருக்கு தெரிந்தவர் என்பதால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரில் 21 வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தனர். அப்போது அந்த பெண்ணின் தந்தையும் சகோதரனும் தடுக்க முற்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். 

சுமார் 2-3 மணி நேரம் இந்த சம்பவம் நடைபெற்றது. கும்பல் சென்ற பிறகு கிராம மக்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் நாகா கிராமத்தில் எனது மனைவியை நான் சந்தித்து அழைத்து வந்தேன். 21 வயது பெண்ணை அவருடைய ஆண் நண்பர் வந்து அழைத்துச் சென்றார். பின் மலைகளைக் கடந்து வந்து மே 18 ஆம் தேதி சாய்குல் பகுதிக்குச் சென்று காவல்துறையில் புகார் அளித்தேன். 

தற்போது நாங்கள் வீடு, பொருள்களை இழந்த நிலையில் நிவாரண முகாமில் தங்கியிருக்கிறோம். 

என்னுடைய மனைவி தற்போது மன அழுத்தத்தில் இருக்கிறார், குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக அவர் இயல்பு நிலைக்கு வரப் போராடிக் கொண்டிருக்கிறார். நான் போரை பார்த்திருக்கிறேன், கார்கில் போரில்கூட இருந்தேன். ஆனால், நான் போர்க்களத்தைவிட இப்போது எனது சொந்த ஊரை ஆபத்தானதாகக் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே, மணிப்பூரில் கலவரம் தொடங்கியது முதலே மாநிலத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கலவரம் தொடங்கிய நாள்களில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது உண்மையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு பிறகாவது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடித் தீர்வு காணுமா? மாநில அரசு முறையாக இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com