பரபரப்பாகும் கூட்டணி அரசியல்! மதில் மேல் பூனைகளாக 11 கட்சிகள்!

2024 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய அரசியல் கட்சிகள் முனைப்பாக தயாராகத் தொடங்கிவிட்ட நிலையில் மதில் மேல் பூனைகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?
பரபரப்பாகும் கூட்டணி அரசியல்! மதில் மேல் பூனைகளாக 11 கட்சிகள்!

2024 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய அரசியல் கட்சிகள் முனைப்பாக தயாராகத் தொடங்கிவிட்ட நிலையில் மதில் மேல் பூனைகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

முன்னெப்போதுமில்லாத வகையில், அநேகமாக நெருக்கடி நிலை முடியும் காலத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்ததைப் போல, பெரும்பாலான எதிர்க் கட்சிகள் தங்கள் உள்முரண்களை விடுத்து இந்தியா என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கின்றன.

முதல்வர் நிதீஷ் குமார் அழைப்பின் பேரில், பிகாரின் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்தபோது, வெறுமனே கேலி பேசிக்கொண்டும் கிண்டலடித்துக் கொண்டுமிருந்த பாரதிய ஜனதா கட்சியோ, இந்த முறை 'பதறிப் போய்' பெங்களூருவில் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூடிய நாளிலேயே, தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியிருக்கிறது.

தில்லி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற 38 கட்சிகளில் 9 கட்சிகள், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவே இல்லை; 16 கட்சிகளுக்கு ஒரே ஒரு எம்.பி.கூட கிடையாது.

பிகாரிலும் மகாராஷ்டிரத்திலும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2019 தேர்தலில் இடம் பெற்ற கட்சிகள் இருக்கப்  போவதில்லை. பிகாரிலோ நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிவிட்டது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்துத் தங்கள் பக்கம் இழுத்துவைத்திருக்கிறது பா.ஜ.க. மகாராஷ்டிரம், பிகார், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு என அனைத்து மாநிலங்களிலுமே பாரதிய ஜனதா கட்சிக்குக் கூட்டணி மிகவும் அவசியம். இந்த நிலையில் எந்தச் சிறு கட்சியையும் விட்டுவைக்காமல் இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவின் எந்தப் பிரிவை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என்று  நிச்சயமற்று இழுபறியாகக் கிடந்த சூழ்நிலையில், தங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தைக்கூட அப்படியே கைவிட்டுவிட்டு, ஈரோடு இடைத்தேர்தலில் சர்வசாதாரணமாகக் கையாண்ட எடப்பாடி பழனிசாமியை இந்தக் கூட்டத்துக்கு அழைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்க, அதிமுக தலைமையில்தான் கூட்டணி, பழனிசாமிதான் தென்னிந்திய முகம் என்கிற அளவுக்குச் சென்றுவிட்டிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதாவது, அந்த அளவுக்குக் கூட்டணிக்கான தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்த தில்லிக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது பாரதிய ஜனதா. 

இன்றைய நிலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள பெரிய கட்சி அதிமுக மட்டும்தான். பிற மாநிலங்களில் உடன் இருக்கும் கட்சிகள் எல்லாமும் பெரும்பாலும் உடைத்துக் கொண்டுவரப்பட்டவைதான்.

ஒருநாளும் ஒன்றுசேர மாட்டா என்று நம்பிக்கொண்டிருந்த கட்சிகளின் தலைவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பெங்களூருவில் இணைந்து அமர்ந்திருக்கின்றனர்.

தில்லியில் எதிரெதிராக இருக்கும் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மியும் மேற்கு வங்கத்தில் எதிரெதிராகவுள்ள காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் எதிரெதிராக நிற்கும் காங்கிரஸும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் 'இந்தியா' என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கின்றனர்.  

மக்களவைத் தேர்தலில் இரு அணிகளாக இந்தக் கூட்டணிகள் களம் காணப் போகின்ற நிலையில்தான், இன்னும் 11 அரசியல் கட்சிகள் மட்டும் இவ்விரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிக்கின்றன (இந்தக் கட்சிகளில் தற்போது 91 எம்.பி.க்கள் இருக்கின்றனர்).

காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையிலான இரு கூட்டணிகளிலும் 65 கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள காங்கிரஸ் அணியில் 26 கட்சிகளும் பா.ஜ.க. அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 39 கட்சிகளும் இருக்கின்றன. 

இவ்விரு அணிகளிலும் இடம் பெறாத முக்கியமான 11 கட்சிகள்:

முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரம்), முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (ஒடிசா), முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (தெலங்கானா), மாயாவதியின் பகுஜன் சமாஜ கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், சிரோமணி அகாலிதளம், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஜஸ்தானின்  ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக், சிரோமணி அகாலிதளம் (மான்).

இவர்களுடைய நடுநிலைமை என்பது பெரும்பாலான தருணங்களில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மட்டுமின்றி மக்களையும் அரசியல் ஆர்வலர்களையும் கடைசி நேகம் வரை பதற வைக்கக் கூடியது. கடந்த குடியரசுத் தேர்தலின்போது, எந்த அணியின் வேட்பாளரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதைக் கடைசி வரை இழுத்தடித்துப் பதற்றத்திலேயே வைத்திருந்தன நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் போன்ற சில கட்சிகள்.

மக்களவையில் மொத்தம் 63 எம்.பி.க்களைக் கொண்டுள்ள ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் செல்வாக்கு மிக்க கட்சிகளாகத் திகழும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் ஆகியவை மக்களவைத் தேர்தலில் பெறக் கூடிய இடங்களைப் பொருத்து, நெருக்கடியான நேரத்தில் மத்தியில் அரசு அமைப்பதை முடிவு செய்யக் கூடியவர்களாகவும் இருக்கும் வாய்ப்புண்டு. 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இரு அணிகளிலும் சேராமல் 'நடுநிலையாக'த் தனித்துப்  போட்டியிட்டால் இவ்விரு அணிகளின் வெற்றி வாய்ப்புகள் சிக்கலாகிவிடக் கூடும்.

ஆந்திரத்தில் 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.  2000 ஆண்டிலிருந்து ஒடிசாவில் செல்வாக்கு செலுத்திவரும் பிஜு ஜனதா தளம் எப்போதுமே மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியையே ஆதரித்துவந்திருக்கிறது.

தெலங்கானாவில் ஆட்சியில் இருந்தபடி பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும் இம்சையை அளித்துக்கொண்டிருக்கும் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதியும் இன்னமும் இரு அணிகளையும் சம தொலைவில் வைத்துப் பார்ப்பதாகத்தான் கூறுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னமும் பத்து மாதங்கள் இருக்கின்றன. கடைசி சில மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம். இந்த நடுநிலைக் கட்சிகளும் அணிசேர வேண்டிய கட்டாயம் நேரிடலாம் அல்லது இரண்டிலும் சேராத நடுநிலைக் கட்சிகளை மக்களே கைவிடும் சூழ்நிலையும் ஏற்படலாம். எப்படியோ அரசியல் களம் இரு முனைப்பட்டு சூடேறத் தொடங்கிவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com