ஆர்.என். ரவி / தங்கம் தென்னரசு
ஆர்.என். ரவி / தங்கம் தென்னரசு

நிறைவேறியதா? நிலுவையிலுள்ளதா? மசோதாக்களின் உண்மை நிலவரம் என்ன?

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் நிலுவையில் இல்லை என்று கூறுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழகத்தில் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள்  எல்லாம் என்னவாகின? இருக்கின்றனவா, இல்லையா? என்ன நிலவரம்? 

தமிழகத்தில் சமீப காலமாக அவ்வப்போது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதாக்கள் குறித்தோ அல்லது புதிய மசோதாக்கள்  குறித்தோ விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது மக்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இன்னொரு பிரச்சினை எழுந்திருக்கிறது. தமிழக ஆளுநரின் பேட்டியும் அமைச்சரின் எதிர்வினையும்தான் மீண்டும் பேசுபொருள்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள்  எதுவும் தம்மிடம் நிலுவையில் இல்லை என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

ஆனால், இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 17 மசோதாக்களுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை?

திமுக அரசு உடனான அனுபவம் பற்றிய கேள்விக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் காலாவதியானது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

நீட் தொடர்பானது தவிர, மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்று ஆளுநர் குறிப்பிட, 11 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார்.

மசோதா: ஆளுநர் கருத்து

தமிழக அரசால் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டன. அவற்றில் எத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர், ஆளுநர் மாளிகையில் தற்போது எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை. நான் இங்கு வந்த (செப்டம்பர்) 2021-ல் 19 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அதில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று மட்டுமே நிலுவையில் உள்ளது. அது நீட் ரத்து மசோதா. அது பொதுப்பட்டியலில் உள்ளதால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன். 2022ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 59 மசோதாக்களில் 48-க்கு ஒப்புதல் அளித்துள்ளேன். 3 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதாவை மாநில அரசே திரும்பப் பெற்றுக்கொண்டது. 8 மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்பொருள் 2022-ல் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்பதுதான். 2023-ல் 7 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன என்றிருக்கிறார். 

சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்ற பிம்பத்தைக் கட்டமைத்துள்ளனர். அவர்கள் சட்டப்பிரிவு 200-ல் கூறப்பட்டுள்ளதை படிக்க வேண்டும். சட்டப்பேரவையில் அல்லது மேலவை உள்பட இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அதனை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். சட்டப்படி ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

இதுமட்டுமின்றி நான்காவது வாய்ப்பு ஒன்று உள்ளது. அனுப்பப்படும் மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். பேரவையால் மறுபரிசீலனை செய்த பிறகு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவில் அதுதான் நடந்தது என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

மசோதா: அமைச்சர் கருத்து

ஆளுநருக்குப் பதிலளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

ஆளுநர் ரவி, ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை, புனைவுக் காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு, சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்களைச் சொல்கிறார்.

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப்பேரவை கூடும்போது, ஆளுநர் உரை இடம் பெறுவது மரபாகும். அந்த உரையைத் தயாரித்து வழங்குவது மாநில அரசின் பணி. அதை வாசிக்க வேண்டியது ஆளுநரின் வேலை. ஆனால், அவர் அரசு அளித்ததை வாசிக்காமல் சொல சொற்களை தவிர்த்துவிட்டு திரித்து வாசிக்கிறார்.

கோவை, உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்துக் குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டுவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு எத்தனை மசோதாக்களை தனக்கு அனுப்பிவைத்திருக்கிறது. அவற்றில் எத்தனை தன்னிடம் நிலுவையில் உள்ளது என்ற கேள்விக்கு, தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்ற பொய்யான தகவலை ஆளுநர் கூறுகிறார். பின்னர் அவரே 8 மசோதாக்களை, தான் நிறுத்திவைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

நிலுவையில் இருப்பதற்கும், நிறுத்திவைத்திருப்பதற்கும் உள்ள சட்ட வித்தியாசத்தை அவர்தான் விளக்க வேண்டும்.

இன்றைய நிலவரப்படி கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களில் ஏழும், அதற்கு முன்பு அனுப்பப்பட்ட பத்து மசோதாக்கள் என மொத்தம் அவரிடம் 17 மசோதாக்கள் இருக்கின்றன.

நிர்வாகத்தைப் பொருத்தவரை அவர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் அவ்வளவுதான். வெறும் வார்த்தை ஜாலங்களில் அவர் அதை மூடிக் கடந்திடக் கூடாது. அதை இந்த அரசு அனுமதிக்காது. இப்படி எளிதில் சரிபார்க்கக்கூடிய ஒரு விவரத்தையே தவறாகக் கூறும் ஆளுநரின் சட்டம், ஒழுங்கு, சமூகநீதி குறித்த கருத்துகளை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார். 

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன். எதுவும் நிலுவையில் இல்லை. சட்டப்படி செயல்படுகிறேன் என்கிறார் ஆளுநர். ஆனால், அவரிடம் 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இருவரில் யார் சொல்வது உண்மை?

சட்டமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் எதுவும் காற்றோடு கரைந்து போயிருக்கக் கூடிய வாய்ப்புகள் எதுவுமில்லை என்று மட்டும் இப்போதைக்கு நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com