

கோவை: பயிற்சி மையங்களுக்கு ஆஐந தரச்சான்று வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அது நீட் பயிற்சி மையங்களுக்கு கடிவாளமிடும் முயற்சியா அல்லது பயிற்சி மைய வணிகத்தை அங்கீகரிக்கும் திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு நடைமுறை அடிப்படையிலான கல்விக்கு மேலை நாடுகள் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலோ படைப்பாற்றலைத் தவிர்த்துவிட்டு, கோட்பாடு அடிப்படையிலான கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் மதிப்பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவருக்கே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயில்வதற்கு நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
மதிப்பெண் வேட்கையினால் வகுப்பறைக் கற்றலைத் தாண்டிய கற்றல் முறை அதிகாரபூர்வமானதாக மாறியுள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில், தங்கள் குழந்தை தனியார் பள்ளியில் பயின்றால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற சிந்தனையைப் போலவே, எவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தில் தங்கள் பிள்ளை படித்தாலும் ஏதாவது ஒரு பிரபலமான பயிற்சி மையத்துக்குச் சென்றால்தான் வெற்றி பெற முடியும் என்ற சிந்தனையும் ஆழப்பதிந்துவிட்டது.
அரசு வகுத்தளித்த பாடத்தை வரி விடாமல் முழுமையாக படித்துத் தேர்வு எழுதினாலும், அதன் பிறகு ஒரு தகுதித் தேர்வு எழுதினால் மட்டுமே பட்டப் படிப்புகளில் சேர முடியும் என்ற நிலை இருப்பதால், அதற்கான பயிற்சி மையங்கள் உருவாகத் தொடங்கின. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இருந்தபோது, பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2007-இல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு பயிற்சி மையங்கள் குறைந்திருந்தன.
ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம்:
ஆனால் நீட் தேர்வு அமலான பிறகு பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்தது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 91 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுவதற்கு சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ}மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதேபோல ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இதுபோலவே ஜேஇஇ, கிளாட், கேட், கியூட், சிமேட், மாநில அரசுத் தேர்வாணையத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ராணுவம், சீருடைப் பணியாளர் தேர்வுகள் எனப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை பல லட்சம் பேர் எழுதுகின்றனர். தற்போதைய அளவில் உலக கல்வித் துறையைப் பொருத்தவரை இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
தேசிய மாதிரி அமைப்பின் 2016-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி நாடு முழுவதும் ஏதாவது ஒரு பயிற்சி மையத்துக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 7.10 கோடியாக இருந்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி மைய வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்ததாக அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிபுணர் குழு ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.
இன்ஃபினியம் குளோபல் ரிசர்ச் என்ற புணேயைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் ஆய்வின்படி தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் பயிற்சி மைய வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளது. இது வரும் 2028}ஆம் ஆண்டுக்குள் ரூ.1.33 லட்சம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோர்களின் தேவையை உணர்ந்த பயிற்சி மையங்கள், தேர்வு சமயத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளைப்போலவே ஆண்டு முழுவதும் செயல்படத் தொடங்கியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டப் படிப்பில் சேராமல் ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் வரை செலுத்தி, தொடர்ந்து 2, 3 ஆண்டுகள் வரை பயிற்சி மையங்களில் பயில்வது சாதாரணமாகிவிட்டது.
உரிமம் இல்லாத பயிற்சி மையங்கள்:
இதனால், பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பல ஆயிரமாகப் பெருகியுள்ளது. பல கோடி ரூபாய் புழங்கும் பயிற்சி மைய வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. தற்போதைய நிலையில் பயிற்சி மையங்கள் தொடங்கவோ, செயல்படவோ பெரிதாக எந்த உரிமமும் பெறத் தேவையில்லை.
மாநகராட்சி பகுதியில் செயல்படும் பயிற்சி மையங்கள் வணிக நிறுவனங்கள் என்ற அடிப்படையிலும், சங்கங்கள் என்ற அடிப்படையிலுமே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. சிறிய அளவிலான பயிற்சி மையங்கள் எதுவும் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கும் பயிற்சி மையத்தையே பெற்றோரும், மாணவர்களும் விரும்புகின்றனர் என்பதால் பயிற்சி மையங்களுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், விடைத்தாள்களை மாற்ற முயற்சி என பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களை முறைப்படுத்த அவற்றுக்கு பிஐஎஸ் தரச்சான்று வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பயிற்சி மையங்கள் - சேவைத் தேவைகள் என்ற பெயரில் வரைவு அறிக்கையை தயாரித்து கடந்த ஏப்ரல் முதல் நாடு முழுவதும் பயிற்சி மைய நிர்வாகிகள், கல்வியாளர்களிடையே கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தி வருகிறது பிஐஎஸ் அமைப்பு.
அதில் பயிற்சி மையங்களில், ஒரு மாணவருக்கு ஒரு சதுர மீட்டர் என்ற அளவில் இட வசதி, குடிநீர், கழிப்பிடம், சிசிடிவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்றால் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்று, குறைந்தது 6 மாதங்கள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உரிய நேரத்தில் பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கற்றல், கற்பித்தல் முறைகள், மதிப்பீடு ஆகியவற்றையும் பிஐஎஸ் நிறுவனம் மதிப்பிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரைவு அறிக்கை தொடர்பாக மே 26}ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
பெருநிறுவனங்களின் கைகளில் பயிற்சி மையம்: தரச்சான்று முறை அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் செயல்படும், விதிகளின்படி அமையாத, சான்றிதழ் பெறாத பயிற்சி மையங்கள் மூடப்படும். அதேநேரம் பெரிய அளவிலான நிதி வசதி கொண்ட பயிற்சி மையங்களில் மட்டுமே மாணவர்கள் சேர முடியும் என்ற நிலை உருவாகும்.
இதற்கிடையே, மக்கள் நுகரும் பொருள்களான தங்கம், வெள்ளி, இரும்புக் கம்பிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு தரச்சான்று வழங்கும் இந்த நிறுவனம், பயிற்சி மையங்களின் அடிப்படை வசதிகள், கட்டுமானம் போன்றவற்றை வேண்டுமானால் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க முடியும். ஆனால், அவற்றின் கற்றல் - கற்பித்தல் தரத்தை, ஆசிரியர்களின் திறனை, கற்றல் உபகரணங்களின் தரத்தை எப்படி ஆய்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பயிற்சி மையத்தின் வசதிகளையும், சேவையின் தரத்தையும் கணக்கிட்டு சான்றிதழை வழங்க அதிகாரம் கொண்ட இந்த அமைப்பு, அவர்கள் வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வணிகத்தை அங்கீகரிப்பதா?: இது தொடர்பாக பிஐஎஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக்கேட்டு, அறிக்கையை அனுப்பி வைக்கும்படி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். பயிற்சி மையங்களின் கருத்துருக்களைப் பெற்ற பிறகு அதில் மாற்றங்கள் செய்யப்படும். அப்போது பயிற்சிக் கட்டணம் குறித்து இடம்பெறுகிறதா என்று பார்க்க வேண்டும் என்றனர்.
இது குறித்து கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, பயிற்சி மையங்களை தடை செய்வதற்குப் பதிலாக அவை வணிக ரீதியாகச் செயல்படுவதற்கு வழிமுறைகளை உருவாக்கித் தர இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
கல்வியை முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கும் தேசிய கல்விக் கொள்கையின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையில் பிஐஎஸ் அமைப்பின் அறிவிப்பு அமைந்துள்ளது. ஆசிரியர்களின் தகுதியை பல்கலைக்கழகங்கள், கல்வியியல் அமைப்புகள் தீர்மானிப்பதற்குப் பதிலாக தற்போது பிஐஎஸ் தீர்மானிக்கும் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.