சான் பிரான்சிஸ்கோவில் அபெக் மாநாடு! அதுசரி, அபெக் என்றால் என்ன?

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் அபெக் மாநாட்டைப் பற்றி...
சான் பிரான்சிஸ்கோவில் மாநாட்டுப் பதாகை!
சான் பிரான்சிஸ்கோவில் மாநாட்டுப் பதாகை!

2011-க்குப் பிறகு முதன்முதலாக அபெக் -  ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் மாநாட்டை இந்த ஆண்டு அமெரிக்கா நடத்துகிறது.

பசிபிக் பிராந்தியத்தில் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதிப்பதற்காக இந்த அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள 21 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கூடுகின்றனர்.

நவ. 11 முதல் 17 வரையிலான இந்த மாநாட்டின் பல்வேறு செயற்பாடுகளும் தொடக்க நிலை உரையாடல்களும் நாடுகளின் பிரதிநிதிகளிடையே ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாநாடு ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் உள்ளபடியே அதையொட்டி நடைபெறும் தலைவர்களின் நேருக்கு நேரான சந்திப்பும் பேச்சுகளும்தான் மிகவும் முக்கியமானவை. இந்த மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் நேரடியாகச் சந்தித்து உரையாடவிருக்கிறார்கள்.

சீன – அமெரிக்க உறவில் இறுக்கமான சூழல், இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக நேரிட்டுள்ள உலகளாவிய தாக்கம், ரஷியாவின் உக்ரைன் ஊடுருவல் போன்றவற்றின் பின்னணியில் இந்த ஆண்டு அபெக் மாநாடு நடைபெறுகிறது.

அபெக் என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது?

பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளிடையே வணிகம், முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான அமைப்புதான் - அபெக் (APEC) -  ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு.

1989-ல் 12 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது ஆஸ்திரேலியா, புரூனை, கனடா, சிலே, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, நியுசிலாந்து, பப்புவா நியு கினியா, பெரு, பிலிப்பின்ஸ், ரஷியா, சிங்கப்பூர், சீன தைபே, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியத்நாம் என 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவிகிதமும் உலக வணிகத்தில் ஏறத்தாழ சரிபாதியும் இந்த நாடுகளில்தான் இருக்கின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உயர் பொருளாதார, அரசுத் தரப்பு உயர் அலுவலர்களும் கலந்துகொள்கிறார்கள். உக்ரைன் ஊடுருவல் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ரஷியாவிலிருந்து குறிப்பிடத் தகுந்த பிரதிநிதித்துவம் இருக்காதெனக் கருதப்படுகிறது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக பைடன் – ஜி சந்திப்பு கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் பாலியில் ஜி-20 மாநாட்டின்போது நேரில் சந்தித்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. இதனிடையே, இரு வல்லரசுகளுக்கும் இடையே நிறைய பதற்றமான விஷயங்கள் நேரிட்டுவிட்டன.

ஜி-20 மாநாட்டில் சந்தித்தபோது பைடன், ஜி
ஜி-20 மாநாட்டில் சந்தித்தபோது பைடன், ஜி

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கப் பகுதியில் பறந்த சீன உளவு பலூனை பைடன் நிர்வாகம் சுட்டு வீழ்த்தியது. வணிகத் துறை அமைச்சர் ஜினா ராய்மாண்டோவின் இமெயில்களை சீன அரசு ஊடுருவிப் பார்த்தது. சீனாவுக்கு திறன்மிக்க கம்ப்யூட்டர் சிப்களை அனுப்புவதற்குக் கட்டுப்பாடு விதித்ததுடன்,  சீனாவின் தாக்கத்தை – செல்வாக்கைத் தடுக்கும் நோக்கில் பிற நாடுகளுக்கு மேம்பாட்டு நிதிகளையும் அமெரிக்க அரசு வழங்குகிறது.

உக்ரைனில் ரஷியா நடத்தும் போரும் தாய்வான் வளைகுடாவில் சீனா அதிகரித்துவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இரு நாடுகளிடையே  வேற்றுமைகளை அதிகப்படுத்தியுள்ளன.

இரு நாடுகளின் உயர் அலுவலர்களும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தபோதிலும், பைடன் – ஜி சந்திப்பின் மூலம் இரு தரப்பு உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆற்றல் மிக்கதா, அபெக்?

அபெக்கின் செயல்பாட்டு எல்லை வரையறுக்கப்பட்ட ஒன்றே. வணிகம், பொருளாதாரம் பற்றி மட்டுமே அபெக் அக்கறை கொண்டிருக்கிறது. ராணுவம் சார்ந்த விஷயங்கள் பேசப்படுவதில்லை என்பதால் போரைப் பற்றியும் பேச்சு இருக்க வாய்ப்பில்லை.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், இந்த அமைப்பு உறுப்பு நாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதைவிட உறுப்பு பொருளாதாரங்களைக் கொண்டிருக்கின்றன என்பதுதான் சரி. மாநாட்டில் சீனாவின் ஆட்சியின் கீழ் உள்ள ஹாங்காங்கும் கலந்துகொள்கிறது. தன்னாட்சி நடத்துகிற தாய்வானும் பங்கேற்கிறது. இரு தரப்பையும் பங்கேற்க அனுமதிக்கிறது. மிக முக்கிய முன்முயற்சிகளில் நாடுகளை இணைந்து செயல்படச் செய்வதிலும் வணிக உறவுகளை இறுக்கமான ஒப்பந்தங்கள் எதுவுமின்றி எளிதாக்குவதிலும் கொண்டிருக்கும் திறனில்தான் அபெக்கின் பலம் இருக்கிறது. 

புகழ்பெற்ற டிரான்ஸ் – பசிபிக் பங்களிப்பிலிருந்து அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் விலகிய நிலையில், கடந்த ஆண்டு தொடங்கிய புதிய இந்திய – பசிபிக் வணிக உடன்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் மாநாட்டில் பைடன் விளக்க முனையலாம்.

தலைவர்களுக்கு முன்னதாகவே வந்துவிட்ட கண்டன பதாகைகள்!
தலைவர்களுக்கு முன்னதாகவே வந்துவிட்ட கண்டன பதாகைகள்!

உரசல்கள்

இந்த மாநாட்டிற்கென சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் இந்த மாநாடுகள் காணொலி வாயிலாகத்தான் நடைபெற்றது.

கடந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற அபெக் மாநாட்டில், பேத்தியின் திருமணம் காரணமாக பைடன் பங்கேற்கவில்லை. பதிலாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். மாநாட்டில் ரஷியப் பிரதிநிதி பேசத் தொடங்கியதும் உக்ரைனில் ரஷிய ஊடுருவல் என எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவும் மேலும் 4 நாடுகளும் வெளிநடப்புச் செய்தன.

2019-ல் மக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த மாநாட்டை சிலே நடத்தவில்லை. கடந்த ஆண்டு பாங்காக்கில் தாய்லாந்து நடத்தியபோது, ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் தாய்லாந்து பிரதமருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மாநாட்டில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பாக உரசல்கள் அதிகரிக்கலாம். இந்த மாநாட்டில் பங்குபெறும் நாடுகளுக்கு இவ்விஷயத்தில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. பொதுவாக, மாநாட்டின் முடிவில் கூட்டறிக்கை போன்ற அறிவிப்பு வெளியிடப்படும்; ஆனால், இந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஆண்டு அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அபெக் பேஷன்!

அபெக் மாநாட்டின் நிறைவில் ‘குடும்பப் புகைப்படத்’துக்காகத் தலைவர்கள் எல்லாரும் இணைந்து போஸ் கொடுப்பார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக, சியாட்டிலில் நடந்த மாநாட்டின்போது, கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் அணிந்துகொள்ள ஒரே மாதிரியான, அமெரிக்க போர் விமானிகள் அணிவதைப் போன்ற, தோலாலான மேற்சட்டைகளை வழங்கினார் அதிபர் பில் கிளின்டன். எல்லாரும் இவற்றை அணிந்து குழுப் புகைப்படத்துக்குக் காட்சி தருவார்கள். அவ்வப்போது இந்த மாதிரி ஒரேபாணி உடைகள் அணிவது நடந்துவந்திருக்கிறது. ஆனால், 2011-ல் அமெரிக்கா அழைத்த மாநாட்டின்போது, இந்தப் பழக்கத்தை அதிபராக இருந்த பராக் ஒபாமா தவிர்த்துவிட்டார். 

இந்த ஆண்டு அமெரிக்க அழைப்பின் பேரில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் அபெக் மாநாட்டிலும் தலைவர்கள் அனைவரும் – கருத்தொற்றுமை வருகிறதோ இல்லையோ, உடைகளிலேனும் ஒன்றுபட்டு - ஒரேமாதிரி உடையணிந்து காட்சி தருவார்களா? சஸ்பென்ஸ்!

சான் பிரான்சிஸ்கோவில் எதிர்ப்பாளர்கள்!
சான் பிரான்சிஸ்கோவில் எதிர்ப்பாளர்கள்!

மறுபக்கம்!

அபெக் மாநாட்டுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் வருவதற்கு முன்னதாகவே சான் பிரான்சிஸ்கோவில் எதிர்ப்பாளர்களும் திரண்டு பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரு நிறுவனங்களின் லாப வேட்டை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மோசமான பணிச்சூழல், இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிர்ப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக ஞாயிற்றுக்கிழமையே செயற்பாட்டாளர்கள் போராட்டங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் குழுவினர், நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் திரளும் நகரில், மாநாடு நடைபெறும் ஒரு வார காலமும் போராட்டங்களும் நடைபெறும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.