சிபிஐ, அமலாக்கத் துறைக்கு மேலே புதிய பதவி; சஞ்சய் மிஸ்ராவே தொடரச் செய்ய திட்டம்?

இந்திய தலைமை விசாரணை அதிகாரி  (சிஐஓ) என்ற பதவியை உருவாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
சிபிஐ, அமலாக்கத் துறைக்கு மேலே புதிய பதவி
சிபிஐ, அமலாக்கத் துறைக்கு மேலே புதிய பதவி
Published on
Updated on
2 min read


முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்), தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) போன்ற பதவிகளைப் போல் இந்திய தலைமை விசாரணை அதிகாரி  (சிஐஓ) என்ற பதவியை உருவாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அமலாக்கத் துறை - சிபிஐ ஆகியவற்றை கண்காணிக்கும் புதிய செயலாளர் அளவிலான பதவியை உருவாக்கி, உச்ச நீதிமன்றத்தால் பதவி நீட்டிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட சஞ்சய் குமார் மிஸ்ராவை புதிய சிஐஓவாக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயர்நிலை அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை (இடி) அதிகாரிகள் இந்திய தலைமை விசாரணை அதிகாரியின் (சிஐஓ) கீழ் பணியாற்றுவார்கள். அதாவது, முப்படைத் தளபதிகள் சிடிஎஸ் கீழும், இரண்டு புலனாய்வு அமைப்புகள் என்எஸ்ஏ கீழும் பணியாற்றுவது போல.

இந்த புதிய பதவியை உருவாக்கக் காரணம், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை குறிப்பாக நிதிச்சார்ந்த முறைகேடுகள் மற்றும் முறைகேடாக பணப்பரிமாற்றம் போன்ற வழக்குகளைத்தான் கையாள்கிறது. சிபிஐ அதிகாரிகள் ஊழல் மற்றும் பொருளாதாரக் குற்றங்களை கவனிக்கிறது.

ஒருவேளை, சிஐஓ பதவி உருவாக்கப்பட்டால், இரண்டு முகமைகளுக்கும் தேவையான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் செயலாளர்கள் அளவிலான புதிய பதவியாக இது இருக்கும் என்றும், அமலாக்கத்துறை இயக்குநராக பதவியில் இருந்து ஓய்வுபெறவிருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ரா இப்பதவியில் அமர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அமலாக்கத் துறை இயக்குநராக செப்டம்பர் 15ஆம் தேதி வரை தொடர சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  அதேவேளையில், ஒரு பதவியில் ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு முறை பதவி நீட்டிப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது முறையும் பதவி நீட்டிப்பு வழங்குவது சட்டவிரோதம் என்றும், அமலாக்கத் துறை இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாா் மிஸ்ராவை தவிர வேறு எவரும் இல்லையா? எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

கடந்த ஆண்டு அமலாக்கத் துறை இயக்குநராக சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மத்திய அரசு 3-ஆவது முறையாக நீட்டித்தது. இதற்கு எதிராக மத்திய பிரதேச மகளிா் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெயா தாக்குா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பது நாட்டின் ஜனநாயக நடைமுறையை அழிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘நிா்வாக காரணங்களால் சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையைத் தடுப்பதற்கான இந்தியாவின் சட்டங்களை, விரைவில் பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) மதிப்பீடு செய்ய உள்ளது.

அந்த மதிப்பீட்டில் இந்தியா சரிவை சந்திக்காமல் இருக்க அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவா் தொடா்வது மிகவும் முக்கியம். ஏனெனில் எஃப்ஏடிஎஃப்புடன் ஏற்கெனவே தொடா்பில் இருப்பவரே, அதை கையாள்வதற்கு பொருத்தமானவராக இருப்பாா். அதற்கான திறன் அந்தப் பொறுப்பில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகே பெறப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், அமலாக்கத் துறை இயக்குநராக பதவி வகிப்பவா் ஓய்வு பெறும் வயதை எட்டிய பின்னா், குறுகிய காலத்துக்குத்தான் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அத்துடன் சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் தெளிவாக குறிப்பிட்டது. இருப்பினும் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் குமாரின் பணியைச் செய்வதற்கு அமலாக்கத் துறையில் வேறு எவரும் இல்லையா? இந்த அளவுக்கு ஒருவா் தவிா்க்க முடியாத நபராக இருக்க முடியுமா? மத்திய அரசின் கூற்றுப்படி, அமலாக்கத் துறை இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாரை தவிர தகுதிவாய்ந்த நபா் எவரும் இல்லையா? அவரின் பதவி நீட்டிப்பு காலம் நிறைவடைந்த பின்னா் என்ன நடக்கும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த துஷாா் மேத்தா, ‘தவிா்க்க முடியாதவா் என்று எவரும் இல்லை. ஆனால், தற்போது உள்ளதைப் போன்ற சூழல்களில் ஒருவரே பதவியில் நீடிப்பது அவசியம்’ என்றாா். இதையடுத்தே, அவரது பதவிக் காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

எனவே, மிஸ்ராவின் பதவிக் காலம் செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவடையவிருப்பதால், அதற்குள், இந்த புதிய சிஐஓ பதவி, மத்திய அரசால் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல, அமலாக்கத் துறை, வழக்கம்ட போல மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் என்றும், சிபிஐ, தனிநபர், மக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறையின் கீழ் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளையில், இவ்விரு விசாரணை அமைப்புகளின் கண்காணிப்புப் பணிகளும் புதிய சிஐஓவுக்கு மாற்றப்படும். புதிய சிஐஓ, பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கைகளை அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.