அன்று தாக்குதல்!  இன்று எதிர்ப்பு!

அன்று தாக்குதல்! இன்று எதிர்ப்பு!

22 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலும் தற்போதைய எதிர்ப்புப் போராட்டமும் பற்றி...

டிச. 13, 2001!

சரியாக 22 ஆண்டுகளுக்கு முன், இதே நாள்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதந்தாங்கிய ஒரு கும்பல் – பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையினர் - நுழைந்து நடத்திய பெருந் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 6 பாதுகாப்புப் படை வீர்ர்கள் இறந்தனர்.

தாக்குதல் பகல் 11.40 மணிக்கு நடைபெற்றது. பயங்கரவாதிகள் 6 பேர் இருந்த டி.எல். 3 சிஜே 1527 என்ற எண்ணுள்ள வெள்ளை நிற அம்பாசடர் கார் நாடாளுமன்ற வளாகத்துக்குள் மிக வேகமாக நுழைந்தது. வி.ஐ.பி.க்கள் வரும்போது ஒலிக்கும் சைரன் இயக்கப்பட்ட நிலையில் படுவேகமாக உள்நுழைந்த அந்த காரில் நாடாளுமன்றம், உள்துறை அமைச்சகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

விஜய் சௌக் எதிரேயுள்ள வாயில் வழியே நுழைய முயன்றபோது எதிரே காரில் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணகாந்த் வந்துகொண்டிருந்தார். அவருடன் வந்த ஒரு காரின் மீது பயங்கரவாதிகளின் கார் மோதியது.

எச்சரிக்கையடைந்த காவல்துறையினர் காரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், திடீரென காரிலிருந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் அனைவரும் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். ஒளிந்தும் மறைந்தும் இரு தரப்பும் சுட்டுக்கொண்டனர். தாக்குதலுக்குப் பயங்கரவாதிகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தினர். உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டுவந்திருந்த பயங்கரவாதியொருவர் பிரதான வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளை முதலில் தடுத்துக் கேள்வி கேட்ட மத்திய கூடுதல் பாதுகாப்புப் படை பெண் காவலர் கமலேஷ் குமாரியை அந்த இடத்திலேயே தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டனர்.

குண்டுவெடிக்கும் சப்தம் கேட்டதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் உயிரைக் காத்துக்கொள்ள தப்பி பல்வேறு பகுதிகளுக்கும் ஓடினர். தாக்குதல் நடந்த நேரத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், பிரதமர் வாஜபேயி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டடத்துக்குள்ளே பாதுகாப்பாக இருந்தனர்.

பத்திரிகையாளர்களை உள்ளே வைத்து அவர்கள் அறையும் பூட்டப்பட்டுவிட்டதால், துப்பாக்கி சுடும் ஓசையைத் தவிர்த்து, வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

நாடாளுமன்ற வளாகத்துக்கு உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பொறுப்பேற்றது.

பயங்கரவாதிகள் வந்த காரில் ஆறு பேர் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நிலையில், மோதலில் 5 பேர் கொல்லப்பட்டுவிட, வளாகம் முழுவதும் ஆறாவது நபரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு எந்தவோர் அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. மோதல் முடிவுக்கு வந்ததென உறுதி செய்யப்பட்ட பின், நாடாளுமன்றத்துக்குள் இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும், நாடாளுமன்ற வளாகம் உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்  ராணுவமும் பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் நடந்த காலத்தில் மக்களவைத் தலைவராக அப்போது ஜி.எம்.சி. பாலயோகி இருந்தார். பிரதமர் வாஜபேயி, உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி.

மோதல் நடந்த பகுதியில் சீனத் தயாரிப்பான வீச்சு குண்டுகள், ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள், ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்கள் கிடந்ததாகப் பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரணை, கைது, வழக்கு, தண்டனை எல்லாமும் வரலாறு.

ஆபத்தான வழி!

இன்றைக்கு நடத்தப்பட்டது தாக்குதலைப் போலத் தெரியவில்லை, தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மிகவும் ஆபத்தான வழியை நாடியுள்ளனர் இந்தப் போராட்டக்காரர்கள். ஒருவேளை மக்களவை உறுப்பினர்களுக்கு நடுவே இவர்கள் இல்லாமலிருந்தால் நிச்சயம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

மக்களவைக்குள் நுழைந்தவர்கள் குதித்தோடி வண்ணப் புகையை வெளியிடச் செய்த நிலையில் என்ன நடக்கிறதென புரிந்துகொள்ள முடியா நிலைக்குத்  எம்.பி.க்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

சர்வாதிகாரம், அரசு அடக்குமுறை, வேலையின்மைப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்தே மக்களவைக்குள் இவர்கள் முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. வெளியே கைது செய்யப்பட்டவர்களும் இதே விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளதுடன் தாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்லர் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் இருவருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும், இவர்களது செல்போன்களை கண்டறியும் பணியில் காவல்துறை இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்ளே வந்தவர்களில் ஒருவர், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவிடம்தான் அனுமதிச் சீட்டைப் பெற்றிருக்கிறார்!

பிரச்சினை, தாக்குதலா? யார் இவர்கள்? என்பதில் அல்ல. மக்களவைக்குள்ளேயே நுழைந்து சிலரால் முழக்கமிட முடிகிறது. வண்ணப் புகையை வெளியிடச் செய்ய முடிகிறது என்பதுதான். இவர்களின் போராட்டம், நாட்டின் பாதுகாப்பு என்பதை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கிவிட்டிருக்கிறது என்பது மட்டும்தான் அதிர்ச்சியளிக்கும் விஷயம்!

ஆனால், எப்படிப் பார்த்தாலும் ஒரே நாளில் அகில இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதன் கவனத்தையுமே தங்கள் பக்கம் இந்தப் போராட்டக்காரர்கள் திருப்பிவிட்டிருக்கின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com