இந்த நாள்... அண்ணா பங்கேற்ற கடைசி விழா! சென்னையில் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு

கடைசியாக முதல்வர் அண்ணா பங்கேற்ற என்.எஸ். கிருஷ்ணன் சிலைத் திறப்பு விழா...
என்.எஸ். கிருஷ்ணன் சிலை
என்.எஸ். கிருஷ்ணன் சிலை

சென்னையிலுள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் சிலை, 1969 ஆம் ஆண்டில்,  இதே நாளில்தான் திறந்துவைக்கப்பட்டது.

இந்தச் சிலைத் திறப்பு விழாதான் அனேகமாக தமிழ்நாடு முதல்வராக இருந்த அண்ணா பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சியும்கூட.

மறைந்த திரைக் கலைஞர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்குச் சென்னை, தியாகராய நகரில் வாணி மகாலுக்கு அருகில் நான்கு சாலைச் சந்திப்பில் முழு உருவச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலைக்கான செலவினை இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.

இந்தச் சிலையை 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாள், பொங்கல் திருநாளில், முதல்வராக இருந்த அண்ணா திறந்துவைத்தார்.

அமைச்சராக இருந்த மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். வாசன், ஹிந்தித் திரைப்பட நடிகர் திலீப் குமார், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் அண்ணா பேசும்போது, தமது கலைத் திறமையைப் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் பயன்படு்த்திய வெறும் நடிகரல்ல என்.எஸ். கிருஷ்ணன், சமூகத்துக்குச் சேவையாற்றத் தம் கலைத் திறனை அவர் பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டார்.

மக்களை அவர் சிரிக்க வைத்தது மட்டுமின்றி சிந்திக்கவும், அந்தச் சிந்தனையின் பயனை எய்தும்படியும் செய்தார். அவர் சமூக சீர்திருத்த விஷயத்தில் முற்போக்குக் கருத்துள்ளவர் என்றும் அண்ணா குறிப்பிட்டார்.

விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய அமைச்சர் மு. கருணாநிதி, கலைவாணரின் ஆடம்பரமற்ற நன்கொடைப் பண்பைப் பாராட்டுவதாகவும் தமக்கென சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டவர் அவர் என்றும் குறிப்பிட்டார்.

சமூகத்தில் நடிகர்களுக்கு கௌரவமான இடம் கிடைப்பதற்காகப் பாடுபட்ட முன்னோடிகளில் கிருஷ்ணனும் ஒருவர் என்று எஸ்.எஸ். வாசனும் திலீப் குமாரும் குறிப்பிட்டனர். 

இந்தக் காலகட்டத்தில் உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுக்குமாறு அண்ணாவிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், இந்த சிலைத் திறப்பு விழாவில் வந்து கலந்துகொண்டார். இதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் அண்ணா கலந்துகொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com