"பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்'': நிர்மலா சீதாராமன் சிறப்புப் பேட்டி!

திராவிட மாடல்தான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்பது போன்ற பிம்பத்தை திமுக உருவாக்க முற்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"திராவிட மாடல்தான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்பது போன்ற ஒரு பிம்பத்தை திமுக உருவாக்க முற்படுகிறது. உண்மையில் அது பிரிவினை சிந்தனையைத் தூண்டுகிறது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

தமிழகத்தில் ஆளும் திமுக, தேசிய அளவில் "இந்தியா' கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தனியாகக் கூட்டணி ஏற்படுத்தியும் வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. முந்தைய தேர்தலில் தங்களுடைய கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது விலகி விட்டதால், அது மீண்டும் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும் என பாஜக மேலிடத்  தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இதற்கிடையே, திமுக மற்றும் அதிமுக தலைமைகளுடன் அவற்றின் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் நடத்திவரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டால் அவை அணி மாறி தேர்தல் களம் காணும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்தச் சூழலில் பெரிய கட்சியான அதிமுக இல்லாமல் பாஜக கூட்டணி சந்திக்கப் போகும் மக்களவைத் தேர்தல், அதற்கு உரிய பலனைத் தருமா, ஆளும் திமுகவின் திராவிட மாடல் பிரசாரத்துக்கு மாற்றுக் கூட்டணி அமைத்துள்ள பாஜகவின் உத்திகள்  ஈடுகொடுக்குமா,  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் போன்றவை தொடர்பாக தில்லியில் "தினமணி'க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார்.

தமிழகத்தின் மதுரையில் பிறந்து ஆந்திரத்தில் திருமணமாகி சமூக பணியாற்றிய நிர்மலா சீதாராமனின் புகுந்த வீடு, அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டது. இவரது மாமியார் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்தவர். 1970களில் இவரது மாமனார் ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றவர். 

லண்டனில் உள்ள வேளாண் பொறியாளர்கள் சங்கத்தில் பொருளியல் நிபுணருக்கு உதவியாளராக இருந்த அவர், தனியார் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகவும் சில காலம் பிபிசி ஊடகத்திலும் பணியாற்றினார். 

பிறகு தாயகம் திரும்பி சமூகப்பணிகளில் ஈடுபட்ட அவர், 2008-இல் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி சேர்ந்தார். ஊடகம் சார்ந்த பணிகளில் தனி கவனம் செலுத்திய அவர், கட்சியின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். 2014-இல் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அருண் ஜேட்லி நிதித் துறையில் இருந்து பாதுகாப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டபோது, இணை அமைச்சர் அந்தஸ்தில் இருந்த நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. 

2017இல் அருண் ஜேட்லி காலமானபோது அவர் வகித்து வந்த பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் வசம் ஒப்படைக்கப்பட்டு நாட்டின் முதலாவது முழு நேர பெண் பாதுகாப்பு அமைச்சராக விளங்கினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 20 நாட்களுக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து நிதித்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த முதல் பெண்மணியாக கருதப்பட்டார். 

2019-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது அமைந்த அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் முழு நேர நிதியமைச்சர் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற சாதனையிலும் இடம்பிடித்தார் நிர்மலா சீதாராமன். 

வெளிப்படையாக பேசும் இயல்பைக் கொண்ட இவர், நிதி அமைச்சர் பணிகளுக்கு இடையே தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் அரசியல் விவகாரங்களிலும் கவனம் செலுத்தி அங்குள்ள நிலைமை தொடர்பாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார். 

அந்த வகையில் தினமணிக்கு அளித்த பேட்டியின்போது அவர் மீது தமிழகத்தில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அவற்றுக்கு விரிவாக நிர்மலா சீதாராமன் அளித்த பதில்கள் இங்கே:

கே: இப்போது எதற்காக பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த "வெள்ளை அறிக்கை' வெளியிடப்பட்டிருக்கிறது?

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட உடைந்து போன வரிசையில் கீழ்நோக்கி ஐந்தாம் நிலையில் இருந்தது. பல்துறைகளும் சீரழிந்து போயிருந்தன.தவறான கொள்கையும் ஊழலும் மலிந்து காணப்பட்டன. அவை பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. உதாரணமாக, நிலக்கரி வளங்கள் ஏலமின்றியும் வேண்டியவர்களுக்கும் விதிகளை மீறியும் ஒதுக்கப்பட்டன. இதில் சீர்திருத்தம் செய்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவேன் என்று 2016இல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படியே தற்போது பதவிக்காலம் முடிவடையப்போகும் நிலையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 வருட செயல்பாடுகளுடன் தற்போதைய அரசின் 10 வருட செயல்பாடுகளை ஒப்பீட்டளவில் விளக்கி தேசம் எவ்வாறு வளர்ச்சிப்பாதைக்கு வந்துள்ளது என்பதை மக்களுக்கு வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளோம். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரதமராக மீண்டும் மோடி வருவது மாநிலக் கட்சிகளை பாதிக்கும்: ப.சிதம்பரம்

கே: மத்தியில் மூன்றாவது முறையாக தனது தலைமையிலான அரசுதான் அமையும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த  நம்பிக்கை உங்களுடைய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களாகவோ வரிச்சலுகைகளாகவோ பிரதிபலிக்கவில்லையே?

உண்மைதான். அடுத்து வரும் நமது ஆட்சியில் நாம் என்னவெல்லாம் செய்வோம் என்பதற்கான குறிப்பை மட்டும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலியுங்கள் என பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். ஆகவே, ஜனநாயக மரபின்படி ஜூலையில் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக ஒரு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். அப்போது நமது புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிப்போம் என்ற எண்ணத்தில்தான் புதிய அறிவிப்புகளை இடைக்கால அறிக்கையில் வெளியிடவில்லை. 

கே: தமிழகத்தில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ. 6.23 லட்சம் கோடி மத்திய அரசுக்குச் சென்றிருக்கிறது. மறைமுக வரி வருவாய் எவ்வளவு என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை. ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் 29 பைசாவைத்தான் திரும்பப் பெறுகிறோம் என மாநில நிதியமைச்சர் குற்றம்சாட்டுகிறாரே. உங்களுடைய விளக்கம் என்ன?

மாநில ஜிஎஸ்டி வசூலில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் மாநிலத்துக்கே செல்கிறது. சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி வருவாய்தான் மாநிலங்கள் இடையே பகிரப்படுபவை. இதில் விருப்பு, வெறுப்பு விளையாட்டுத்தனத்தை காட்ட வழியில்லை. வரியை உயர்த்தவோ குறைக்கவோ ஜிஎஸ்டி கவுன்சிலுக்கே அதிகாரமுண்டு. இது தவிர வசூலிக்கப்படும் செஸ் எனப்படும் மேல் வரி எந்த காரணத்துக்காக வசூலிக்கப்படுகிறதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த மத்திய அரசால் முடியும். இது தவிர மத்திய நிதியுதவி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி மாநிலங்களுக்கு குறைவின்றி வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மாநிலங்களை ஒரு தேசமாக மத்திய அரசு பார்க்கிறது. சென்னையில் கிடைக்கும் வரி வருவாயை அரியலூருக்கோ ராமநாதபுரத்துக்கோ வழங்கக்கூடாது என்று ஒரு மாநில அரசு பார்க்குமா? எந்தெந்த மாவட்டங்கள் பின்தங்கியுள்ளதோ அவற்றை வளப்படுத்த மற்ற மாவட்டங்களில் இருந்து மாநிலத்துக்கு கிடைத்த வரி வருவாய் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதை அறிந்தும் அறியாதது போல சிலர் பேசுவது பிரிவினைவாதத்தைத் தூண்டும் விவாதத்துக்கு ஒப்பானது. இது நாட்டுக்கும் மாநிலத்துக்கும் நல்லதல்ல. 

கே: தமிழக அரசியலில் அதிகமாக உங்களை கட்சி மேலிடம் முன்னிலைப்படுத்துவதை உங்களின் நேரடி அரசியலுக்கான வருகையாக கருதலாமா?

மத்திய அமைச்சரவையில் தமிழை நன்றாகப் பேசி, மக்களின் உணர்வையும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் பிரதிபலித்து விளக்கக் கூடியவர்களாக நானும் எல். முருகனும் இருக்கிறோம். இதில் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க வேண்டாம். 

கே: அதிமுக இல்லாத கூட்டணியில் சில கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்தித்தால் அதன் வாக்குகள் சுமார் 15 சதவீதம் உயரலாம். இதனால் வாக்குகள் சிதறி பலன் திமுவுக்கே போகும். உங்களுக்கு வெற்றி கிடைக்காது. தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு பரிசோதனை அவசியமா?

அதிமுக மட்டும் தான் எங்களுடைய கூட்டணியில் இருந்து செல்வதாக அறிவித்திருக்கிறது. மற்றபடி எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போதும் எங்கள் கூட்டணயிலேயே தொடர்கின்றன. எங்கள் கூட்டணியில் நீங்கள் இருக்கக் கூடாது என என்றுமே நாங்கள் சொல்லவில்லை. மத்திய அமைச்சர் அமித் ஷா கூட, அந்த எண்ணத்துடனேயே கூட்டணிக்கான கதவுகள் திறந்துள்ளன என தெளிவுபடுத்தினார். 2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த தேசம் ஆக வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும் என்ற பிரதமரின் விருப்பம் நிறைவேற நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்கு எதிராக களம் கண்டுள்ள இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இல்லையா என்பதே தெரியவில்லை. எனவே, தேச வளர்ச்சியில் பிரதமரின் தலைமையை ஏற்கும் எவரும் கூட்டணிக்கு வரலாம், அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்போம்.

கே: 'பிரதமர் மோடி' என்ற அடையாளத்தைத் தவிர பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வாக்காளர்களை ஈர்க்க பாஜக என்னென்ன உத்திகளை கையாளப்போகிறது?

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சியை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சென்று வருகிறோம். பிரதமரின் 10 வருட ஆட்சியில் அரசின் திட்டங்கள் சாமானியரிடம் சென்றடைந்ததை விளக்குவோம். உரிமை தங்களைத் தேடி வரும் என மக்கள் காத்திருந்த பல்லாண்டுகால வழக்கத்தை மாற்றி உரிமையைப் பெறும் அதிகாரம் மிக்கவர்களாக மக்களை ஆக்கியுள்ளோம். அடிப்படை வசதிகளான உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளோம். இதைத்தான் மோடியின் உத்தரவாதம் என அழைக்கிறோம். அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றிய நம்பிக்கையுடன் 2047-க்குள் தேசத்தை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா தற்போது ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. அதை மூன்றாம் நிலைக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் தரம் உயர்த்துவோம். உடைந்து போகும் நிலையில் கீழ் வரிசையில் ஐந்தாவதாக இருந்த தேசம் இப்போது தலைசிறந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் ஐந்தாவதாக மோடியின் தலைமையில் உள்ளது. இந்த சிறப்புகளை விளக்கி வாக்காளர்களை சந்திப்போம். 

கே: ஜாதி மற்றும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் சில கட்சிகளின் தேர்தல் உத்திகளுக்கு பாஜகவால் குறிப்பாக தமிழகத்தில் ஈடுகொடுக்க முடியுமா?

நாங்கள் ஜாதி அரசியலை மட்டுமின்றி வாரிசு அரசியல் மூலம் பதவிக்கு வருபவர்களையும் எதிர்க்கிறோம். இன்று தேசம் எப்படி இருக்க வேண்டும் என கனவு காணும் இளைஞர்களின் ஆசைகளை பிரதிபலிக்கக் கூடிய கட்சியாக இருக்க பாஜக விரும்புகிறது. தமிழகத்தில் சமீபத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக தேர்வாகியிருக்கிறார். அத்தகைய திறன்கள் பொதுச்சேவைக்கு வரும் ஜாதி, மத பேதமற்ற சூழலை உருவாக்க வேண்டும். ஆனால், அதற்கு முரணாக ஒரு கட்சியை ஒரு குடும்பம் மட்டுமே  கட்டுப்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. அதை அறவே மாற்றுவதுதான் பாஜகவின் நோக்கம்.

கே: ஆளுநர்கள் துணையுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு இடையூறு விளைவிப்பதாக தமிழகத்தில் ஆளும் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறதே...

சமீபத்தில் தமிழகத்தில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட அனுபவத்தை நானே நேரடியாக பெற்றிருக்கிறேன். வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டிய  ஆளுநர் விமர்சிக்கப்படுகிறார். இந்தியாவில் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில் தேசிய கீதத்தை ஆரம்பத்திலும் முடிவிலும் இசைப்பது அவர்களுக்கு அரசமைப்பு மூலம் அளிக்கப்பட்டுள்ள மரியாதை, ஆனால், தமிழகத்தில் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் என்றவாறு ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொண்டு பிறகு அதுதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என திணித்துள்ளனர். இந்த விஷயத்தில் மரபின்படியே செயல்பட ஆளுநர் வலியுறுத்துகிறார். பிரிவினைவாத சிந்தனையுடன் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக சில செயல்கள் நடக்கும்போது அதை ஒரு ஆளுநரால் எப்படி அங்கீகரிக்க முடியும்? ஆளுநருக்கும் முதல்வருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அதை இருவரும் பேசித் தீர்க்க வேண்டும். ஆனால்,ஆளுநர் பதவிக்குரிய மரியாதையை களங்கப்படுத்தியும் மரபு, மாண்பு போன்றவற்றை விருப்பத்துக்கு ஏற்றாற்போல மாற்றியும் இந்த விவகாரத்தை வீதிக்கு கொண்டு வந்து சர்ச்சையாக்குவது எந்த மாநிலத்துக்கும் நல்லதல்ல. 

கே: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறதே. உங்களுடைய விளக்கம்...

தன்னிச்சை அமைப்புகள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றன. எங்களுடைய ஆட்சியில் எத்தனை சோதனைகள் நடந்தன, எவ்வளவு பணம் முடக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பதை நாடாளுமன்றத்திலேயே பட்டியலிட்டேன். ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சோதனைகள் நடந்ததே தவிர மேல் நடவடிக்கைகள் என்ன என முடிவில் பார்த்தால் 'பூஜ்ஜியம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள் செல்வாக்கு செலுத்தப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டன. அதனால் நாங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். 

கே: தமிழகத்தில் "திராவிட மாடல்' முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கும் ஆளும் கூட்டணியை அண்ணாமலை என்ற ஒற்றை நபரின் உத்தியைக் கொண்டு எதிர்கொள்வது அத்தனை எளிதானது என கருதுகிறீர்களா?

எந்தவொரு உத்தியும் இரவோடு இரவாக தீர்வைக் கொடுக்காது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அதை ஆராய வேண்டும். ஏதோ இவர்களின் மாடல்தான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க திமுக முற்படுகிறது. உண்மையில் ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து மத எதிர்ப்பு, சில ஜாதிகள் எதிர்ப்பு, பிரிவினை சிந்தனை போன்றவற்றைத் தூண்டுவதுதான் இவர்களின் "திராவிட மாடல்'. தேசத்துக்கு எதிராக மக்களை பேச வைப்பது, வெறுப்புணர்வைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதுதான் அதன் முக்கிய அம்சங்கள். பள்ளி மாணவர்கள் இடையே வன்முறை, வேங்கைவயலில் மனித மலத்தை குடிநீர் தொட்டியில் போட்டது, ஆணவக் கொலை தொடருவது போன்றவை இதற்கு உதாரணம். இதுபோன்ற சம்பவங்களை தடுக்காமல் எதிர்மறை சக்திகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதுதான் இவர்களின் திராவிட மாடல். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கே: "ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற திட்டம் அவசியமானதா? தமிழக சட்டப்பேரவையிலும் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே...

திமுக தலைவர் கருணாநிதியே தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்து எழுதியிருக்கிறார். அவரது எண்ணத்தையும் அவரையும் நிராகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை ஒரு ஆச்சரியத்துடனே பார்க்கிறேன். ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவிக்காலத்துக்கு முன்பே கவிழ்ந்தால் மீதமுள்ள காலத்துக்கு யார் ஆட்சி செலுத்துவார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய அரசமைப்புப் பதவிகளில் இருந்தவர்கள் அடங்கிய குழுவில் உள்ளவர்கள் விவாதித்து பரிந்துரைப்பார்கள். அதற்கு முன்பாகவே ஒரு முடிவுக்கு வருவது சரியான நடைமுறை அல்ல. 

கே: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் உங்களுக்கு மீதம் இருந்தாலும் வரும் மக்களவை தேர்தலில் நீங்கள் தமிழகத்தில் போட்டியிடக்கூடும் என்று  பேசப்படுகிறதே...

அதில் உண்மையில்லை. எனது பிறப்பிடம் தமிழ்நாடு, புகுந்த இடம் ஆந்திரம். அதனால், இரண்டு மாநிலங்களிலும் எனது தனிக்கவனம் உள்ளது. அதை வைத்து அங்கு தேர்தலில் போட்டியிடுவேன்  என்பதெல்லாம் சரியல்ல. கட்சியில் இருந்தும் அப்படியொரு அறிகுறி எனக்கு வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.