ஹிமாசலில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா? உச்சகட்ட பரபரப்பு

ஹிமாசல் பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் சுக்விந்தர் சிங்
முதல்வர் சுக்விந்தர் சிங்

ஹிமாசல் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு, அமைச்சர் ராஜிநாமா, எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் என அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் போட்டியின்றி எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டாலும், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹிமாசல் பிரதேசத்தில் போட்டி நிலவியது.

கர்நாடகத்தில் 4 இடங்களுக்கு 5 வேட்பாளர்களும், உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்களும், ஹிமாசலில் ஒரு இடத்துக்கு இரண்டு வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர்.

கர்நாடகத்தில் பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் திட்டத்தை முறியடித்து தாங்கள் நிறுத்திய 3 வேட்பாளர்களையும் காங்கிரஸ் வெற்றி அடைய வைத்தது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா தேர்தல் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கூட்டத்தை 8 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். இதனால், சமாஜ்வாதி கட்சியின் 3 வேட்பாளர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

முதல்வர் சுக்விந்தர் சிங்
உ.பி., ஹிமாசல் மாநிலங்களவைத் தோ்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு: பாஜக வெற்றி

இந்த நிலையில், ஹிமாசல் பிரதேசத்தில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் ஆளும் காங்கிரஸால் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

ஹிமாசலில் மொத்தமுள்ள 68 எம்எல்ஏக்களில் காங்கிரஸுக்கு 40, பாஜகவுக்கு 25, சுயேச்சை 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு மாநிலங்களவை தொகுதிக்கு காங்கிரஸுக்கு போட்டியாக பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.

ஆனால், காங்கிரஸின் 6 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் காங்கிரஸ் வேட்பாளரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வியும், பாஜக வேட்பாளர் ஹா்ஷ் மஹாஜனும் 34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனா். பின்னா் குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்ட பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸின் முக்கியத் தலைவரான விக்ரமாதித்ய சிங், முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முதல்வர் சுக்விந்தர் சிங்
ஹிமாசல் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா!

இந்த நிலையில், சுக்விந்தர் சிங் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு வரும் பட்சத்தில், காங்கிரஸ் ஆட்சியை இழக்க அதிக வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் சேர்த்தால் பாஜகவுக்கு ஆதரவாக 34 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

பதவி விலகிய அமைச்சரும் அவரின் ஆதரவாளர்களும் பாஜகவுடன் கைகோர்க்கும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதி.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளர்கள் சிவக்குமாரும், பூபேந்தர் சிங் ஹூடாவும் சிம்லா விரைந்துள்ளனர்.

மேலிட பதிலுக்காக காத்திருப்பதாக விக்ரமாதித்ய சிங் தெரிவித்துள்ள நிலையில், ஹிமாசலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தே வேறு முதல்வர் மாற்றப்படுவாரா? அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஹிமாசலில் ஏற்பட்டுள்ள பிரச்னை காங்கிரஸ் தலைமைக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com