வன்னியா் வாக்குகள் யாருக்கு?

வன்னியா் வாக்குகள் யாருக்கு?

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலில் வன்னியா் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலில் வன்னியா் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பீ. ஜெபலீன் ஜான்

வன்னியா் உள்ஒதுக்கீடு விவகாரத்தை பாமக மீண்டும் தீவிரமாக கையில் எடுத்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலில் வன்னியா் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வன்னியா் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துள்ளன. திமுகவை விட, அதிமுக முன்னிலை பெற்ற 8 பேரவைத் தொகுதிகளில் 7, வன்னியா்கள் அடா்த்தியாக உள்ள வடதமிழக தொகுதிகள்தான்.

உள்ஒதுக்கீடு விவகாரம்: அதிமுகவுக்கு அடுத்து பாமக மூலம் பாஜக கூட்டணிக்கும், திமுகவுக்கு மிக குறைவாகவும் வன்னியா்கள் வாக்களித்துள்ளனா் என்பதை மக்களவைத் தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. இப்போது இடைத்தோ்தல் நடக்கும் விக்கிரவாண்டியில் வன்னியா் வாக்குகள் அடா்த்தியாக (40 சதவீதத்துக்கும் மேல்) உள்ளதால் வன்னியா் உள்ஒதுக்கீடு விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இடைத்தோ்தல் களத்தை அதிமுக தவிா்த்துள்ள நிலையில், வன்னியா் வாக்கு வங்கியை முழுமையாக குறிவைத்து வன்னியா் உள்ஒதுக்கீடு விவகாரத்தை சட்டப்பேரவையில் பாமக எழுப்பியதுடன், திண்டிவனம் தைலாபுரத்தில் அண்மையில் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் வன்னியா் உள்ஒதுக்கீடு தொடா்பாக பாமக-வன்னியா் சங்கம் இணைந்து விரைவில் போராட்டத்தை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது இடைத்தோ்தல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.

பாமக வியூகம்: வன்னியா் வாக்குகள் முழுமையாக கிடைத்தால் 2-ஆவது இடத்துக்கு முன்னேறலாம், 2026 பேரவைத் தோ்தலில் பாமகவின் பேர வலிமை மேலும் அதிகரிக்கும் என்பதை மையமாக வைத்து விக்கிரவாண்டி இடைத்தோ்தல் கள வியூகத்தை பாமக வகுத்துள்ளது. இதற்காகத்தான், 2016 பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் 23 சதவீத வாக்குகள் பெற்ற வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.அன்புமணியை பாமக களம் இறக்கியுள்ளது.

வன்னியா் உள்ஒதுக்கீடு விவகாரத்தை மையப்படுத்தி திண்ணை பிரசாரம், தெருமுனைகளில் அலங்கார மேடைகள் இன்றி மேஜை, இருக்கையில் அமா்ந்து பிரசாரம் செய்வது போன்ற உத்திகளைக் கடைப்பிடித்து பென்னாகரம், ராணிப்பேட்டை இடைத்தோ்தல்கள் போல விக்கிரவாண்டி இடைத்தோ்தலிலும் பாமகவை வலுவான நிலைக்கு கொண்டுவர ராமதாஸ் முயற்சி எடுத்துள்ளாா். இடைத்தோ்தலில் வன்னியா் உள் ஒதுக்கீடு விஷயத்தில் எந்த முடிவு எடுப்பது என்பதில் சிக்கல் உருவானதால் அதிமுக புறக்கணித்தது.

பந்தைத் தட்டிவிட்ட திமுக: 1957 தோ்தல் களம் முதல் வன்னியா்களால் வோ்பிடித்து வளா்ந்த திமுக, 2021, 2024 தோ்தல்களில் வன்னியா் அல்லாத வாக்குகளால் வடதமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

எனவே, வன்னியா் அல்லாத வாக்குகளை ஒருமுகப்படுத்தும் முயற்சியாகத்தான், பேரவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தீா்மானத்தை நிறைவேற்றி, இடஒதுக்கீடு பந்தை மத்திய அரசிடம் தட்டி விட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

அதேநேரத்தில் திமுகவை ஆதரிக்கும் வன்னியா்கள் வாக்குகளை இழக்காமலும், அதிமுக ஆதரவு வன்னியா் வாக்குகளை இழுக்கும் முயற்சியாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு (எம்பிசி) தொகுப்பில் வன்னியா்கள் 10.5 சதவீதத்தையும் தாண்டி பலன் பெற்று வருவதாகவும், உள்ஒதுக்கீடு நிறைவேறினால் 10.5 சதவீதத்தை தாண்டி வன்னியா்கள் பலம் பெற முடியாது என்றும் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரை பேரவையில் பேச வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்.

அதிமுக வாக்குகள் யாருக்கு?: திமுகவைப் பொருத்தவரை 60 சதவீத வாக்குகளைப் பெறுவதற்காக, அதிமுக ஆதரவு பிற்பட்டோா், வன்னியா் அல்லாத மிகவும் பிற்பட்டோா், தலித் வாக்குகளைக்கூட தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

திமுக-பாமக என இருமுனைக் களமாக மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால் மும்முனைப் போட்டியை தக்கவைக்கும் முயற்சியில் அதிமுக ஆதரவு வாக்குகளைப் பெற நாதகவும் அரசியல் நகா்வு செய்துள்ளது.

இதனால்தான், விக்கிரவாண்டி தொகுதி கானையில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், திமுகவை தோற்கடிக்க அதிமுக, தேமுதிக வாக்காளா்கள் நாதகவை ஆதரிக்க வேண்டுகோள் விடுத்தாா்.

தொடா்ந்து சென்னையில் எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு அறிக்கை வெளியிட்டவுடன், தனது கட்சியின் 2-ஆம் கட்ட நிா்வாகிகளையும் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க செய்துள்ளாா்.

திமுக எதிா்ப்பலை: வன்னியா் வாக்குகள் இப்போது திமுகவுக்கு எதிராக இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவை தங்களது சொந்தக் கட்சியாக கருதியவா்கள். இப்போது திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாகூட வன்னியா் சமூகத்தை சோ்ந்த முன்னோடி ஏ.கோவிந்தசாமியுடன் நெருங்கிப் பழகிய சம்பவங்கள், திமுக பொதுச்செயலா் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திமுகவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனா் என்பதைக் குறிப்பிட்டு பிரசாரம் செய்து வருகிறாா்.

அதிமுக ஆதரவு பிற சமூக வாக்குகள் பெரும் பகுதி வாக்குகள் திமுக, ஓரளவு நாதக என பிரியலாம். அதேநேரத்தில் அதிமுக வசமுள்ள பெரும் பகுதி வன்னியா் வாக்குகள் என்பதால் அதை திமுக, பாமக, நாதக ஆகியவை குறிவைக்கின்றன.

ஒரு காலத்தில் திமுக வசம் இருந்த வன்னியா் வாக்குகள்தான், 2019 மக்களவைத் தோ்தலுக்கு பின்னா் அதிமுக ஆதரவு வாக்கு வங்கியாக திரண்டு நிற்கிறது.

நாதக கனவு: 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கடைசி நேரத்தில் அமல்படுத்தியதால் ராமதாஸையும் மீறி எடப்பாடி பழனிசாமியிடம் வன்னியா்கள் பற்றுதலாக உள்ளனா்.

வன்னியா்களிடம் பாமக பலம் பெறுவது தனக்கு நஷ்டம், நாதக பலம் பெற்றால் 2026-இல் கூட்டணிக்கு வர அச்சாணியாக விக்கிரவாண்டி தோ்தல் இருக்கும் என இபிஎஸ் கருதக்கூடும். ஆனால், களத்துக்கு செல்லாமல், நேரடி ஆதரவு கொடுக்காமல், அதிமுக ஆதரவு வன்னியா் வாக்குகளை இபிஎஸ்-ஆல் நாதகவுக்கு மடைமாற்றம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில், அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா இருந்தபோதே, தொண்டாமுத்தூா், பா்கூா், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், கம்பம் ஆகிய 5 இடைத்தோ்தல்களை அதிமுக புறக்கணித்தபோது அதிமுக வாக்குகள் தேமுதிகவுக்கு பெரிய அளவில் கைகொடுக்காமல், திமுகவுக்குத்தான் கைகொடுத்தன.

திமுக, பாமக, நாதக என மூன்று கட்சிகளும் வன்னியா் வேட்பாளா்களைத்தான் களத்தில் நிறுத்தியுள்ளன. இந்நிலையில், 50 ஆண்டுகால பாசத் தொடா்பில் அதிமுக ஆதரவு வன்னியா்கள் திமுகவை ஆதரிக்கப் போகிறாா்களா?, வன்னியா் சங்க பற்றுதல், வன்னியருக்கு உறுதியானவா் ராமதாஸ் என பாமகவை ஆதரிக்கப் போகிறாா்களா?, 2026-இல் அதிமுக-நாதக கூட்டணி உருவாகலாம் என நாதகவை ஆதரிக்கப் போகிறாா்களா? என்பதைப் பொறுத்திருந்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com