மனைவிக்கு அதிகாரமளியுங்கள்: உச்ச நீதிமன்ற கருத்தின் சிறப்பம்சம்

மனைவிக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளியுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

விவாகரத்தான மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தீர்ப்பின்போது மனைவிக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளியுங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

விவாகரத்தான மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கோர முடியாது என்று கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண்கள் பராமரிப்புத் தொகை பெறுவதை சட்டம் தடுக்கவில்லை என்று தெரிவித்துவிட்டது.

முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறுவது என்பது விவாகரத்தான - மத வேறுபாடு இல்லாமல் - அனைத்துப் பெண்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்
குடிக்கும் தேநீரில் பூச்சிகொல்லியா? அடுத்த பயங்கரம்!

இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா, தீர்ப்புடன் சில கருத்துகளைப் பதிவு செய்தார். அதில், இந்திய கணவர்கள், வீட்டில் இருக்கும் மனைவிக்கு, குடும்பத் தலைவிகளுக்கு அதிகாரம் அளிக்க, பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கணவர்கள், தங்களது ஊதியத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் மனைவிகளுக்கு வழங்க வேண்டும். குடும்பத் தலைவிகள், தங்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான பணத்தை அவர்களுக்கென வழங்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக மனைவிக்கு அதிகாரமளித்தல் அவர்களை பாதுகாப்பாக உணரவைக்கும். பொருளாதார ரீதியாக அவர்களுக்கு அதிகாரமளிப்பது, மரியாதையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத் துறை! இதுவே முதல்முறை!!

அதாவது, திருமணமான பெண்கள், குறிப்பாக இந்தியாவில் வீட்டை பராமரிக்கும் பெண்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறாததால், அவர்களது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் கூட அவர்கள் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

எனவே, திருமணமான இந்திய ஆண்கள், தங்களது மனைவிகளுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளித்து அவர்களிடம் போதிய அளவில் பணம் இருப்பதை உறுதி செய்துகொண்டு, அவர்களது தனிப்பட்ட தேவைகளை அவர்களே பூர்த்திசெய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவிகள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம், அல்லது பகுதியாக செயல்படலாம், ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களின் பொருளாதார நிலையானது எப்படி இருக்கிறது? அவரது ஒட்டுமொத்த பொருளாதார தேவைக்கும் அவர் கணவரையோ அல்லது குடும்பத்தையோ தானே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது? என்று நீதிபதி பி.வி. நாகரத்தினா, அளித்த தீர்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய குடும்பத் தலைவிகள், தங்களது கணவர் மற்றும் பிள்ளைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், கவனிப்பு ஆகியவற்றை பொழிய வேண்டும், ஆனால் அதற்கு கைம்மாறாக பொருளாதார அதிகாரத்தையோ, கணவர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து உரிய மரியாதையையோ, பொருளாதார பாதுகாப்பையோ அவர் எதிர்பார்க்கக் கூடாது, என்று இந்த சமுதாயம் பெண்களை நம்பவைப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

அதாவது, ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவுத் தொகையில்தான், அந்தக் குடும்பத்தின் பெண்கள் மிச்சம் பிடித்து, அதில் அதிகபட்சமான தொகையை சேமித்து, அதிலிருந்தே தங்களது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்துகொண்டு, கணவர் அல்லது குடும்பத்தாரிடம் எந்தத் தேவைக்காகவும் பணத்தைக் கேட்டுப் பெறாத பெண்களே மிகச் சிறந்த குடும்பப் பெண்கள் என்று சமுதாயம் பெண்களை நம்பவைக்கிறது.

பெரும்பாலான இந்திய திருமணமான ஆண்கள், குடும்பத் தலைவிகளின் சில முக்கியத் தேவைகள் கூட, எந்த பரிசீலனையும் இல்லாமல் கணவர் அல்லது கணவர் குடும்பத்தாரால் நிராகரிக்கப்படலாம் என்பதையோ, வேலைக்குச் செல்லாமல் வீட்டைப் பராமரிக்கும் பெண்கள், உணர்வுபூர்வமாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தாரைத்தான் சார்ந்திருக்கிறார்கள் என்பதையோ அதிலிருக்கும் சிக்கல்களையோ பெரும்பாலான கணவர்கள் உணர்ந்திருப்பதே இல்லை என்றும் நீதிபதி நாகரத்தினா சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com