
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்த பிறகும், நேற்றைய வாக்குப்பதிவின்போது அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதன் மூலம், அதிமுகவுக்கு விக்கிரவாண்டி வாக்காளர்கள் சொல்லும் பாடம் என்ன என்று ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த 2021 பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான 82.45% வாக்குகளை விட புதன்கிழமை நடந்த வாக்குப்பதிவின்போது 82.48% வாக்குகள் பதிவாகியிருந்ததால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு களத்திலும், வாக்காளர்களின் மனநிலையிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கருதப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. இதில், ஆளும் திமுக அரசு செய்த முறைகேடுகள் மீண்டும் நிகழும் என்று குற்றம்சாட்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அறிவித்திருந்தது. தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை, அதிமுக தொண்டர்களும் புறக்கணிப்பாளர் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.
அதாவது, அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அணியினருக்குள், நல்ல இணக்கத்தை ஏற்படுத்தி, ஒன்றுசேர வேண்டும் என்ற குரல்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது சொந்த கட்சிக்குள், இந்த விவகாரத்தில், ஆதரவாளர்களின் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், விக்கிரவாண்டியில் உள்ள அதிமுக, ஆதரவாளர்கள் இடைத்தேர்தலில் வாக்களித்திருப்பது, அதிமுகவைத் தவிர்த்து அவர்கள் பிற கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற போக்கு, அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக, பாஜக ஆதரவில் பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒருபக்கம், இந்த தேர்தல், அதிமுக வாக்குகளை பெறுவதில் பாஜக வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பதற்கான சோதனை முயற்சியாகவும் அமைந்துள்ளது.
அதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததுமே, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நேரடியாகவே கேட்டுக்கொண்டார். அதுபோல, பாமக தலைவர்களும் அதிமுக தொண்டர்கள் பொதுவாக எதிரியான திமுகவை வெல்ல பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எனவே, தற்போது அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதால், அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
ஆனால், அரசியல் நிலவரங்கள் சொல்வது என்னவென்றால் திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவருமே அதிமுகவின் வாக்குகளை சற்றேறக்குறைய பெற்றிருப்பார்கள. குறிப்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மற்ற வேட்பாளர்களை விட இளைஞர்களின் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்குமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை வாக்காளர்கள் பெரிதுப்படுத்தவில்லை என்பதும் அதிக வாக்குப்பதிவு காட்டுகிறது என்றே கூறப்படுகிறது. அதுபோல, எப்போதும் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடைத்தேர்தலுக்குத் தொடர்பிருக்காது என்பதே வரலாறு.
2015ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தபோது கூட 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், அதற்காக திமுக ஆதரவாளர்கள், திமுக தலைமையின் பேச்சைக் கேட்கவில்லை என்று அர்த்தமாகாது, அதுபோலத்தான் விக்கிரவாண்டியிலும் அதிமுக ஆதரவாளர்கள், களத்தில் இருக்கும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்திருப்பார்களே தவிர, அதற்கு அதிமுக தலைமையின் அழைப்பை கேட்கவில்லை என்று அர்த்தமாகாது என்றே கூறப்படுகிறது.
அதுபோல, விக்கிரவாண்டியில் அதிமுக ஆதரவாளர்களுக்கு அதிமுக தலைமை எந்த அறிவுறுத்தலையும் அதிகாரப்பூர்வமாக அனுப்பவில்லை. இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று மட்டுமே அறிவித்திருந்தார். இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும், ஒருவேளை, கட்சித் தலைமை, யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று சொல்லி, வாக்குப்பதிவு அதிகரித்திருந்தால்தான் அது பேசுபொருளாகியிருக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.