
இந்திய அரசியலில் தலைவர்களும் தொண்டர்களும் கட்சி மாறுவதும் மீண்டும் சேர்ந்துகொள்வதும் அதிசயமான ஒன்றல்ல, காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைதான். ஆனால், ஒரு கட்சி நிறுத்தியுள்ள ஒட்டுமொத்த வேட்பாளர்களில் நால்வரில் ஒருவர் கட்சி மாறியவர் என்றால்...
இந்திய மக்களவைத் தேர்தலில் இவ்வாறு கட்சி மாறி வந்தவர்களுக்குத் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடத் தாராளமாக வாய்ப்புத் தந்திருப்பது ஏதோ ஒரு மாநிலத்திலுள்ள சிறியதொரு கட்சி அல்ல, தற்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிதான்!
அகில இந்திய அளவில் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் ஏறத்தாழ 25 சதவிகிதத்தினர் – கால் பங்கு – 435 வேட்பாளர்களில் 106 பேர், கடந்த பத்தாண்டுகளில் ஏதோவொரு காலகட்டத்தில் கட்சி மாறி பாரதிய ஜனதாவில் சேர்ந்தவர்கள். இவர்களிலும் 90 பேர் கடந்த 5 ஆண்டுகளில் வந்து இணைந்தவர்கள்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 19 வேட்பாளர்களில் (பெரம்பலூர் டி.ஆர். பாரிவேந்தர், வேலூர் ஏ.சி. சண்முகம் போன்ற தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் பிற கட்சி வேட்பாளர்கள் சேர்க்கப்படாமல்) அனேகமாக 8 பேர் பிற கட்சியிலிருந்து பாரதிய ஜனதாவில் இணைந்தவர்கள்.
அதிமுகவிலிருந்து வந்தவர் திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன். அதே அதிமுகவிலிருந்து வந்தவர்தான் கரூரில் போட்டியிடும் வி.வி. செந்தில்நாதன், காங்கிரஸிலிருந்து த.மா.கா. வழியே இணைந்தவர் கிருஷ்ணகிரி வேட்பாளரான சி. நரசிம்மன். தனியொரு கட்சி நடத்தி வந்தவர் வடசென்னை ஆர்.சி. பால் கனகராஜ், அதிமுகவிலிருந்து திமுக வழியே வந்தவர் நாமக்கல்லில் போட்டியிடும் கே.பி. ராமலிங்கம், சிதம்பரத்தில் போட்டியிடும் பி. கார்த்தியாயினியும் அதிமுகவிலிருந்து வந்தவரே. நாகப்பட்டினத்தில் போட்டியிடும் எஸ்.ஜி.எம். ரமேஷ் கோவிந்த், அதிமுகவிலிருந்து வந்தவர். மறைந்த இவருடைய தந்தை எஸ்.ஜி. முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர். விருதுநகரில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், கணவருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.
ஆந்திரத்தில் போட்டியிடும் 6 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் 2019-க்குப் பிறகுக் கட்சி மாறி பாரதிய ஜனதாவுக்கு வந்து சேர்ந்தவர்களே. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டுமல்ல, இப்போதைய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்.
தெலங்கானாவில் இன்னும் சூப்பர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களில் ஏறத்தாழ மூன்றில் இரு பங்கினர், மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். பாரத் ராஷ்டிர சமிதியிலிருந்து, காங்கிரஸிலிருந்து வந்தவர்கள். கட்சி மாறிவந்த 11 வேட்பாளர்களில் 6 பேர், தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்துகொண்டவர்கள்.
செல்வாக்கு வைத்துக் கொண்டிருக்கும் ஹரியாணாவில்கூட 10 வேட்பாளர்களில் 6 பேர், 2014-க்குப் பிறகு கட்சி மாறி வந்தவர்கள்தான். இவர்களில் நவீன் ஜிண்டாலும் அசோக் தன்வரும் கடைசி நேரத்தில் இடம் பிடித்தவர்கள்.
பஞ்சாபில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அண்மைக் காலம் வரையில் பிற கட்சிகளிலிருந்து இருந்துவிட்டு வந்து சேர்ந்தவர்கள்தான். சிலர் காங்கிரஸில் இருந்தவர்கள், காங்கிரஸிலிருந்து அமரீந்தர் சிங்குடன் விலகி வந்து ஐக்கியமானவர்கள்.
ஜார்க்கண்டிலும் இதே கதைதான், பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 13-ல் 7 பேர், மற்ற கட்சிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் – காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என.
மிக அதிகளவில் கட்சி மாறியவர்கள் இடம் பெற்றிருப்பதுகூட பாரதிய ஜனதா கட்சி மிகவும் செல்வாக்குடன் இருப்பதாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில்தான். இங்கே போட்டியிடும் 74 பா.ஜ.க. வேட்பாளர்களில் 23 பேர், 2014-க்குப் பிறகு கட்சியில் வந்து இணைந்தவர்கள் – 31%!
ஒடிசாவில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களும் தமிழ்நாட்டில் கால் பங்கு வேட்பாளர்களும் கட்சி மாறி வந்தவர்களே. மேற்கு வங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் ஏறத்தாழ கால் பங்கினர் கட்சி மாறியவர்களே. கட்சியின் வலுவான மாநிலமான குஜராத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில்கூட இருவர், 2014-க்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்கள்தான்.
ஆந்திரத்தில் 6-ல் 5, தெலங்கானாவில் 17-ல் 11, ஹரியாணாவில் 10-ல் 6, பஞ்சாபில் 13-ல் 7, ஜார்க்கண்டில் 13-ல் 7, உத்தரப் பிரதேசத்தில் 74-ல் 23, ஒடிசாவில் 21-ல் 6, தமிழ்நாட்டில் 19-ல் 8, மகாராஷ்டிரத்தில் 28-ல் 7, மேற்கு வங்கத்தில் 42-ல் 10, பிகாரில் 17-ல் 3, கர்நாடகத்தில் 25-ல் 4, கேரளத்தில் 16-ல் 2, ராஜஸ்தானில் 25-ல் 2, குஜராத்தில் 26-ல் 2, மத்தியப் பிரதேசத்தில் 29-ல் 2, பிற மாநிலங்களில் 54-ல் 4.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் மட்டும்தான் கட்சி மாறி வந்தவர்கள் போட்டியிடுகிறார்களா? பிற கட்சிகளிலும்தான் போட்டியிடுகிறார்கள், ஆனால், இந்த அளவுக்கு இல்லை. மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக ஆளும் கட்சியாக இருப்பதால் பல்வேறு காரணங்களுக்காகவும் வேறு பல கட்சிகளிலிருந்து ஏராளமானோர் பாரதிய ஜனதாவில் இணைந்துவிட்டனர்.
ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களில் பலரும் பாரதிய ஜனதாவில் இணைந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள் என்றும் ஊழல் கறையைக் கழுவும் வாஷிங் மெஷினைப் போல ஆளும் பாரதிய ஜனதா செயல்படுவதாகவும் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கட்சி மாறி பாரதிய ஜனதாவுக்கு வந்தவர்களில் எத்தனை பேர் மக்களவைக்குச் சென்று சேரப் போகிறார்கள் என்பது வரும் ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.