அன்று, இன்று என்று தள்ளிப்போய்க்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுத் தேதியை அறிவித்து விட்டார் கட்சித் தலைவரும் ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி வரை ஊதியம் பெறுவதாகக் கூறப்படும் நடிகருமான விஜய்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை கிராமத்தில் அக். 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெறும் என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
இந்தத் தேதியைக் கட்சியில் யார் யாரெல்லாம் ஆலோசித்து முடிவு செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை; தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், மாநாட்டை முடிவு செய்தவர்கள் நாள்காட்டியை ஒரு முறை ‘சும்மா’ புரட்டிப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும், அடுத்த நாலாவது நாளில், அக். 31, வியாழக்கிழமை தீபாவளி!
இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் தீபாவளி மனநிலையில்தான் இருப்பார்கள். தீபாவளி விற்பனையை இலக்காகக் கொண்டு சிறு தொழில்கள் அனைத்தும் முனைப்பாக இருக்கும். தீபாவளி விற்பனைக்காக ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும், சிறிய துணிக் கடைகளும்கூட முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். அதிகபட்ச விற்பனை இந்த நாள்களில்தான் நடைபெறும். மக்களும் முனைப்பான பர்ச்சேஸில் இருப்பார்கள்.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும்கூட தீபாவளி கொண்டாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். அல்லது உறுதியாக தீபாவளி சீசனில் விற்பவர்களாகவோ, வாங்குபவர்களாகவோ இருப்பார்கள். இந்தக் காலத்தில்தான் சிறுவியாபாரிகளாலும் அவர்களை நம்பி இருப்பவர்களாலும் ஓரளவு சம்பாதிக்கவும் முடியும்.
இந்த நிலைமையில் தீபாவளி பற்றியோ, மக்களின் மனநிலை பற்றியோ கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டு நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள நடிகர் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் ‘தலைமேல்’ தீபாவளியை வைத்துக்கொண்டு தீபாவளி வேலைகளை அல்லது பிழைப்பை எல்லாம் விட்டுவிட்டு மாநாட்டுக்குத் திரண்டு வருவார்களா?
வரலாம், வரட்டும்!
ஆனால், இதைத் தவிர, விக்கிரவாண்டி அருகே இந்த நாளில் இந்த மாநாட்டை நடத்துவதில் சாதாரண பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இன்னொரு பெரும் பிரச்சினையும் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் 21 கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெற்றிருக்கும் காவல்துறை, இந்தக் கேள்விக்குப் பதிலைப் பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை. உள்ளபடியே இது காவல்துறை கவலைப்பட வேண்டிய விஷயம்!
சாதாரணமாகவே சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் கார்களில் சென்றுவருகின்றனர். இதனால், விக்கிரவாண்டி, பரனூர் உள்பட சோதனைச் சாவடிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
வழக்கமாகத் தீபாவளி, பொங்கல் விடுமுறைக் காலத்தில் சென்னை மாநகரமே கிட்டத்தட்ட காலியானதைப் போல லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவார்கள். வரும் தீபாவளி வியாழக்கிழமை என்கிற நிலையில் முன்னதாகவே தென் மாவட்டங்களுக்குச் செல்வோரில் கணிசமானோர் இந்த மாநாடு அறிவிக்கப்பட்டுள்ள சனி - ஞாயிற்றுக்கிழமைகளில்தான் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த மாநாடு நடைபெறும் வி. சாலை என்ற இடமோ தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையையொட்டி விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு அருகேதான் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமிருந்து மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் – தலைவர்கள் வாகனங்களும், சென்னையிலிருந்து சென்று - வரும் பொதுமக்களின் வாகனங்களுமாகச் சேர, இந்தப் பகுதியில் மிக மோசமான வாகன நெரிசல் நேரிட்டால் வியப்பதற்கில்லை.
எந்த அரசியல் ஆலோசகர்களுடைய யோசனையோ இந்தத் தேதி? விஜய் கட்சியின் மாநாட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், இந்த நாளில் மாநாட்டை நடத்தினால் எப்படி வெற்றி பெறும் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
திரைப்படத் துறையினர் என்பதால் கட்சியின் மாநில மாநாட்டையும் திரைப்படம் போலவே தீபாவளிக்கு முன்னால் ரிலீஸ் செய்யலாம் என நினைத்துவிட்டார்கள் போல என்று பல்வேறு அரசியல் கட்சி வட்டாரங்களும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டிருக்கின்றன.
போக்கிரி என்றொரு படத்தில் ஒரு டயலாக் சொல்வார் நடிகர் விஜய் - ‘ஒருவாட்டி நான் முடிவு செய்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.’ இந்த ‘தீபாவளி ஸ்பெஷல்’ மாநாட்டு விஷயத்தில் விஜய் என்ன செய்யப் போகிறார்? அறிவித்தபடி அக். 27-ல் மாநாடு நடைபெறுமா? அல்லது நிதானமாக சாதக, பாதகங்களைச் சிந்தித்துத் தள்ளிவைக்கப்படுமா?