

நாட்டின் தலைநகர் தில்லி என்ற நிலைமை மாறி, மிக மோசமான காற்று மாசுவின் தலைநகராக மாறிவிட்டது. தலைநகர் தில்லியை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சென்னையும் அந்த நிலைக்கு மாற வெகு காலம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
சென்னையில் வெறும் தீபாவளி மற்றும் போகிப் பண்டிகையன்று காற்று மாசடைந்து காணப்படும். அந்த ஒரு சில நாள்களே நம்மால் மூச்சு விட முடியாமல் திணறும் நிலை ஏற்படும். இதுவே ஆண்டு முழுவதும் என்றால் எப்படி இருக்கும்?
நிலைமை மோசமடைந்த பிறகு என்ன செய்தாலும் அதனை பழைய நிலைமைக்கு மாற்ற முடியாது என்பதை கண்கூடாக தில்லி விவகாரத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே, சென்னைக்கு அந்த நிலை ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
சென்னையின் காற்றின் தரம் ஒன்றும் மிக நல்ல அளவில் எல்லாம் இல்லை. சென்னையில் டிசம்பர் மாத மத்தியில் பல்வேறு காற்றின் தரக் கட்டுப்பாட்டு நிலையங்களில் நல்லதல்ல மற்றும் மிக நல்லதல்ல என்ற அளவுக்கு அதாவது 150 - 250 என்ற புள்ளிகளைத் தொட்டுவிட்டது.
தில்லியில் பல்வேறு காரணிகளால் அங்குள்ள காற்றின் தரக் குறியீடு 300 - 400 வரை உள்ளது. கடந்த ஞாயிறன்ற ஒருசிலப் பகுதிகளில் 500 புள்ளிகள் வரை தொட்டுவிட்டது. அப்படியென்றால் அங்கு நிலைமை எவ்வளவு மோசம் என்பதை சென்னை மக்களால் நிச்சயம் உணர முடியும்.
தனிநபர்களுக்கானது..
மக்கள், வேலைக்குச் செல்வது போன்ற நேரங்களைத் தவிர்த்து முடியுமான நேரங்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.
புதிய வாகனங்கள் வாங்கும்போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குவது சாலச் சிறந்தது.
குறிப்பாக கார்களைத்தான் சொல்ல வேண்டும். அலுவலகத்துக்கு நாள்தோறும் தனி நபர்கள் காரில் செல்வது வழக்கம். ஆனால் கூடுமான வரை கார் வாங்கிவிட்டோம், அலுவலகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறோம் என்பதற்காக மட்டும் காரில் செல்வதாக இருந்தால் வாரத்தில் ஒரு சில நாள்களாவது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தலாம்.
அதாவத, தனிநபர்கள் கார்களில் பயணிப்பதுதான், போக்குவரத்து நெரிசலுக்கான மிக முக்கியக் காரணியாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மறைமுகமாகவும் நேரடியாகவும் காற்று மாசை ஊக்குவிக்கின்றன.
வீடுகளில் காற்று சுத்திகரிப்பான்களை வாங்கிப் பயன்படுத்தும்போது, காற்றில் கலந்திருக்கும் மாசினைப் பிரிக்க உதவும்.
முடிந்த அளவுக்கு வீடு மற்றும் காலி இடங்களில் மரக் கன்றுகளை நடலாம்.
மரக் கன்றுகளை நடும் இயக்கங்களில் இணைந்து இந்த பூமியில் ஒரே ஒரு மரமாவது நம் நட்டு வளர்ந்ததாக இருக்கலாம்.
இப்போதிருக்கும் நிலைமையில் தனித்தனியாக மரம் வளர்ப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லை, சிலருக்கு சாத்தியமானால் அதனை செய்யலாம்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கட்டுமானப் பணிகளின்போது உருவாகும் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் சாலைகள் அமைப்பது மற்றும் கட்டுமானப் பணிகளின் மாசுபாடுதான் 28 சதவிகித காற்று மாசுவுக்குக் காரணமாக உள்ளது.
எனவே, கட்டடங்களை இடிக்கும்போது அதன் மீது தண்ணீர் ஊற்றுவது மற்றும் பச்சை வலைகளைப் போட்டு காற்று மாசைக் குறைப்பது போன்றவற்றை பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையை தமிழக அரசு ஏற்கனவே சிறப்பாகவே செய்து வருகிறது. எனினும், வருங்கால காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய முயற்சிகளைக் கையாள வேண்டும்.
ஓரிடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றால், அதற்கான முழு முதற் காரணியாக இருப்பது அலுவலக மற்றும் தொழிற்சாலை நேரமாக இருக்கலாம்.
அந்த வேளைகளில் ஒரே பகுதியில் இயங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆலோசித்து இயங்கும் நேரங்களை சற்று மாற்றியமைக்க ஆலோசனை அல்லது வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
சாலைகளை ஏனோதானோ வென்று போடாமல், ஒரு முறை சாலைகளைப் போட்டால் ஒரு சில மாதங்கள் வரையிலாவது சேதமாகாமல் இருக்கும் வகையில் போட்டாலே, போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இதனால் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு தவிர்க்கப்படும்.
திடக்கழிவுகளை சுத்திகரிப்பது அல்லது அகற்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். குப்பைகளை எரிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். மக்கள் யாரும் எரிக்காமல் தடுக்க வேண்டும்.
தனி மனிதர்களால் முடியாது என்றாலும், தமிழக அரசால் முடியும் அளவுக்கு ஏரிக்கரைகள் மற்றும் விளைநிலங்கள் அருகே, சாலையோரங்களில் மரங்களை நடுவதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் இயக்கங்களை அதிகரிக்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் மரம் நடுதல் மற்றும் அதற்கு தண்ணீர் ஊற்றுவதை ஏற்கனவே செய்து வந்தாலும் மேலும் அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
அவ்வப்போது வாகன காற்று மாசுபாட்டை அளவிட்டு, மிகப் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை புழக்கத்திலிருந்து குறைத்து, மின்சார வாகன விற்பனையை அதிகரிக்க கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில், காற்றின் தரக் குறியீட்டைக் காட்டும் அளவீட்டு மையங்களை வைத்து மக்களுக்கும் அதனை தெரிவிக்க வேண்டும்.
இது மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும், பூங்காக்களிலும் காற்றுமாசு குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
இதையும் படிக்க... ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி! வரலாறு காணாத உச்சம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.