

பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தாமல் இருக்கும் பழைய வங்கிக் கணக்குகளில் எடுக்கப்படாமல் இருக்கும் பணத்தை எடுத்துவிட்டு, வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.
உங்கள் பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி (RBI) உங்களுக்கு உதவும் என்று மக்களுக்கு குறுந்தகவல்கள் வாயிலாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
மத்திய ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வங்கிக் கணக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கலாம்.
ஒருவேளை அந்த வங்கிக் கணக்கில் ஒரு தொகை எடுக்கப்படாமல் விடுபட்டிருந்தால், அந்த நிதி ரிசர்வ் வங்கியின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் வரவு வைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திரும்பவும் கோரும் உரிமை உங்களுக்கு இப்போதும் உள்ளது.
அதற்கு முதலில், வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புத் தொகைகளைச் சரிபார்க்க https://udgam.rbi.org.in என்ற இணையதளம் சென்று உங்கள் விவரங்களை அளித்து உறுதி செய்து கொள்ளலாம்.
பிறகு, ஒருவர் கணக்கு வைத்திருந்த வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லலாம். உரிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அங்கு, வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் கேஒய்சி (KYC) சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்கள் தேவைப்படும்.
கேஒய்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள். தகுதிவாய்ந்த வங்கிக் கணக்காக இருந்தால், அந்தத் தொகை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்கப்படும்.
உங்களுக்குத் தேவையில்லை எனில், அந்த வங்கிக் கணக்கை நிரந்தமாக மூடிவிடலாம்.
பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புகளைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் 2025ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடக்கின்றன.
எனினும், இது தொடர்பாக எந்த வங்கியிலிருந்தும் பயனர்கள் அழைக்கப்பட மாட்டார்கள். இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டில், வங்கிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் தொகை மட்டும் ரூ.1.84 லட்சம் கோடி என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் தொகை தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் திரும்பப் பெற சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. உரிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்தக் கிளையிலும் பணத்தைத் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.