கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

1975 ஆம் ஆண்டு பிறந்த நாளில் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டுப் பொன் விழா காணும் சமூக நலத் திட்டங்கள் பற்றி...
m karunanidhi birth day celebration
பிறந்த நாள் கலைஞர்!
Published on
Updated on
3 min read

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு. கருணாநிதியால், அனேகமாக  நாட்டிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு சமூகநலத் திட்டங்கள் இப்போதும் செயற்படுத்தப்பட்டுப் பொன்விழா காண்கின்றன.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், திமுக தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதியின் 52-வது பிறந்த நாளில், 1975 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி, கைம்பெண்களும் திக்கற்ற சிறார்களும் நல்வாழ்வு பெறுவதற்காக இரு சமூக நலத் திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கருணாநிதியின் பிறந்த நாள்களில் ஆண்டுதோறும் மக்கள் நலன் கருதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1971-ல் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், 1972-ல் இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், 1973-ல் கை ரிக்‌ஷாக்களை அகற்றி, இலவச சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம், 1974-ல் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் என்ற வரிசையில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நாளில் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு உதவும் மறுவாழ்வுத் திட்டமும் ஆதரவற்ற சிறார்களின் நல்வாழ்வுக்கான கருணை இல்லம் திட்டமும் நடைமுறைக்கு வந்தன.

விதவைப் பெண்கள் மறுமணத்தை ஊக்குவிப்பதிலும் உதவுவதிலும், ஆதரவற்ற சிறார்களைக் காப்பதிலும் அரை நூற்றாண்டுக்கும் முன்னரே அடியெடுத்துவைத்தது தமிழ்நாடு.

கைம்பெண்கள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 30 வயது வரையுள்ள விதவைப் பெண்களை மறுமணம் புரிந்துகொள்கிறவர்களுக்கு, சமுதாயப் புரட்சியை ஊக்குவிக்கின்ற வகையில் அந்தக் கணவன் – மனைவி இருவரின் பெயராலும் ரூ. 5 ஆயிரத்துக்கான சேமிப்புச் சிறப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. 

இந்த ஐயாயிரத்தை ஏழு ஆண்டுகள் கழித்துத் தம்பதியர் ரூ. 8,587 ஆகத் திரும்பப் பெறுவார்கள். 1975 ஆம் ஆண்டில் ரூ. 5 ஆயிரம் என்பது இன்றைய பண மதிப்புடன் ஒப்பிட எத்தனையோ லட்சங்களில் வரும்.

இந்தப் புரட்சிகரத் திட்டத்தை அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த சமுதாயச் சூழ்நிலையில் அரசே முன்னெடுத்துச் செய்தபோது, இவர்களுக்காகக் கூடுதலாக மேலும் சில உதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

Governor greets Karunanidhi on birth day
52-வது பிறந்த நாளில் கருணாநிதியை வாழ்த்தும் அப்போதைய ஆளுநர் கே.கே. ஷாதினமணி கருவூலத்திலிருந்து...

இத்தகைய கைம்பெண்களை மணக்கும் ஆண்களுக்குத் தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, 45 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற கைம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 20 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆதரவற்ற கைம்பெண்களும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் தையல் பயற்சி பெற்றிருந்தால் இலவசமாகத் தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. மேலாகத் தொழிற்பயிற்சி பெற்ற கைம்பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட்டது.

திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம்,  பின்னர் எம்.ஜி.ஆர்., ஜானகி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமி என முதல்வர்களும் அரசுகளும் மாறினாலும் தொடர்ந்தது;  கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இன்றைக்கும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் என்ற பெயரில் தொடருகிறது.

நம் நாட்டில் காலங்காலமாக விதவைப் பெண்களுக்குப் பல்வேறு சமூக  காரணங்களாலும் நம்பிக்கைகளாலும் மறுமணம் மட்டுமல்ல, மகிழ்ச்சியான  வாழ்க்கையே, வாழ்வதற்கான உரிமையேகூட மறுக்கப்பட்டு வந்துள்ளது. சதி என்ற பெயரில் உடன்கட்டையேற்றப்பட்டு உயிர்க்கொலையும்  நடந்துவந்திருக்கிறது. குடும்ப கௌரவம் என்ற பெயரில் (குழந்தைத் திருமணங்கள் காரணமாக) எண்ணற்ற இளம் விதவைகள் வாழ்ந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே, 1856 ஆம் ஆண்டு, ஹிந்து விதவைகள் மறுமணச் சட்டம் (பின்னர், 1956) இயற்றப்பட்டதன் காரணமாக விதவைகள் மறுமணங்களுக்குச் சட்ட பாதுகாப்பு கிடைத்தது. இப்படியொரு சட்டம் வரக் காரணமாக இருந்தவர் கொல்கத்தா சமஸ்கிருத கல்லூரி முதல்வரான பண்டிட் ஈசுவர சந்திர வித்யாசாகர். என்றபோதிலும் மக்கள் மத்தியில் மனமாற்றம் இல்லாததால் மறுமணங்கள் குறைவாகவே நடந்துவந்தன.

தொடர்ந்து, சமூக சீர்திருத்த இயக்கங்கள் காரணமாகவும் கல்வியறிவு பரவியதன் காரணமாகவும் மக்கள் மத்தியில் விதவையர் மறுமணங்கள் பெருகத் தொடங்கின.

கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கைம்பெண்களுக்கு உதவும் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னரே திராவிட இயக்கத்தின் தாக்கத்தால், நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் அதிகளவிலான விதவைத் திருமணங்கள் நடந்துகொண்டிருந்தன. திராவிட இயக்க மேடைகளிலேயே கைம்பெண் திருமணங்களும் சாதி, சடங்குகள் மறுப்புத் திருமணங்களும் நடந்தன.

திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி கொண்டுவந்த இந்தத் திட்டத்தால் விதவைகள் மறுமணத்துக்கு சமுதாயத்தில் வெளிப்படையான அங்கீகாரத்துடன், இணையருக்கு அரசு உதவிகளும் மறுவாழ்வும் உறுதி செய்யப்பட்டன.

இதனால் தமிழ்நாட்டில் அதிகளவில் விதவை மறுமணங்கள் நடைபெற்றன. இப்போதும் நாட்டிலேயே அதிக அளவில் விதவை மறுமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பது சிறப்பு.

M karunanidhi opens orphans home
மயிலையில் கருணை இல்லத்தைத் திறந்துவைக்கும் முதல்வர் மு. கருணாநிதி, அருகே அமைச்சர் மு. கண்ணப்பன்...தினமணி கருவூலத்திலிருந்து...

கருணாநிதியின் இதே பிறந்த நாளில்தான் திக்கற்ற சிறார்களுக்கான நல்வாழ்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் (அப்போதிருந்த) 15 மாவட்டங்களிலும் 52 கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. மூவாயிரத்துக்கும் அதிகமான ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி ஆகியவை 18 வயது வரையிலும் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான செலவை 75 சதவிகிதத்தை அறநிலையத் துறையும் 25 சதவிகிதத்தை அரசும் ஏற்றுக்கொண்டன.

ஆதரவற்ற சிறார்கள் படித்து முடியும் வரை கருணை இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர். அருகே இருக்கும் கல்வி நிலையங்களில் கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொழில் கல்வி வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டது. 

முதல் கருணை இல்லத்தைச் சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் அருகே, அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ‘காரோட்டி’ மு. கண்ணப்பன் தலைமையில் முதல்வர் மு. கருணாநிதி திறந்துவைத்தார். விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் திருமுருக கிருபானந்த வாரியாரும் பங்கேற்றுப் பேசினர்.

தந்தையின் நினைவில் கருணாநிதி உருக்கம்!

சிறப்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக, தன்னுடைய தந்தை முத்துவேலரே சின்னஞ்சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து ஆதரவற்றிருந்து பிறரால் வளர்க்கப்பட்டவர் என்று குறிப்பிட்டதுடன், அந்த ஆதரவற்றவரின் பிள்ளை என்பதும் ஆதரவற்ற சிறார்களைப் பராமரிக்கும் இந்தத் திட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு காரணம் என்றார்.

கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற தெய்வ பக்தி மிகுந்த மதத் தலைவர்களே ஆலயங்கள் மூலம் அனாதை விடுதி நடத்தும் திட்டத்தை வாழ்த்தி ஆசி கூறியுள்ளதால் இதற்கு மற்றவர்கள் அரசியல் காரணமாக எதிர்ப்புத் தெரிவித்தாலும் அந்த மறுப்புக்கு மதிப்பு இராது; மக்கள் பங்குபெற வேண்டிய, ஆண்டவனுக்கு உவப்பான சீரிய நல்ல திட்டம் இது என்றும் குறிப்பிட்டார்  கருணாநிதி.

இந்தக் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஆலய வழிபாட்டுக்கு தி.மு.க. எதிரியல்ல என்றும் கூறினார்.

அரை நூற்றாண்டான நிலையில், இந்தத் திட்டம் எத்தனையோ வடிவங்கள் மாறி இப்போது மாவட்டந்தோறும் அரசு குழந்தைகள் காப்பகங்களாகத் தொடருகிறது.

இதே பிறந்த நாளையொட்டிதான், சென்னை - மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் தொழிற்சாலை மற்றும் பயிற்சிக் கூடத்தையும் தமிழ்நாடு பொருள் போக்குவரத்துக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதி தொடக்கிவைத்தார்.

மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளுடன் இன்று விதவைகள் மறுவாழ்வுத் திட்டமும் கருணை இல்லங்களும்கூட பொன் விழா கொண்டாடுகின்றன!

(ஜூன் 3 - கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com