கபில்தேவ் வரிசையில் இடம் பிடித்த ஏழைத் தச்சரின் மகள் அமன்ஜோத் கெளர்!

இந்திய ஆல் - ரவுண்டர் அமன்ஜோத் கெளரின் பின்னணி...
அமன்ஜோத் கெளரின் தந்தை பூபேந்தர் சிங் மற்றும் தாய்
அமன்ஜோத் கெளரின் தந்தை பூபேந்தர் சிங் மற்றும் தாய்ANI
Published on
Updated on
3 min read

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல் - ரவுண்டராக ஆடிய அமன்ஜோத் கெளர், பல தடைகளைக் கடந்து, தந்தையின் உறுதியால் நாட்டுக்காக விளையாடி சாதனை படைத்துள்ளார்.

நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பை வென்றுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனையைத் தொடர்ந்து, ஒவ்வொரு வீராங்கனையும் நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். பஞ்சாபில் சாதாரண ஏழைக் குடும்ப பின்னணியில் பிறந்து இந்தியாவின் சிறந்த ஆல் - ரவுண்டராக உருவெடுத்திருப்பவர் அமன்ஜோத் கெளர்.

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள், மிடில் ஆர்டர் வீராங்கனைகள் வரிசையாக அவுட்டாகினர். ஒருகட்டத்தில் 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது இந்திய அணி.

அப்போது களமிறங்கிய அமன்ஜோத் கெளர், களத்தில் இருந்த தீப்தி சர்மாவுடன் இணைந்து இந்தியாவைச் சரிவில் இருந்து மீட்டார். 57 ரன்கள் குவித்து, இந்திய அணி 269 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

இதன் மூலம் உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் வெற்றிக்குத் தொடக்க புள்ளியாக அமைந்தார். தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் தன்னால் அணிக்கு எவ்வித பாதகமும் வராத வகையில் விளையாடினார். பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 339 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு இறுதிக்கட்டத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து வெற்றி பெற உதவினார்.

இறுதிப் போட்டியில், தனது பீல்டிங் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தியவர் அமன்ஜோத் கெளர்.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸை மிக அற்புதமாக ரன் - அவுட் செய்தார் அமன்ஜோத். அதேபோல், இன்னொரு முனையில் சதமடித்து ஆக்ரோஷமாக வெற்றி இலக்கை நோக்கித் தென்னாப்பிரிக்காவை அழைத்துச் சென்றுகொண்டிருந்த மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா வால்வார்ட் அடித்த பந்தை ஒற்றைக் கையில் பிடித்து அந்த அணியின் கனவைக் கானல் நீராக மாற்றினார்.

இதன் மூலம், உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் வரலாற்றில், 1983 இல் கபில் தேவ் பிடித்த ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) கேட்ச், 2007 இல் ஸ்ரீசாந்த் பிடித்த மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்) கேட்ச், 2024 இல் சூர்ய குமார் யாதவ் பிடித்த டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) கேட்ச் வரிசையில் அமன்ஜோத் கெளர் இடம் பிடித்துள்ளார்.

அமன்ஜோத் கெளர்
அமன்ஜோத் கெளர்ANI

யார் இந்த அமன்ஜோத் கெளர்?

பஞ்சாப் மாநிலத்தில் அன்றாட வாழ்க்கையை வாழவே போராடிக் கொண்டிருந்த தச்சரான பூபேந்தர் சிங்கின் மகளாகப் பிறந்தவர்தான் அமன்ஜோத் கெளர்.

சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டிய அமன்ஜோத் கெளருக்கு அவரின் தந்தை தனது வறுமையால் ஒருபோதும் தடை போட்டது கிடையாது.

தொடக்க காலத்தில் ஸ்கேட்டிங், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற அமன்ஜோத் கெளர், அண்டை வீட்டாரின் ஆலோசனை பேரில் கிரிக்கெட்டின் மீது பார்வை திரும்பியது.

பயிற்சியாளர் நாகேஷ் குப்தா என்பவரிடம் 17 வயதில் தனது கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார் அமன்ஜோத். அவரின் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. தொழில்முறை கிரிக்கெட்டை அமன்ஜோத் தேர்ந்தெடுத்தபோது, தொழிலாளர் வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், துடைப்பத்திற்கு பதிலாக மட்டையை எடுப்பதா? என்று அவர் தந்தையைப் பலரும் ஏளனமாக பேசினர், கடுமையாக விமர்சித்தனர்.

ஊராரின் கேலிகளுக்கு காதுகளைச் செவிடாக்கி, தனது மகளின் கனவை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காகத் தனது பணிகளைச் செய்தார் பூபேந்தர் சிங்.

தற்போது, இறுதிப் போட்டியில் அமன்ஜோத் விளையாடிய காட்சிகளை ஊர் மக்களுடன் அமர்ந்து கண்ட பூபேந்தர் சிங், இந்திய அணியின் வெற்றியை ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார். அவரை ஏளனமாகப் பேசிய ஊராரும் உடனிருந்திருக்க வாய்ப்புண்டு.

தனது தந்தை வைத்த நம்பிக்கையை இன்று செயலில் நிரூபித்து ஜொலிக்கிறார் அமன்ஜோத் கெளர்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி ரூ. 40 கோடியும், பிசிசிஐ ரூ. 51 கோடியும் பரிசுத் தொகை அளித்துள்ள நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மற்றும் அமன்ஜோத் கெளருக்கு தலா ரூ. 11 லட்சம் பரிசுத் தொகையை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

யுவராஜ் சிங்கின் பாராட்டு

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில், கடமைக்கு பாராட்டைத் தெரிவித்துவிட்டு செல்லாமல், அணியின் வெற்றிக்காக போராடிய ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் தெரிவித்திருப்பதாவது:

“இந்திய கிரிக்கெட்டின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. நீல உடை அணிந்த நமது பெண்களின் மன உறுதிக்கும் திறமைக்கும் நன்றி.

உடைக்க முடியாத மனப்பான்மையால் கட்டமைக்கப்பட்ட ஓர் அணி, உலகம் ஒருபோதும் மறக்காத ஒரு தருணத்தை உருவாக்க ஒன்றிணைந்தது. அவர்கள் இந்தக் கனவுக்காகத் தங்களை வருத்திக்கொண்டு, அதை இறுதிவரை நிறைவேற்றினர்.

அற்புதமான செயல்திறன் கொண்ட ஷஃபாலி வர்மா, தனது பேட்டால் பந்துகளை விளாசினார். ஆல்ரவுண்டராக தனது முழுமையான செயல்திறனை தீப்தி சர்மா வழங்கினார். பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீச்சில் அவர் வீழ்த்திய 5 முக்கிய விக்கெட்டுகள் போட்டியை மாற்றின.

இந்திய அணியை நிலைத்தன்மையுடன் நேர்த்தியாகவும், மன உறுதியுடனும் ஸ்மிருதி மந்தனா வழிநடத்தினார். ரிச்சா கோஷ், உறுதியுடன் பேட்டிங் செய்து, மிக முக்கியமான நேரத்தில் ஆட்டத்தைத் தன் கைகளில் வைத்திருந்தார்.

நம்பிக்கையுடனும் நிதானத்துடனும் தலைமை தாங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்; அச்சமின்றி, ஒற்றுமையாகவும், முழு உறுதியுடனும் விளையாடும் ஓர் அணியை உருவாக்கிய பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கு வாழ்த்துகள்.

உலக சாம்பியன்களே, இதுவெறும் ஆரம்பம்தான், இனி வானுக்கு எல்லையல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியாளர் அமோல் மஜும்தாருடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்
பயிற்சியாளர் அமோல் மஜும்தாருடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்

உலக கோப்பை தொடரின் சிறந்த கேட்ச் விருது இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகோவுக்கு ஐசிசி அளித்த நிலையில், இறுதிப் போட்டியில் லாரா வால்வார்ட் கேட்ச்சை பிடித்ததற்காக அமன்ஜோத் கெளருக்கு இந்த விருதை வழங்குவதாக ஜெமிமா தெரிவித்தார்.

ஒருவர் வெற்றி பெற்ற பிறகுதான் அவர் கடந்துவந்த பாதை அனைவரையும் தேடத் தூண்டும்... எடுத்துக்காட்டு அமன்ஜோத் கெளர்!

Summary

Amanjot Kaur, a carpenter's daughter! The story of becoming a world champion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com