

வரலாற்றில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் வலிகளையும் கடந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளனர்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி, ஆட்டத்தின் முடிவில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
கடந்த 1973 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 13 முறை மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே அனைத்து தொடர்களிலும் விளையாடிவுள்ளன. இவற்றில், ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் கோப்பை வென்றுள்ளன.
தற்போது முதல்முறையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பை வென்று சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நான்காவது நாடாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்திய வீராங்கனைகளின் இன்றைய வெற்றிக்காக அவர்கள் ஏறிய படிக்கட்டுகள் அனைத்தும் முட்களால் நிறைந்தவை என்பது இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மில் பலரும் அறியாதது.
உலகிலேயே கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிக சம்பளமும் முக்கியத்துவமும் கொடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கான முக்கிய காரணம் கிரிக்கெட்டைச் சுற்றியுள்ள வணிகம்தான். வீரர்கள் அணியும் காலணி, உடை, கிரிக்கெட் உபகரணங்கள், திடலில் ஒளிபரப்பும் விளம்பரம், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஒளிபரப்பு உரிமம், நேரலை ஒளிபரப்புக்கு மத்தியில் வெளியாகும் விளம்பரம் என ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஈட்டுகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
கடந்த செப்டம்பர் 2025 நிலவரப்படி, அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகைக்குப் பிறகு பிசிசிஐ வங்கிக் கணக்கில் ரூ. 20,686 கோடி இருப்புத் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் ஆடவர் கிரிக்கெட் அணியை மையப்படுத்தியே நடைபெறுகிறது. ஆடவர் அணிக்கு இணையான முக்கியத்துவம் இதுவரையிலும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒருபோதும் கொடுக்கப்பட்டதில்லை.
எடுத்துக்காட்டாக, 1983 ஆம் ஆண்டே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டனர். ஆனால், 1976 ஆம் ஆண்டே விளையாடத் தொடங்கிய மகளிர் அணியினர், 50 ஆண்டுகள் கடந்து இப்போதுதான் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளனர்.
ஊதியத்தில் இருந்து பிசிசிஐ நிர்வாகப் பொறுப்பு வரை ஆடவர் அணியினரை ஒப்பிடுகையில் மகளிர் அணிக்கு பாரபட்சமே காட்டப்பட்டு வந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலான இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு பெண்கூட பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
’ஆணாதிக்கம் கொண்ட பிசிசிஐ’
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
1978 முதல் 1993 வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்திய டயானா எடுல்ஜி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
“கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தோடு இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இணைக்கப்பட்ட நாள்முதல் பிசிசிஐ-யை விமர்சிப்பவளாகவே நான் இருந்திருக்கிறேன்.
பிசிசிஐ மிகவும் ஆணாதிக்கம் கொண்ட அமைப்பு. பெண்கள் விதிமுறைகளை நிர்ணயிப்பதையோ, இதில் நுழைவதையோ அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. நான் விளையாடத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகிறேன். இப்போதும்கூட, மகளிர் கிரிக்கெட் நன்றாக செயல்பட்டு வருவதை பிசிசிஐ-க்குள் இருப்பவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே சொல்வேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆடவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசனை நேரில் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தேன். அப்போது, 'எனக்கு அதிகாரம் இருந்தால் மகளிர் கிரிக்கெட்டை நடக்க விடமாட்டேன். பெண்களுக்கு கிரிக்கெட்டில் என்ன வேலை? ஐசிசி விதிகள் காரணமாகத்தான் மகளிர் அணி இருக்கிறது' என்றார். அவர் மகளிர் கிரிக்கெட்டை வெறுக்கிறார்” எனத் தெரிவித்தார்.
தற்போது இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்ற தருணத்தில் என். சீனிவாசன் குறித்த டயானா எடுல்ஜியின் இந்தப் பேட்டியும் வைரலாகி வருகின்றது.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டயானா எடுல்ஜியை பிசிசிஐ நிர்வாகப் பொறுப்புக்கு உச்ச நீதிமன்றமே கடந்த 2017 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. பிசிசிஐ அணி தேர்வராக இருந்த முதல் பெண்ணும் எடுல்ஜிதான்.
(தற்போது ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை சீனிவாசன் சொந்தமாக வைத்துள்ளார். அதேபோல், வெளிநாட்டுத் தொடர்களிலும் சிஎஸ்கே நிர்வாகம் சொந்தமாக அணி வைத்துள்ளது. ஆனால், மகளிருக்காக பிசிசிஐ நடத்தும் டபிள்யூபிஎல் தொடரில் அணியை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முனைப்புக் காட்டவில்லை).
புறக்கணிக்கப்பட்ட பயிற்சியாளர்
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியின் வெற்றியின் முதுகெலும்பாகக் கருதப்படுகிற, இன்றைக்குக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிற அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரும் பிசிசிஐ நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர்தான்.
1994 முதல் 2013 வரை முதல்தர கிரிக்கெட் தொடர்களில் 171 போட்டிகளில் விளையாடி, 48 சராசரியுடன் 11,167 ரன்கள் குவித்துள்ளார். இதில், 30 சதங்கள், 60 அரைச்சதங்கள் அடங்கும்.
ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக 1994 ஆம் ஆண்டு முதல்முறையாக களமிறங்கிய அமோல், 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அப்போது இவர் “புதிய டெண்டுல்கர்” என்ற பாராட்டப்பட்டார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்பட்டார்.
ஆனால், 21 ஆண்டுகள் உள்நாட்டுத் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தியும் இந்தியாவுக்காக - இந்திய அணிக்காக உலகளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஷிவ் சுந்தர் தாஸ், ககன் கோடா போன்ற இவரைவிட திறமை குறைந்த வீரர்கள் எனக் கருதப்படுவோருக்கு இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது.
2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அமோல், நிலைத்து நிற்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த இந்திய அணியை இன்று உலக சாம்பியனாக மாற்றி அவரது தாகத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், திடலுக்குள் அமோலின் பாதங்களைத் தொட்டு வணங்கிய புகைப்படங்களும் அத்துடன் அவரது வரலாறும் இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்திராவின் கனவு...
இந்திய மகளிர் அணியினர் இன்று உலகக் கோப்பையை வென்றதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்திதான்.
1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மகளிர் கிரிக்கெட் அணியை இந்திரா காந்தி சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
மகளிர் கிரிக்கெட் அணியை உருவாக்க இந்திரா காந்தியே முதல்முறையாக உத்தரவிட்டுள்ளார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடியது.
மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளை உருவாக்கி ஆரம்ப கால வளர்ச்சிக்கு இந்திரா காந்தி உதவினார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றியாளர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற இந்திராவின் கனவு, தற்போது - அரை நூற்றாண்டுக்குப் பிறகு - கிரிக்கெட்டிலும் நிறைவேறியுள்ளது.
சாதித்துக் காட்டியுள்ள உலக கோப்பை சாம்பியன் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் சொல்கிறார்: “இந்த தருணத்துக்காகதான் காத்திருந்தோம், இது தொடக்கம் மட்டுமே. அடுத்த இலக்கு, இதையே பழக்கமாக்குவது..!”.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.