
வங்க தேசத்தில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சிட்டகாங் பகுதியில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்படுகிறது.
இவ்வாறு அமெரிக்க ராணுவம் குவிக்கப்படுவால் இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பில் கணிசமான தாக்கம் ஏற்படும் என்பதுடன், இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ‘தி எகானமிக் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜப்பானிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான யொகோடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் அண்மையில், வங்கதேசத்தில் சிட்டகாங்கிலுள்ள ஷா அமானத் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும் மியான்மருக்கும் அருகில் அமைந்திருக்கும் சிட்டகாங் பகுதிக்கு அமெரிக்க விமானம் வந்து சென்றிருப்பது வங்காள விரிகுடா கடல் பகுதியில் வெளி நாட்டு சக்திகளின் தொடர்பும் செல்வாக்கும் அதிகரித்து வருவதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மியான்மர் நாட்டில் செயல்பட்டுவரும் தீவிரவாத – அரசு எதிர்ப்புக் குழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுமே முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
வங்க தேசத்தில் இளைஞர்களின் கலவரத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கூட்டு ராணுவ ஒத்திகை போன்றவற்றுக்காக உள்பட அடிக்கடி சிட்டகாங்கிற்கு அமெரிக்க ராணுவம் வந்துசெல்கிறது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இதே பகுதியில் வங்க தேசமும் அமெரிக்காவும் – ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல் -25, டைகர் லைட்னிங் – 2025 என்ற பெயர்களில் - கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன.
கடந்த வாரம் இந்தப் பகுதிக்கு அமெரிக்க ராணுவத்தினர் வந்துள்ள நிலையில், விரைவில் மற்றொரு ராணுவப் பயிற்சி நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பெரும் வன்முறை – கலவரத்தைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டே வெளியேறினார். இந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் அமெரிக்காவுக்குப் பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
வங்கக் கடலிலுள்ள செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்க நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தாம் ஒப்புக்கொள்ள மறுத்ததால் தம்மைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டதாக அப்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டினார்.
கடந்த வாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள நேபாளத்தில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்கள், வன்முறையைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஓலி பதவி விலகினார்; இடைக்காலப் பிரதமராக ஓய்வுபெற்ற நீதிபதி சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.