அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

புயல்கள் தொடர்ச்சியாக உருவாக வேண்டிய காலத்தில் அமைதியாகக் கிடக்கும் அட்லாண்டிக் கடலைப் பற்றி...
hurricane
புயல் - செயற்கைக் கோளிலிருந்துAP
Published on
Updated on
2 min read

அட்லாண்டிக் கடலில் புயலையே காணவில்லை!

ஆமாம், அட்லாண்டிக் கடலில் கிட்டத்தட்ட கடந்த மூன்று வாரங்களாகப் பெயர் சொல்வதற்காகக்கூட ஒரு புயலும் உருவாகவில்லை; இத்தனைக்கும் இது புயல்கள் மிகவும் அதிகமாக உருவாகிற காலம்!

அட்லாண்டிக்கின் புயல்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்துகொண்டுவிட்டன? இதையேதான் இப்போது மக்கள் மட்டுமின்றி ஆய்வாளர்களும் சேர்ந்து அதிசயப்பட்டுக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த புயல் காலத்தில் (சீசனில்) கடைசியாக உருவான புயலுக்கு சூட்டிய பெயர் பெர்ணான்ட். ஆனால், அதுவும் அற்ப வாழ்வுடன் – ஆக. 23 ஆம் தேதி உருவாகி ஆக. 28 ஆம் தேதி கலைந்து காணாமல் போய்விட்டது.

புயல்கள், கடல் சீற்றங்கள் போன்றவற்றைப் பற்றிய முறையான ஆவணப் பதிவுகள் தொடங்கப்பட்ட 1950 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும் புயல் காலத்தில் சொல்லிக்கொள்வதைப் போல ஒரு  புயலும் தோன்றாமல் போவது இது இரண்டாவது முறை; வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் நிலைமை தீவிரமாக இருக்கும் என்கிறார் போர்ட்டோ ரிகோ தீவின் சான் ஜுவானிலுள்ள தேசிய காலநிலை சேவையின் வானிலை ஆய்வாளர் எர்னெஸ்டோ ரோட்ரிகோ.

இதற்கு முன்னர் ஒரு முறை, 1992 ஆம் ஆண்டில், ஆண்ட்ரூ புயல் தாக்கி புளோரிடா பேரழிவுக்குள்ளான பிறகு, ஆக. 29 முதல் செப். 15 வரை கடல் மிக அமைதியாக இருந்தது; புயல்களே எதுவும் உருவாகவில்லை.

கடல் ஏன் இந்த அளவுக்கு அமைதியாகக் கிடக்கிறது?

இதற்காக வருத்தமும் படலாம், மகிழ்ச்சியும் அடையலாம், இந்த நிலைமைக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று: உயரத்தைப் பொருத்து காற்றின் வேகம் அல்லது காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களால் செங்குத்துக் காற்றழுத்தத்தில் நேரிடும் மாறுபாடு. பூமியின் வளிமண்டலத்தின் மிகவும் தாழ்வான பகுதியில் நேரிடும் புயல் சுழற்சிகளால் இது அதிகரித்திருக்கிறது.

இரண்டு: வெப்ப மண்டல அட்லாண்டிக் கடற் பகுதி முழுவதும் தொடர்ந்து நிலவும் வறண்ட – நிலைத்த காற்று.

மூன்று: மேற்கு ஆப்பிரிக்காவில் குறைந்துபோய்விட்ட மழை. புயல் காலங்களில் இந்தப் பகுதியிலிருந்துதான் வெப்ப அலைகள் உருவாகி நகரும்.

போர்ட்டோ ரீகோவைப் பொருத்தவரை இந்தப் புயலில்லா நிலைமை நல்லதுதான் என்கிறார் ரோட்ரிகோ.

2017 செப். 20 ஆம் தேதி தாக்கிய மிகப் பலமான மரியா புயலால் நேரிட்ட சேதங்களிலிருந்து இன்னமும் இவர்கள் மீளவில்லை; சீரமைப்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அட்லாண்டிக் கடலின் புயலற்ற நிலைமை பற்றி கொலோராடா மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் விளக்க அறிக்கையொன்றையும் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

மிகவும் அபூர்வமான நிலைமை என்று குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, அட்லாண்டிக் கடலின் அமைதி பற்றி ஆய்வாளர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் மத்தியில் பரவலாக, விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தெளிவாகத் தெரியவில்லை!

செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியிலும் அக்டோபர் மாதத்தின் முற்பாதியிலும்கூட புயல்கள் அடித்து ஆடத் தொடங்கலாம் என்கிறார்கள் வானிலையாளர்கள்.

கரீபியன் கடலுக்குக் கிழக்கே நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் துண்டுதுண்டான புயல் துணுக்குகள் நிலைகொண்டிருக்கின்றன. இவை ஒருவேளை வலுப்பெற்றுப் பெரும் புயலாக மாறி, பெயர் சூட்டப்படவும்  வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்குப் பின்னாலும் இதைப் போன்ற துணுக்குகள் இருக்கின்றன. ஆனால், இவை புயலாக உருவாக 20 சதவிகிதமே வாய்ப்பு என்கிறார்கள் வானிலையாளர்கள்.

வரலாறு என்ன சொல்கிறது?

அட்லாண்டிக் கடலில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்தான் 80 சதவிகித புயல்கள் உருவாகி வீசும். இந்த ஆண்டில் பெயர் சூட்டப்பட்ட புயல்களே ஆறு மட்டும்தான். அட்லாண்டிக்கில் நிலைமை நிச்சயமற்றதாக இருக்கிறது என்றும் கொலோராடா பல்கலை தெரிவிக்கிறது.

உலகம் ரொம்பத்தான் குழம்பிப்போய்க் கொண்டு இருக்கிறது. மழைக் காலத்தில் மழை பெய்வதில்லை; கோடையில் கொட்டித் தீர்க்கிறது. வெய்யில் காலத்தில் குளிரடிக்கிறது. கோடைக்கும் மழைக்கும் இடையே காற்றுக் காலமோ காணாமலே போய்விடுகிறது.

என்னவோ, அட்லாண்டிக் கடலுக்கு வந்த சோதனை! புயல்களையே தேட வேண்டியதாகிவிட்டது. இந்த வானிலை மாற்றத்தின் தொடர் விளைவுகள் என்னென்னவாக இருக்குமோ?

இதையும் படிக்க | ஆக்டோபஸ்! எட்டு கரங்களைக் கொண்டு என்ன செய்கிறது? ஆய்வில் அறிந்த அதிசயம்!

Summary

About the Atlantic Ocean, which lies calm during a time when storms should be forming continuously...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com