'வாரம் ஒரு மரம்' அமைப்பின் பசுமைப் புரட்சி!
கோவையில் 'வாரம் ஒரு மரம்' அமைப்பு செய்துவரும் பசுமைப் புரட்சி பற்றி...

"வாரம் ஒரு மரம்" அமைப்பின் தலைவர் மோகன்ராஜ் (இடது), செயலாளர் சுரேஷ்குமார் ( வலது) - Dinamani
மேற்கு மலைத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பசுமைச் சூழல் நிறைந்த அழகிய மாவட்டமாக கோவை திகழ்கிறது. வெயில், மழை, குளிர் என அனைத்து சீதோஷ்ண நிலையிலும் பாதுகாப்பான வாழ்வுக்கு ஏற்ற மாவட்டமாக உள்ளதால், இங்கு வீடு கட்டி குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில் பசுமையான மற்றும் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் குறித்த ஆய்வில், தனிநபர் ஒருவருக்குக் கிடைக்கும் பசுமைப் பரப்பளவு அடிப்படையில் கோவை அண்மையில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கோவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இங்குள்ள இயற்கை ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்பினரின் பங்கு அளப்பெரியது. அந்த வகையில், வாரம் ஒரு மரம் (ஒன் ட்ரீ ஃபெர் ஒன் வீக்) தன்னார்வ அமைப்பு மரம் நடுதலில் புதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டம், சூலூர் அருகில் உள்ள நாயக்கன்பாளையம், பீடம்பள்ளி மற்றும் பள்ளபாளையம் ஆகிய மூன்று கிராமங்களின் நிலப்பரப்பை பசுமையான பகுதிகளாக மாற்றும் பணியில் இந்த அமைப்பு கடந்த 5 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது. மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த ஒரு புரட்சியை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது எனலாம்.

இதுகுறித்து, சூலூர் வட்டம், பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த "வாரம் ஒரு மரம்" (ஒன் ட்ரீ ஃபெர் ஒன் வீக்) அமைப்பின் தலைவர் மோகன்ராஜ் நம்மிடம் கூறியது:
2018-ல் அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, மக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதையும், இயற்கையின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதையும் நான் கவனித்தேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவர்களின் மனப்பான்மை, அதே பாதையைப் பின்பற்ற என்னை ஊக்கப்படுத்தியது.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு, எனது நண்பர்களான சுரேஷ்குமார், கார்த்தி மற்றும் ராஜசேகர் ஆகியோருடன் மரம் நடும் திட்டம் குறித்து கலந்துரையாடினேன். அவர்கள் ஒத்துழைப்பால் 2021-ஆம் ஆண்டில் பட்டணம் கிராம ஊராட்சியின் கீழ் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் வாரம் ஒரு மரம் (ஒன் ட்ரீ ஃபெர் ஒன் வீக்)மரம் நடும் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்தோம். அதன்படி, நாயக்கன்பாளையம் பகுதியில் பயன்பாடின்றி இருந்த வறண்ட குளம் ஒன்றின் படுகையில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டோம்.

பட்டணம் ஊராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு, நாங்கள் குளத்தின் படுகையில் இருந்த புதர்களை அகற்றிவிட்டு, இரண்டு இடங்களில் மொத்தம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 2,000 மரக்கன்றுகளை நட்டோம். சிறிய இடங்களில் அடர்த்தியான மற்றும் வேகமாக வளரக்கூடிய உள்நாட்டு மரங்களைக் கொண்ட காடுகளை உருவாக்கும் 'மியாவாக்கி' முறையை பின்பற்றினோம்.
இந்த முயற்சி தந்த ஊக்கத்தால் 2022-இல் பட்டணம் கிராமத்துக்கு அருகில் உள்ள பீடம்பள்ளி கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயன்பாடற்ற குளங்களுக்கு அருகில் 3,000 மரக்கன்றுகளை நட்டினோம்.
இந்த இரண்டு கிராமங்களிலும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பள்ளபாளையம் பேரூராட்சியில் ஐந்து ஏக்கர் காலி நிலத்தில் மரக்கன்றுகளை நட ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு அனுமதி அளித்தது. மூன்று ஆண்டுகளாக இப்பகுதிகளில் சுமார் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ஆண்டின் 52 வாரங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் கிராமத்திலோ அல்லது பயன்பாடற்ற பொது இடங்களிலோ வாரத்திற்கு ஒரு மரக்கன்றை நட்டால், இந்த கூட்டு முயற்சியின் மூலம் அப்பகுதியின் பசுமைப் பரப்பு கணிசமாக அதிகரிக்கும்" என்பதே "வாரம் ஒரு மரம்" திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றார்.

இதுகுறித்து, வாரம் ஒரு மரம் செயலாளர் பி. சுரேஷ்குமார் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2022-ஆம் ஆண்டில் வாரம் ஒரு மரம் அமைப்புக்கு 'பசுமைச் சாம்பியன்' விருது வழங்கி கெளரவித்துள்ளது.
மாணவர்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காகக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் வகையில் கழிப்பறைகளை அமைப்பதிலும், பழுதடைந்த கழிப்பறைகளைப் புதுப்பிப்பதிலும் எங்கள் அமைப்பு கவனம் செலுத்துகிறது என்றார்.
எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை தனது செயல்களால் செய்து காட்டி வரும் வாரம் "ஒரு மரம் அமைப்பு" அப்பகுதிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
Summary
The 'One Tree Per One Week' initiative's green revolution.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


