
இயற்கைப் பேரிடர்களைத் தாண்டி நேபாளத்துக்கு இவ்வளவு பேர் ஆன்மிகப் பயணங்கள் செல்வது ஏன்?
இயற்கைப் பேரிடர்களைத் தாண்டி நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வது ஏன் என்பதைப் பற்றி இக்கட்டுரையில்...

கைலாயம் - மானசரோவர் - TNIE
இமயமலையின் பிரம்மாண்டம், பனிப்பாறைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் பேரழகுடன், ஆயிரமாண்டு பழமையான ஆன்மிக நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்ட நாடு நேபாளம். பசுபதிநாதர் முதல் முக்திநாத் வரை எண்ணற்ற புனிதத் தலங்கள் பக்தர்களை ஈர்த்து வரும் நிலையில், கைலாயம் - மானசரோவர் யாத்திரைக்கும் நேபாளம் முக்கியமான பயணப் பாதையாக விளங்குகிறது.
ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இந்த இமயமலைப் பாதையில் கனமழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு என பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன. அப்படியானால், நேபாளம் ஏன் இந்துக்களின் முக்கிய ஆன்மிகப் பயணத் தலமாகத் திகழ்கிறது? கைலாயம் - மானசரோவர் யாத்திரைக்கும் நேபாளத்துக்கும் என்ன தொடர்பு? விரிவாகப் பார்க்கலாம்.
நேபாளம் - ஆன்மிகமும் இயற்கையும் சங்கமிக்கும் புனிதப் பயணம்
இந்துக்களின் வழிபாட்டில் சிவபெருமானுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் சிவ வழிபாட்டுடன் தொடர்புடைய பல்வேறு புனிதத் தலங்களை தன்னகத்தே கொண்ட நாடாக நேபாளம் விளங்குகிறது.
அந்நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோயில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவ பக்தர்களை ஈர்க்கும் முக்கியமான ஆன்மிகத் தலமாக உள்ளது. பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகே பாக்மதி ஆறு பாய்கிறது. காசியில் கங்கை நதிக்கரையில் இந்து சமய இறுதிச்சடங்குகள் நடைபெறுவது போலவே, பாக்மதி நதிக்கரையும் இந்து சமயத்தில் முக்கியத்துவம் பெற்ற பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் நேபாளத்திற்கான பயணம் என்பது வெறும் சுற்றுலாவாக மட்டும் இல்லாமல், பலருக்கு ஆன்மிகத் தேடலையும் புனித யாத்திரையையும் இணைத்த அனுபவமாக அமைகிறது.
வாழும் தெய்வத்தைத் தரிசிக்கும் குமாரி மரபு
நேபாளத்தின் தனித்துவமான ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக ‘குமாரி’ வழிபாடு பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலகட்டம் வரை தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். அந்த சிறுமி பூப்பெய்திய பிறகு, அடுத்த குமாரி தேர்ந்தெடுக்கப்படுவது இந்தப் பாரம்பரியத்தின் முக்கிய நடைமுறையாக உள்ளது. இத்தகைய வித்தியாசமான ஆன்மிக மரபுகளும் நேபாளத்தை உலக அளவில் கவனம் பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளன.
நேபாளத்தின் முக்கிய புனிதத் தலங்கள்
நேபாளம் செல்லும் இந்து பக்தர்களின் பயணம் பசுபதிநாதர் கோயிலுடன் முடிவதில்லை. அந்நாட்டில் பல்வேறு சிறப்புமிக்க புனிதத் தலங்களும் உள்ளன.
* முக்திநாத் - விஷ்ணுவுடன் தொடர்புடைய முக்கிய வைணவத் திருத்தலம்.
* ஜனக்பூர் - சீதாதேவி பிறந்த இடமாக இந்து சமய நம்பிக்கையில் கருதப்படும் புனிதப் பகுதி.
* மனகமனா - பகவதி அம்மன் கோயிலால் புகழ்பெற்ற ஆன்மிகத் தலம்.
* லும்பினி - புத்தர் பிறந்ததாகக் கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித இடம்.
* நாகர்கோட் - இமயமலைத் தொடரின் பின்னணியில் சூரிய உதயத்தை ரசிக்கப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.
இவ்வாறு மதம், ஆன்மிகம் மற்றும் இயற்கை அழகு ஆகிய மூன்றையும் ஒரே பயணத்தில் அனுபவிக்கும் வாய்ப்பை நேபாளம் வழங்குகிறது.
ஆழ்வார்களால் போற்றப்பட்ட முக்திநாத்
மதுரை திருவேடகம் செல்லும் வழியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலின் அர்ச்சகராக உள்ளார் அமுதன் ஐயர். கடந்த ஆண்டு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
தனது பயண அனுபவத்தை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழுவிடம் பகிர்ந்த அவர், முக்திநாத் தலத்தின் ஆன்மிக முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
அமுதன் ஐயர் கூறியதாவது,
நம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முக்திநாத் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் திருத்தலத்தைத் தரிசிப்பதன் மூலம் முக்தி கிடைக்கும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. 108 திவ்ய தேசங்களில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள ஒரே பூலோகத் திருத்தலம் முக்திநாத் எனக் கருதப்படுகிறது. திவ்ய தேசங்களின் பட்டியலில் இத்தலம் "திருச்சாளக்கிராமம்" என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.
நேபாளத்தின் முஸ்தாங் பகுதியில், கண்டகி அல்லது காளிகண்டகி நதிக்கு அருகே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். பெரிய திருமொழியில் “சாளக்கிராமம்” எனக் குறிப்பிட்டு அவர் பாடிய பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. முக்திநாத் அமைந்துள்ள பகுதி முழுவதும் மலைப்பாங்கான நிலப்பரப்பாக இருப்பதால், அங்குச் செல்வது எளிதான பயணமாக இருப்பதில்லை.
முக்திநாத் செல்லும் பயணத்தில் பல்வேறு போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் 22 பேர் கொண்ட குழுவாகச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம் என்று அமுதன் ஐயர் கூறினார்.
ஜூலை மாதம் பயணத்திற்கு ஏற்றதா?
நேபாளத்தில் மலைப்பகுதிகளுக்கான பயணத்தைத் திட்டமிடும்போது காலநிலை முக்கியமான அம்சமாகிறது. ஜூலை மாதத்தில் மழையும் பனிப்பொழிவும் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்பதால், அந்த காலகட்டத்தில் பயணம் மேற்கொள்வது சற்று சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், மலைப்பகுதிகளில் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துவிட முடியாது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து உள்ளது.
இந்தியப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது, நேபாளப் பகுதியில் சில இடங்களில் நில அமைப்பு வேறுபட்டதாக இருப்பதாகவும் பயண அனுபவம் கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் பகுதிகளுக்குச் சென்றபோதும் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கைச் சவால்களை எதிர்கொண்டதாக அமுதன் ஐயர் குறிப்பிட்டார்.
ஆக்சிஜன் குறைய காரணம் என்ன?
மலைப்பகுதிகளில் பயணம் செய்வதற்கு சிறிய விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பலத்த காற்று போன்ற வானிலை நிலவும்போது இத்தகைய சேவைகளை இயக்க முடியாத சூழல் ஏற்படலாம். எனவே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவை இயக்கப்படுகின்றன.
முக்திநாத் பகுதியில் உயரம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவும் குறைவாக இருக்கும். இதனால் அங்குப் பயணம் மேற்கொள்பவர்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியமாகிறது.
கைலாயம் எங்கு இருக்கிறது?
இந்தியாவிலிருந்து ஏராளமானோர் புனித யாத்திரை செல்ல விரும்பும் கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி நேபாளத்தில் அமைந்துள்ளவை அல்ல. அவை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியில், இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,638 மீட்டர் உயரத்தில் கைலாய மலை உள்ளது. இந்து சமய நம்பிக்கையில் அது சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் கைலாயத்தின் புனிதத்தன்மை இந்து மதத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. பௌத்தம், சமணம் மற்றும் திபெத்திய பூர்வீக மரபிலும் கைலாய மலை முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.
நான்கு முக்கிய நதிகளுடன் தொடர்புடையது ஏன்?
கைலாயத்தைச் சுற்றியுள்ள இமயமலைப் பகுதி ஆசியாவின் முக்கியமான நதிகளுடன் புவியியல் ரீதியாகத் தொடர்புடையது.
சிந்து, சட்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்ணாலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இந்தப் பிராந்தியத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. இதன் காரணமாக கைலாயப் பகுதியின் ஆன்மிக முக்கியத்துவத்துடன் அதன் புவியியல் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது.
கைலாயத்திற்கு அருகில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்து சமயத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மானஸ் என்பது மனம் அல்லது அறிவு என்றும், சரோவர் என்பது ஏரி என்றும் பொருள்படுவதால் மானசரோவர் என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது.
நேபாளம் வழியாக கைலாயம் - மானசரோவர் பயணம் செல்வது ஏன்?
கைலாயம் - மானசரோவர் செல்வதற்கான முக்கியமான வழித்தடங்களில் மேற்கு நேபாளத்தில் உள்ள ஹும்லா - ஹில்சா பாதையும் ஒன்றாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய பக்தர்கள் பொதுவாக முதலில் காத்மாண்டு செல்கின்றனர். அங்கிருந்து நேபாள்குஞ்ச் சென்று, பின்னர் விமானம் மூலம் சிமிகோட் செல்லும் பயணம் தொடர்கிறது.
சிமிகோட்டிலிருந்து சிறிய விமானம் மூலம் ஹில்சா சென்றடைந்த பிறகு, தரைவழியாக திபெத்தின் டக்லாகோட் பகுதிக்குச் செல்கின்றனர். அதன்பின் கைலாயம் - மானசரோவர் நோக்கிய யாத்திரை தொடர்கிறது. முழுப் பயணமும் உயரமான மலைப்பகுதிகள் வழியாக அமைந்திருப்பதால், வழக்கமான சுற்றுலாவைக் காட்டிலும் உடல் தகுதியும் மனத் தயாரிப்பும் இங்கு முக்கியமாகிறது.
இந்தியா வழியாக செல்லும் முக்கிய பாதைகள் என்ன?
இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக இரண்டு முக்கிய வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1. லிபுலேக் கணவாய் - உத்தரக்கண்ட்
இந்தப் பாதையில் நீண்ட தூரம் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரை முழுமையடைய சுமார் 22 நாட்கள் வரை ஆகக்கூடும்.
2. நாதுலா கணவாய் - சிக்கிம்
சிக்கிம் வழித்தடத்தில் மலைப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பயண தூரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், முழு யாத்திரைக்கும் சுமார் 21 நாள்கள் வரை தேவைப்படலாம். பயணக் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடக்கூடியது என்பதால், அந்த ஆண்டில் இந்திய அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி ஆதாரமாகக் கருதப்பட வேண்டும்.
கைலாய யாத்திரைக்கு யார் செல்லலாம்?
இந்திய அரசு ஏற்பாடு செய்யும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்குக் குறிப்பிட்ட தகுதிகள் உள்ளன. இந்தியக் குடிமகனாக இருப்பது அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும். செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டும் அவசியம்.
மேலும் வயது, மருத்துவத் தகுதி மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்ள ஏற்ற உடல்நிலை போன்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
உயரமான பகுதிகளில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அத்துடன் அனைத்து பக்தர்களும் குழுவாகப் பயணிக்க வேண்டிய கட்டுப்பாடுகளும் உள்ளன.
இதனால் கைலாய யாத்திரையை ஒரு சாதாரண சுற்றுலாவாகக் கருத முடியாது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக வேண்டிய கடினமான புனிதப் பயணமாகவே இது அமைகிறது.
ஏன் கைலாயப் பயணம் சவாலானது?
கைலாயம் - மானசரோவர் அமைந்துள்ள பகுதி மிக உயரமான இமயமலைப் பிராந்தியமாகும். குறைந்த ஆக்சிஜன், கடுமையான குளிர், நீண்ட மலைப்பாதைகள் மற்றும் திடீரென மாறக்கூடிய வானிலை ஆகியவை பக்தர்களுக்குச் சவாலாக இருக்கக்கூடும்.
குறிப்பாக வயதானவர்கள் உயரமான பகுதிகளில் பயணம் செய்யும்போது மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பயணத்தை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் மருத்துவ உதவி, அவசரக்கால போக்குவரத்து மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது.
நேபாளம் சென்றால் கைலாயம் சென்றதாக அர்த்தமா?
இரண்டுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். நேபாளம் ஒரு முக்கியமான ஆன்மிக மற்றும் யாத்திரைத் தளம். ஆனால், கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி திபெத்தில் அமைந்துள்ளன.
நேபாளம் வழியாகக் கைலாயம் - மானசரோவர் செல்லும் முக்கியமான பாதைகளில் ஒன்று இருப்பதாலேயே இரண்டும் ஒரே பயணத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றன.
இதன் காரணமாக காத்மாண்டு, நேபாள்குஞ்ச் மற்றும் ஹில்சா போன்ற பகுதிகள் கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் முக்கியமான போக்குவரத்து மற்றும் தங்குமிட மையங்களாக உள்ளன.
பயண ஏற்பாடுகளில் சுற்றுலா நிறுவனங்களின் பங்கு என்ன?
தமிழகத்திலிருந்து நேபாளம் மற்றும் முக்திநாத் யாத்திரைக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்கள், பயணத்திற்கு முன்பாக பல்வேறு விதிமுறைகளைப் பயணிகளிடம் தெரிவிக்கின்றன.
செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். பயணத்திற்கான முன்பதிவு பொதுவாக முன்பணம் செலுத்தியே மேற்கொள்ளப்படுகிறது.
பயணம் ரத்து செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டணம் திரும்ப வழங்கப்படும். அதே நேரத்தில் நிலச்சரிவு, கனமழை, சாலைத் தடுப்பு, அரசியல் போராட்டம் போன்ற எதிர்பாராத காரணங்களால் ஏற்படும் கூடுதல் செலவுகள் பயணிகளையே சாரும் என சில நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பயணக் காப்பீடு, மருத்துவ அவசர உதவி மற்றும் ஹெலிகாப்டர் மீட்பு போன்ற வசதிகள் பயணக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும் பயணிகள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மலைப்பகுதிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால், தங்களது உடல்நிலைக்கு ஏற்றவாறு பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மிகப் பயணம் மட்டுமே திட்டமல்ல?
சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் மகாதேவ் கைலாஷ் யாத்திரை நிறுவனத்தின் உரிமையாளர் மாரவேலன் நாகப்பனை நேரில் சந்தித்துப் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு ஆன்மிக மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல மே மாதம் முதல் செப்டம்பர், அக்டோபர் வரையிலான காலகட்டம் பொதுவாக ஏற்றதாக இருக்கும்.
இந்த காலத்தில் நேபாளத்தில் வழக்கமாக லேசான மழை மட்டுமே இருக்கும் என்பதால், அந்தப் பருவத்தை யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்ற காலமாகக் கருதி ஆண்டுதோறும் பயணங்களைத் திட்டமிடுகிறோம்.
தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 5 முறை பயணிகளை நேபாளம் மற்றும் கைலாஷ் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கைலாஷ் யாத்திரை முதன்மையாக ஆன்மிகப் பயணமாக இருந்தாலும், பயணிகள் வழியில் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்க்கும் வகையில் பயணத் திட்டம் அமைக்கப்படுகிறது.
நேபாளம், சீனா எல்லைப் பகுதி, காத்மாண்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களைப் பயணிகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆன்மிகத் தலங்களை மட்டும் மையமாகக் கொண்டு பயணத் திட்டம் அமைக்காமல், நேபாளத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் பயணிகள் காணும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முழுப் பயணத்திற்கும் ஒருவருக்கு சுமார் ரூ. 2.20 லட்சம் வரை தொகுப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து புறப்பட்டு நேபாளம் மற்றும் கைலாஷ் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்ட பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பும் வகையில் மொத்தம் 14 நாள்களுக்கான பயணமாக இது திட்டமிடப்படுகிறது.
ஆன்மிக நம்பிக்கையுடன் இயற்கை சவால்களும்...
நேபாளத்தின் பயணம் ஒருபுறம் பக்தியையும் ஆன்மிகத் தேடலையும் பிரதிபலிக்கிறது. மறுபுறம், இமயமலையின் கடினமான இயற்கைச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
பசுபதிநாதர் முதல் முக்திநாத் வரை, காத்மாண்டு முதல் ஹில்சா வரை, கைலாயம் முதல் மானசரோவர் வரை, இந்தப் பாதை பலருக்குச் சாதாரண சுற்றுலா அல்ல. வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற ஆன்மிக விருப்பத்தின் வெளிப்பாடாகவே இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. ஆனால் இயற்கையின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்தப் பயணமும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக மழைக்காலங்களில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலைத் துண்டிப்பு போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்மிக நம்பிக்கையுடன் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் இணைத்துக்கொண்டால்தான் இந்தப் பயணம் பாதுகாப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமையும்.
சிவபெருமானுடன் தொடர்புடைய பசுபதிநாதர் கோயில், சக்தி வழிபாட்டுத் தலங்கள், விஷ்ணுவுடன் தொடர்புடைய முக்திநாத், சீதையுடன் தொடர்புடைய ஜனக்பூர், இமயமலையின் இயற்கை அழகு மற்றும் கைலாய–மானசரோவர் யாத்திரைக்கான முக்கிய அணுகுமுறைகளில் ஒன்றாக இருப்பது ஆகியவை நேபாளத்தை இந்து பக்தர்கள் அதிகம் நாடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
நேபாளம் ஆன்மிகத்தின் வாசல்... கைலாயம் - மானசரோவர் அந்த ஆன்மிகப் பயணத்தின் உச்சங்களில் ஒன்று. இமயமலையின் மடியில் விரிந்திருக்கும் இந்தப் புனிதப் பாதை, மனிதனின் பக்தியையும் இயற்கையின் பேராற்றலையும் ஒருசேர உணர்த்தும் தனித்துவமான பயணமாகத் தொடர்ந்து விளங்குகிறது.
This article discusses why one should undertake spiritual journeys to Nepal, despite the natural disasters...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


குடியரசு துணைத் தலைவா் இன்று முதல் தென் மாநிலங்களில் அரசுமுறை பயணம்: ஈரோடு, பெங்களூரு, கொச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு




