உணவுத் திருவிழாவாகிறதா, ரமலான் நோன்பு?
ரமலான் நோன்பு துறப்பின்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் மாறி வருவது குறித்து...


வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு உணவு, ஒரு பங்கு நீர், ஒரு பங்கு மூச்சுவிடக் காலியாக இருக்க வேண்டும் என உணவு எடுத்துக்கொள்ளும் முறை குறித்து கூறியுள்ளார் நபிகள் நாயகம். இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.
பசியை உணர்ந்து இறைவனை நெருங்கும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு, தற்போது உணவுத் திருவிழாவாக மாறிவிட்டதோ எனக் கருதத் தோன்றுகிறது. நபிகள் நாயகம் கூறிய உணவு எடுத்துக்கொள்ளும் முறை மாறி, உணவு விருந்தாகவே நோன்பு துறத்தல் மாறியுள்ளது. இது குறித்தும் இதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்று இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை. ரமலானின் முக்கிய அம்சமாக உள்ளது நோன்பு கடைப்பிடிப்பது. இது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.
பசியை உணர்ந்து, பசியிலும் ஒழுக்கத்தைப் பின்பற்றி இறைவனை நெருங்குவதற்காக ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் பசியுடன் நோன்பு இருப்பதால், உணவு கிடைக்காமல் வறுமையில் இருப்பவனின் பசியை நோன்பு இருப்பவனால் உணர முடியும். இறைவனின் மீதான அச்சமும் பசியுடன் இருப்பவன் மீதான இரக்கமும் மனிதத்தை வாழச் செய்யும் வழியாகப் பார்க்கப்படுகிறது.
பசித்தவனுக்கு உணவு அளிப்பது இறைவனை நம்புவதற்கு அடுத்தபடியான நற்செயலாக இஸ்லாமில் நம்பப்படுகிறது. இதனால், ரமலான் மாதத்தில் நாள் முழுவதும் நோன்பு இருந்து அதன் பிறகு நோன்பு துறக்கப்படுகிறது.
ரமலான் மாத இறுதியில், அதாவது ரமலான் நாளில் (பெருநாள்), உணவு சமைத்துப் பாகுபாடின்றி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. இதுவே ரமலான் சிறப்பு.
ரமலான் நோன்பு என்பது நாள் முழுவதும் 14 மணி நேரம் வரை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது. நோன்புக்கு முன்பு, அதிகாலை 4 மணிக்கு சஹர் என்ற பெயரில் உணவு எடுத்துக்கொள்வர். இது வீட்டில் வழக்கமாக சமைக்கும் உணவு. சஹர் என்பது நோன்புக்கு முன்பு உடலை தயார்ப்படுத்த எடுத்துக்கொள்ளும் உணவு.
பின்னர் பகல் பொழுது முழுக்க உணவு, நீர் அருந்தாமல் மாலையில் இஃப்தார் என்ற பெயரில் உணவு எடுத்துக்கொள்ளப்படும். இது பெரும்பாலும் மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களில் அளிக்கப்படும். சிலர் வீடுகளிலும் எடுத்துக்கொள்வார்கள்.
இவ்வாறு நோன்பு நாள்களில் சஹர், இஃப்தார் என இரு வேளைகளில் உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில் நோன்பின் நோக்கம் சிதையாமல் இருந்தது.
பசியை உணர்ந்து, இறைவனை நினைத்து சுய கட்டுப்பாட்டை வளர்த்த நோன்பு, தற்போது நோன்பு துறத்தல் என்ற பெயரில் உணவுத் திருவிழாவாகவே மாறியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாள் முழுவதும் பசியைத் தாங்கி இருப்பதற்காக அளவாக எடுத்துக்கொள்ளப்படும் சஹர் உணவை, பல்வேறு உணவகங்கள் தற்போது பொட்டலம் கட்டி விற்கத் தொடங்கியுள்ளன. அதிகாலையிலேயே டெலிவரியும் செய்கின்றன.
இதற்கு ஒரு படி மேலே, இஃப்தார் உணவானது தற்போது 'இஃப்தார் ஸ்நாக்ஸ்' என்ற பெயரில் பல்வேறு உணவகங்களிலும் சாலையோரக் கடைகளிலும் விற்பனையாகின்றன.
பண்டிகை காலத்தையொட்டி சாலையோரக் கடைகள் அதிகரிப்பதையும் சிறு வியாபாரிகள் லாபம் ஈட்டுவதையும் தவிர்க்க முடியாது. இதைத் தவறாகவும் கூற முடியாது. ஆனால், இஃப்தார் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நொறுக்குத் தீனிகளும், கட்லட் உள்ளிட்ட உணவுகளும் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை என்பதே வருத்தம்.
நோன்பு துறக்கும்போது பேரீச்சை, நோன்புக் கஞ்சி, பழங்கள், பழரசம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. மிஞ்சிபோனால் வடை இருக்கும். ஆனால், தற்போது பல பெயர்களில் எண்ணெய்யில் பொரித்த பலகாரங்களுடனும், வகை வகையான நிற குளிர்பானங்களுடனுமே நோன்பு துறக்கப்படுகிறது.
சிக்கன் கேண்டி, சிக்கன் கட்லட், பீட்சா, எண்ணெய்யில் பொரித்த ஐஸ்கிரீம், எண்ணெய்யில் பொரித்த நூடுல்ஸ், இறால் பாப்கார்ன் எனப் புதிய புதிய பெயர்களில் விற்கப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றவையாகவே இருக்கின்றன.
நாள் முழுவதும் நீர் கூட அருந்தாமல் நோன்பு இருந்துவிட்டு நோன்பு துறக்கும்போது, இத்தகைய உணவுகளை உண்ண நேரும்போது உடல்நலக் கோளாறு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
நோன்பு துறக்கும்போது முதல் வாய் உணவு மிகவும் ருசியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பழரசம், பேரீட்சை வைக்கப்படுகிறது. இஃப்தார் ஸ்நாக்ஸ் கடைகளால் நோன்பு துறக்கும் வழிமுறையும் சீரழிகிறது.
பசியில் இருந்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ளும்போது உணவின் அருமையையும் பசியின் தன்மையையும் உள்ளூர உணர வேண்டும். ஆனால், தற்போது இஃப்தார் உணவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, உடல் சோர்வு போன்றவற்றுக்கே வழிவகுக்கும்.
ஆரோக்கியம், சுவை பற்றிய கவலையின்றி நுகர்வு கலாசாரத்தில் சிக்கியுள்ள இளம் தலைமுறையினர் பலர், சமூக வலைதள விடியோக்களை நம்பி, விடியோக்களில் கூறுபவர்கள் பரிந்துரைக்கும் கடைகளுக்குச் சென்று உணவு ஆர்டர் செய்து புகைப்படம் எடுத்துப் பதிவிட வேண்டியது புதிய சடங்காக மாறியுள்ளது.
இதில், மனிதாபிமானத்தை வளர்க்கும் நோக்கம் சிதைந்து, மக்களைப் புதிய உணவுகளைத் தேடத் தூண்டுகிறது.
புதிய உணவுகளையும் புதிய கடைகளையும் அறிமுகம் செய்வதில் தவறில்லை. உணவு வகைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் விடியோ பதிவேற்றம் செய்பவர்கள், உணவை அதீதமாக விளம்பரப்படுத்தி இளைஞர்களை, குறிப்பாக நோன்பு இருப்பவர்களை திசை திருப்பாமல், குறைந்தபட்ச பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
பார்வையாளர்களைக் கவர்வதற்காக வகை வகையான நிறங்களில் உணவுகளை விற்பனை செய்பவர்கள், இஃப்தார் ஸ்நாக்ஸ் என்ற பலகையை வைக்காமலாவது அவற்றை விற்பனை செய்யலாம். நோன்பு இருப்பவர்களின் நோக்கத்தை இவை அவமதிக்கின்றன என்பதை இவர்கள் உணர வேண்டும்.
ரமலான் மாதத்தில் ஒரு நன்மை செய்தால் அது நூறு நன்மை செய்த பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் என்றாலே செலவு மாதம்தான். புதுத்துணி, ஈகை உணவு என வீட்டிற்கும் சமூகத்திற்கும் செலவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து ஒன்றரை மாதத்தில் பக்ரீத் பண்டிகை. அதுவும் செலவு இழுக்கும் பண்டிகை. ஆகையால், கடைகளில் விற்பனை செய்யப்படும் பல பலகாரங்களை அன்றாடம் வாங்கி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களால் நோன்பு துறக்க முடியாது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இஃப்தார் ஸ்நாக்ஸ் விரும்பிகள் பலரும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களே.
உடலையும் மனதையும் சீராக்க வந்த இந்த மாதம், மருத்துவமனைக்குச் செல்லும் மாதமாகிவிடக் கூடாது. நோன்புக் கஞ்சி, பழங்கள், தண்ணீர் என எளிமையான முறையில் நோன்பு துறப்பதே இறைவனை அடையும் உன்னத நோக்கத்தின் வழி என்பதை நோன்பு இருக்கும் சகோதரர்கள் உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
ரமலான் மாதம் வயிற்றுக்கு உணவிடுவதுடன் நின்றுவிடாமல், உண்மையான இறையச்சத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் மாதமாக அமையட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...