பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?
பெரியார் அறிவுலகத்துக்குப் பெருமளவில் அதிக விலை கொடுத்து குப்பையான நூல்கள் வாங்கப்பட்டதில் ஊழல் பற்றி...

பெரியார் அறிவுலக ஊழல் - Dinamani
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு நம்ப முடியாத அதிக விலையில் குப்பையான நூல்கள் வாங்கப்பட்டிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, எங்கே நடந்தது ஊழல், எப்படி, எந்த காலகட்டத்தில் நடந்தது ஊழல் எனப் பெரும் பரபரப்பு நேரிட்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த அக். 16 அன்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்
‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியிட்ட 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், அகல்விளக்கு என்ற பெயரில் பதிப்பகம் இருப்பதாக தெரியவில்லை.
அகல்விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை ரூ. 1,445. அந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும் பலமடங்கு அதிக விலையில்தான் இருக்கின்றன. பிற பதிப்பகங்கள் இதே பக்கங்களை கொண்ட நூல்களை ரூ. 350-க்குதான் விற்கிறார்கள்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில், தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படிதான் இருக்கின்றன. அந்த நூல்களின் எழுத்தாளர்கள் பெயர்கள் ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதி லட்சுமி, விஜய ஆதித்தன், திரிஷா விஜய்...
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் தவறான தகவல்களுடன் நூற்றுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன், ”அகல்விளக்கு என்ற பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே புத்தகங்களை வாங்கியுள்ளனர். இந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் கண்டனம்
முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில்,
“பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி” என்று குறிப்பிட்டிருந்தார்.
நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்?
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய பரிந்துரை குழு அமைத்து கடந்த நவ. 5, 2025 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இணையவழியில் கூட்டத்தில் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற 112 உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்களை பரிந்துரை செய்யதுள்ளனர். இதில், நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனும் இடம்பெற்றிருந்தார்.
இதன் பின்னர், ஜன. 9, 2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை ஆய்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான இறுதிப் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை, விலை நிர்ணயம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 2, 2026 அன்று நூல்களுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் என்ன சொல்கிறார்?
இந்த பரிந்துரை குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வுப் பிரிவில் பெருமாள் முருகனும் தமிழ்ச்செல்வனும் இடம் பெற்றிருந்தனர்.
இதுபற்றி அறியக் கேட்டபோது, ‘தினமணி.காம்’ இணையதளத்துடன் பேசிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பரிந்துரைக் குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வுப் பிரிவில் தாம் பங்குபெற்றிருந்ததாகத் தெரிவித்தார்.
“பரிந்துரைக் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர், அனேகமாக ஒரே ஒரு முறை கூட்டம் நடைபெற்றது. பின்னர், நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டு மின்னஞ்சல் வந்தது. எல்லாமே ஆன்லைனில்தான்.
“புத்தகங்களின் தலைப்பு, எழுத்தாளர் பெயர், பரிந்துரைப்பதற்கான காரணம் என்பன போன்ற விவரங்களை எக்ஸெல் போன்ற படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும். குழந்தைகள் பிரிவில் அவர்களே புத்தகங்களின் பட்டியலை அனுப்பி, பரிந்துரைக்கக் கேட்டிருந்தனர்.
“பரிந்துரைப் பட்டியலை அனுப்பியதுடன் பணி முடிந்தது. இரு மாதங்களுக்குப் பிறகு மதிப்பூதியமாக. ரூ. 2 ஆயிரம் அனுப்பிவைத்தனர்.
“அத்துடன் பரிந்துரைத்ததுடன் குழுவில் இடம் பெற்றிருப்போரின் வேலை முடிந்தது. பரிந்துரைத்த புத்தகங்களை வாங்கினார்களா? என்ன வாங்கினார்கள் என்பது பற்றியெல்லாம் பரிந்துரைந்தவர்களுக்கே தெரியாது” என்று குறிப்பிட்டார் ச. தமிழ்ச்செல்வன்.
நூல்கள் வாங்கியது எப்போது? திமுகவா, தவெகவா?
பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது என்று ஆளும் தவெகவும், குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய புத்தகங்கள் மட்டும் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கொள்முதல் செய்யப்பட்டதாக திமுகவும் மாறிமாறி இணையவெளியிலும் அறிக்கைகளாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
உதாரணமாக, பெரியார் அறிவுலகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட பெரும்பாலான புத்தகங்களில் மார்ச் 4, 2026 என்று சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய அகல்விளக்கு மற்றும் பினீக்ஸ் ஆகிய இரு பதிப்பகங்களில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் ஜூன் 22, 2026 (முதல்வர் விஜய் பிறந்த நாள்) என்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் மாறிமாறி இரு தரப்பினரும் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

ரொம்ப சிம்பிள், தொடர்புடைய கோப்புகளை வெளியிட்டாலே போதும்!
பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக எழும் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலே போதும், ஊழல் எங்கே நடந்தது என்பதையும் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதையும் எளிதில் கண்டறிந்துவிட முடியும்.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்ன? அதிலிருந்து அரசு இறுதி செய்த புத்தகங்கள் என்னென்ன?
எத்தனை கொள்முதல் ஆணைகள் (Purchase order) பிறப்பிக்கப்பட்டன? ஒவ்வொரு கொள்முதல் ஆணையிலும் எந்தெந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன?
தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புத்தகங்கள் எவை? அவை என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் எந்தக் கொள்முதல் ஆணையில் இடம் பெற்றன? எந்த தேதியில் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டது?
சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான தொகை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது?
இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்கள் யார், யார்? எந்த முகவரியிலிருந்து இயங்குகின்றன?
இவை ஒவ்வொன்றும் எந்தெந்தத் தேதிகளில் நடைபெற்றது?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில்களை அறிந்துகொள்ள விசாரணைக் குழுவெல்லாம் தேவையில்லை. அரசின் - நூலகத் துறையின் கைவசமுள்ள கோப்புகளை பொதுவெளியில் மக்கள் அறிய வெளிட்டாலே போதும்! அரசும் அமைச்சரும் செய்ய வேண்டியது அவ்வளவு மட்டுமே! செய்வார்களா?
Summary
Periyar Arivulagam Corruption - Who granted approval for the purchase of the books? From which account was the payment made?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


