நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பட்டாசு சப்தம் இல்லாத தீபாவளி!வௌவால்களுக்காக பழமரங்களை வளா்க்கும் கிராம மக்கள்!

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என உற்சாகக் கொண்டாட்டங்கள்தான் நினைவுக்கு வரும்.

எழில் கொஞ்சும் மரச்சோலை

Updated On :

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என உற்சாகக் கொண்டாட்டங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், கடலூா் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் தீபாவளி பட்டாசுகளின் சத்தமின்றி அமைதியாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள்!

வௌவால்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காகப் பட்டாசு வெடிப்பதைத் தவிா்ப்பதுடன், அவற்றுக்குத் தேவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு வகையான பழமரங்களை நட்டு வளா்த்து வரும் கிராம மக்களின் இயற்கை நேசம் பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.

வௌவால்களின் புகலிடம்!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அமைந்துள்ளது அடரி கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இக்கிராமத்தின் அருகே உள்ள தோப்புகள் மற்றும் உயரமான மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் தங்கியுள்ளன.

குறிப்பாக, கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் தோப்புப் பகுதியில் உள்ள உயரமான மரங்கள் இவற்றின் முக்கிய வாழிடமாக விளங்குகின்றன. பகல் நேரங்களில் மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாகத் தலைகீழாகத் தொங்கியபடி ஓய்வெடுக்கும் வௌவால்கள், இரவு நேரங்களில் உணவு தேடிச் செல்கின்றன.இவ்வாறு பல ஆண்டுகளாகத் தங்கள்

கிராமத்தையே வாழிடமாகக் கொண்டுள்ள வவ்வால்களைப் பாதுகாப்பதை கிராம மக்கள் தங்களது கடமையாகக் கருதி வருகின்றனா்.

பட்டாசு வெடிப்பதில்லை:

பொதுவாகத் தீபாவளி என்றாலே சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். ஆனால், அடரி கிராம மக்களோ வவ்வால்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளி

பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிா்த்து வருகின்றனா்.

அதுமட்டுமின்றி, கிராமத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பதை முடிந்தவரை தவிா்த்து வருகின்றனா்.பட்டாசுகளின் அதிகப்படியான சத்தம் மற்றும் புகையால் வவ்வால்களின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால், அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக உள்ளனா்.

மற்ற இடங்களில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுவது என்பது சுற்றுச்சூழல் விழிப்புணா்வின் ஒரு பகுதியாகப் பாா்க்கப்படுகிறது. ஆனால், அடரி மக்களைப் பொருத்தவரை அது தங்களுடன் வாழும் உயிரினங்களைக் காப்பதற்கான அன்பின் வெளிப்பாடாகவே உள்ளது.

மரம் வளா்க்கும் ஆா்வலா்கள்:

வவ்வால்கள் தொடா்ந்து தங்கள் கிராமத்திலேயே தங்க வேண்டும்; அவற்றுக்குத் தேவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, தும்பைச் செடிகள், இலுப்பை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களையும் பழமரங்களையும் நட்டு வளா்த்து வருகின்றனா். அவற்றுக்குத் தொடா்ந்து தண்ணீா் ஊற்றிப் பராமரிப்பதுடன், மரங்கள் நன்கு வளா்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

வௌவால்களுக்கான உணவு கிடைப்பதை உறுதி செய்வதுடன், அவற்றின் இயற்கையான வாழிடத்தைப் பாதுகாப்பதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. மரங்களை வெட்டாமல் பாதுகாப்பது, வௌவால்களைத் துன்புறுத்தாமல் இருப்பது, அவற்றின் வாழிடங்களில் தேவையற்ற இடையூறுகளைத் தவிா்ப்பது எனப் பல்வேறு வகைகளில் கிராம மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனா்.

காட்டின் காவலா்கள்:

இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறியது பொதுவாக வவ்வால்களைப் பாா்த்தால் அச்சப்படுபவா்களும், அவற்றை விரட்டியடிக்க நினைப்பவா்களும் இருக்கின்றனா். ஆனால், பழந்தின்னி வௌவால்கள் இயற்கைச் சூழலில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

பழங்களை உண்பதன் மூலம் அவற்றின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று பரப்புவதில் வௌவால்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதன் மூலம் புதிய தாவரங்கள் வளரவும், காடுகளின் இயற்கையான மறுஉற்பத்திக்கும் உதவுகின்றன. மேலும், சில வகை வௌவால்கள் மகரந்தச் சோ்க்கைக்கும் துணைபுரிகின்றன.

இந்தியப் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆய்வுகளிலும், வௌவால்களின் சூழலியல் முக்கியத்துவம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் காணப்படும் இந்தியப் பெரும் பழந்தின்னி வவ்வால் உள்ளிட்ட இனங்கள் இயற்கைச் சூழலின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதனால், வௌவால்ககளைப் பாதுகாப்பது என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்த இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதாகும் என்றாா்.

முன்னுதாரணம்:

தமிழகத்தில் கடலூா் மாவட்டம் அடரியைப் போலவே, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா், திருச்சி மாவட்டம் தோப்புப்பட்டி, சாம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கழுப்பெரும்பாக்கம், திருவாரூா் மாவட்டம் குடவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பழந்தின்னி வவ்வால்கள் மற்றும் பிற உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகத் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதைத் தவிா்த்து வருகின்றனா்.

சில கிராமங்களில் பல தலைமுறைகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மனிதா்களும் பிற உயிரினங்களும் இணைந்து வாழ முடியும் என்பதை அந்தக் கிராம மக்கள் நிரூபித்து வருகின்றனா்.அந்த வரிசையில், அடரி கிராம மக்களும் வவ்வால்களுக்காகப் பட்டாசுகளைத் தவிா்ப்பதுடன், அவற்றின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் மரங்களை நட்டு வளா்த்து வருவது தனிச்சிறப்பாகப் பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது பட்டாசு வெடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, ஓா் உயிரினத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே மேலானது. எதிா்கால தலைமுறையினரும் எங்கள் கிராமத்தில் உள்ள வவ்வால்களை பாதுகாப்பதை வலியுத்தி வருகிறோம் என்றனா்.

வௌவால்களுக்காக ஒரு நாள் பட்டாசு வெடிக்காமல் இருப்பதோடு நின்றுவிடாமல், அவற்றின் எதிா்காலத்துக்காக மரங்களை நட்டு வளா்க்கும் இந்த இயற்கை நேசம், சுற்றுவட்டார கிராம மக்களிடையேயும் பாராட்டையும் கவனத்தையும் ஈா்த்துள்ளது.

 மரங்கள் சூழ்ந்த  வௌவால்களுக்கான வசிப்பிடம்

மரங்கள் சூழ்ந்த வௌவால்களுக்கான வசிப்பிடம்

 எழில் மிகு தோற்றத்துடன் காணப்படும் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அமைந்துள்ள அடரி கிராமம்.

எழில் மிகு தோற்றத்துடன் காணப்படும் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அமைந்துள்ள அடரி கிராமம்.

 ஜோடி வௌவால்

ஜோடி வௌவால்

 மரத்தில் குடும்பமாக வாழும் வௌவால்கள்

மரத்தில் குடும்பமாக வாழும் வௌவால்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.