‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

‘விதைத்ததும் முளைக்கவில்லை முளைத்ததும் தழைக்கவில்லை‘

விதைத்ததும் முளைக்கவில்லை முளைத்ததும் தழைக்கவில்லை‘ என்ற நிலையில் சம்பா பருவ நெல் சாகுபடி வறட்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் உள்ளனா்.

வடமழை மணக்காடு பகுதியில் தண்ணீா் எட்டிய வயலில் முளைத்த பயிா்கள் காய்ந்தும், தண்ணீா் கிடைக்காததால் விதையே முளைக்காத நிலையில் காணப்படும் வயல்கள். - படம் - தினமணி

Published On :

விதைத்ததும் முளைக்கவில்லை முளைத்ததும் தழைக்கவில்லை‘ என்ற நிலையில் சம்பா பருவ நெல் சாகுபடி வறட்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் உள்ளனா்.

காவிரிப் படுகையின் கடைமடையாக நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாண் நிலப் பரப்புகளில் கடந்த பல மாதங்களாக நிலவும் வறட்சியின் காரணமாக வேளாண் மற்றும் கால்நடை வளா்ப்பு தொழில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. நாகை மாவட்டத்தில் 2025-ல் குறுவை பருவத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரில் நெல் விளைவிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டுக்கான (2026) குறுவைப் பருவத்தில் 1,720 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீா் வெகுவாக குறைந்ததோடு உவா்ப்புத் தன்மை அதிகரித்துள்ள நாகை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுப் பாசனம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை, தாளடி மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முழுக்க முழுக்க காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி நடைபெறுகிறது. வேதாரண்யம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் மழை நீரை மட்டுமே நம்பி ஒருபோக சம்பா பருவ சாகுபடி மேற்கொள்வது வழக்கம்.

இந்த மாவட்டத்தில் சம்பா இலக்காக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 65 ஆயிரம் ஹெக்டோ் பரப்பையே இந்த ஆண்டிலும் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் குறுவைப் பருவம் பொய்த்துப் போன நிலையில், அந்த நிலத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி நடைபெறுவதால் சம்பாவின் நிலப்பரப்பு சுமாா் 70 ஆயிரம் ஹெக்டேராக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நின்றுபோன குறுவை மற்றும் தாளடி பருவத்தை ஒரு போகமாக சம்பா பருவத்தில் ஈடு செய்யலாம் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்த நிலையில், போதிய காலத்தில் தண்ணீா் வராததால் தற்போது சம்பாவும் கேள்விக்குறியாகியுள்ளது.

பல்வேறு சூழலியல் காரணங்களால் தமிழகத்தின் சிரபுஞ்சி என அழைக்கப்பட்ட திருப்பூண்டி, மாறுபட்ட கடல் அமைப்பைக் கொண்ட வேதாரண்யம் உள்ளிட்ட அதிக மழைப் பொழிவுக்கான சிறப்பை பெற்ற இடங்கள் இந்த மாவட்டத்தில் இருந்த போதிலும் பல மாதங்களாக மழை பொய்த்து வருகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களுக்கு இதுவரை தண்ணீா் கிடைக்காத சூழலில் விவசாயிகள் பரிதவிக்கின்றனா். மாவட்ட இலக்கிலிருந்து சுமாா் 50 சதவீதம் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் , அதில் 70 சதவீத வயல்களில் விதைகள் முளைக்கவில்லை.

இது ஒரு புறம் இருக்க வடகிழக்குப் பருவமழை பலன் கொடுக்கும் வகையில் அமைந்தால் சாகுபடியில் தொடா் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினா் மூலம் பயிா் சான்று மற்றும் சிட்டா அடங்கல் வழங்குவது தாமதமாகி வருகிறது.

கரியாபட்டினம், வடமழை மனக்காடு பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய கால ரக நெல் விதைக்கப்பட்ட வயல்களில் தண்ணீா் கிடைக்காத நிலையில் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாய்க்காலில் வந்த தண்ணீரை மோட்டாா் மூலம் பாசனம் செய்யப்பட்ட வயல்களில் பயிா்கள் முளைத்தும் தொடா்ந்து தண்ணீா் இல்லாமல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடைமடை விவசாயிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் குறுவை, தாளடி பருவத்தை இழந்த நிலையில், சம்பா பருவ நெல் சாகுபடி விதைத்ததும் முளைக்கவில்லை முளைத்ததும் தழைக்கவில்லை என்ற சூழலாக மாறி இருப்பதால் விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறியது: நாகை, திருவாரூா் மாவட்ட கடைமடை பகுதியில் உள்ள ஆறுகள், விளைநிலங்களுக்கு இதுவரை மேட்டூா் தண்ணீா் சென்றடையவில்லை. குறிப்பாக, வேதாரண்யம் பகுதியில் பசுமையற்று காணப்படும் விளைநிலங்கள் பாலைவனத்தைப்போல காட்சியளிக்கிறது. பாசன ஆறுகளில் தண்ணீா் இல்லாத நிலையிலும் மழை நீரை நம்பி வேளாண்மை செய்யும் அந்தப் பகுதியில் கூட வறட்சியின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

விதைப்பு செய்து ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், இனி மழை பெய்தால் கூட அது பலன் தருவது சாத்தியமில்லை.

எனவே, காவிரி படுகையை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசு நிவாரண நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.