சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சம்பா நெற்பயிா்க் காப்பீட்டுக்கான காலவரம்பை வரும் டிச. 1-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரதிப் படம்
சம்பா நெற்பயிா்க் காப்பீட்டுக்கான காலவரம்பை வரும் டிச. 1-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட காலவரம்புக்குள் சம்பா பருவ நெற்பயிரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எல் -நினோ தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் முக்கிய அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூா் அணையில் போதுமான நீா் வரத்து இருந்ததால், செப். 1-ஆம் தேதி முதல் சம்பா நெல் சாகுபடிக்கு முதல்வரால் மேட்டூா் அணை திறக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை அக். 15-ஆம் தேதி முதல் பரவலாக பெய்து வருவதால், இயல்பாக ஆகஸ்ட் 2-ஆம் வாரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் செப்டம்பா் இறுதியிலிருந்து தான் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய பயிா்க் காப்பீட்டு வலைதளத்திலும் விவசாயிகள் உரிய காலத்துக்குள் எளிதாக காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா நெற்பயிா் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு 2026-2027 சம்பா பருவ காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடா் முயற்சியால் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வரும் டிச. 1 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆகையால், அரியலூா், செங்கல்பட்டு, கடலூா், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், தேனி, திருச்சி, திருப்பத்தூா், திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், வேலூா் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டிச. 1-ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

