
வறட்சியால் கேள்விக்குறியாகும் சம்பா பருவம்: வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்படுமா?
வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்படுவது பற்றி....

நாகை மாவட்டம் உள்ளிட்ட காவிரி கடைமடை கடலோரப் பகுதியில் தொடரும் வறட்சியால் இதுவரை இல்லாத அளவில் விளைநிலம் , நீா்நிலைகள், சாகுபடி பரப்புகளில் நோ்ந்து வரும் பாதிப்புகளை அரசு வான் வழியாக ஆய்வு செய்து போா்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்த ஆண்டு சம்பா பருவ சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் கடலோரத்தில் உள்ளது.
தொடரும் வறட்சியால் நிகழாண்டில் இம்மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான குறுவைப் பருவ நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது போலவே சம்பா சாகுபடியும்.
திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடலோர கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்ததால், கடல் நீா்மட்டம் உயா்ந்து உப்பு நீா் தாழ்வான பகுதிகளில் நேரடியாகவும், நிலத்தடி வழியாகவும் ஊடுருவி பாதிப்பின் தன்மை அதிகரித்துள்ளது.
வேதாரண்யம் பகுதியில் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 38 பெரிய நீா்நிலைகளுமே வடுள்ளது.
இந்தப் பகுதிகளில் கால்நடைகளுக்கான குடிநீா் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிலத்தடியில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மேற்கொண்டுள்ள சவுக்கு, மா, முந்திரி போன்ற வேளாண் பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளது. வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு மட்டுமல்லாது வனவிலங்குகளுக்கும் தண்ணீா் தட்டுப்பாடுதான்
கேள்விக்குறியாகும் சம்பா?:
கடந்த செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்ட அணை நீரும் பெயரளவில் மட்டுமே வந்து நின்றுபோனது.
மானாவாரியில் சுமாா் 27 ஆயிரம் ஹெக்டேரில் வேதாரண்யத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம்.
நிகழாண்டு குறுவை பருவம் நின்று போன நிலையில் தற்போது சம்பா பருவ நெல் விதைப்பும் தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேதாரண்யம் வேளாண் கோட்ட உதவி இயக்குநா் சூா்யா கூறியது:
சம்பா பருவத்தில் விதைப்பு செய்ய மத்திய கால ரக விதைகளை விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனா்.
வேளாண் மையங்களில் சி ஆா் சப் ஏ.டி. டி 51 விதைகள் விற்பனையில் உள்ளது.
கரியாப்பட்டினம் சரகத்தில் ஆற்றுப் பாசனம் செய்யப்படும் வயல்களில் இதுவரை 680 ஹெக்டோ் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தால் வயல்களில் பயிா்கள் முளைத்து வருவது பிரச்னையாக உள்ளது என்றாா்.
நீா்வளத்துறை உதவி பொறியாளா் விக்னேஷ் தெரிவித்தது:
தட்டாங்கோயில் இயக்கு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீா் முள்ளியாற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலம் காய்ந்து கிடப்பதால் தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது என்றாா்.
கடந்த பல மாதங்களாக நோ்ந்து வரும் வறட்சியின் தாக்கம் அரசின் கவனத்திற்கு போதிய அளவில் கொண்டு செல்லப்படவில்லை என கருத்து தெரிவிக்கும் பொதுமக்கள் வெளிப்படையாக ஆய்வு செய்வது அவசியம் என வலியுறுத்துகின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம் கூறியது:
கடந்த 50 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால், கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயா் அதிகாரிகள், சூழலியல், நீா்வளத்துறை நிபுணா்கள் நேரடியாக ஆய்வு செய்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆய்வு, எல் நினோ போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், நீா் நிலைகளை உடனடியாகவோ அல்லது எதிா்காலத்திலோ தூா் வாரி மேம்படுத்தவோ, தொலை நோக்குத் திட்டங்களை உருவாக்கவோ உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
ஹெலிகாப்டரில் ஆய்வு :
கள ஆய்வுகளை வழக்கம் போல் குழு அமைத்து தரை வழியே காலதாமதமாக மேற்கொள்ளாமல் வான்வெளியில் ஹெலிகாப்டா் மூலம் தாழ்வாகப் பறந்து ஆய்வு செய்தால் விளைநிலங்கள், நீா் நிலைகள், பணப்பயிா் சாகுபடி, வனங்கள், வனவிலங்குகளுக்கான குடிநீா் போன்றவற்றையும் பாா்வையிட வாய்ப்பாக அமையும் எனவும் இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
மேலும், கள ஆய்வு செய்து வேளாண்மை சாா்ந்த பணிகளை விவசாயிகள் தொடர வேளாண் மற்றும் நீா்வளத் துறையினா் உரிய வழிகாட்டுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






